யாரிடமும் பகைமை கொள்ளலாமா?
ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருந்த ஆசிரியர் மாணவர்களிடம், “உங்களுக்கு யார் மீதாவது மன்னிக்க முடியாத கோபம் இருக்கிறதா? நீங்கள் யாராவது வாய்ப்பு வந்தால் யாரையேனும் பழி வாங்க வேண்டுமெனத் துடிக்கிறீர்களா?” என்று கேட்டார்.
வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “ஆமாம்… அய்யா” என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு.
ஒவ்வொருவராக அழைத்து, “மன்னிக்கவும், உங்களுக்கு மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார்.
ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள். எனவே அவர் மாணவர்களுக்குப் பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார்.
அவர் ஒவ்வொரிடமும் ஒரு பையைக் கொடுத்தார், வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டு வரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ, அத்தனை தக்காளிகளைத் தங்கள் பையில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தக்காளிப் பையை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொண்டிருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்க வேண்டும்” என்று சொன்னார்.
மாணவர்களும் அவர் சொல்வது அறியாமல் தலையை ஆட்டியபடி தங்கள் பழிவாங்கும் எண்ணத்திற்குத் தகுந்தபடி தக்காளியை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்கள்.
ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் பையில் போட்டிருந்த தக்காளிகள் அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர்.
அதன் பிறகு பொறுக்க முடியாமல் அவர்கள் ஆசிரியரிடம் சென்று, தாங்கள் வைத்திருக்கும் தக்காளிப் பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.
இதைக் கேட்டுச் சிரித்த ஆசிரியர், “நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல, அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பகையையும், பழியையும் மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளிப்பையைத் தூக்கி எறியுங்கள்...” என்றார்.
அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.
அப்போதே தக்காளிப் பைகளைக் கொண்டு போய்க் குப்பைத் தொட்டியில் வீசினர். மாணவர்கள் ஒருவருக்கொருவர் பகை மறந்து நட்புடன் வகுப்பறைக்கு திரும்பினர்.
எவரிடமும் பகைமை இல்லாமல், அனைவருடனும் நட்புடன் பழலாமே...!
- ஒரு இதழில் படித்தது.
தொகுப்பு:- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.