நேரம் வீணாகிறதே...?
ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லித் தந்த குருநாதர் மேல் சீடனுக்குக் கடுங்கோபம்.
தன் நேரம் வீணாகிறது என்று நினைத்து வருந்தினான்.
இதையறிந்த குருநாதர், அங்கு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பத்துக் கோழிகளைத் திறந்து விட்டுப் பத்து கோழிகளையும் பிடிக்கச் சொன்னார்.
கூண்டிலிருந்து வெளியேறிய பத்து கோழிகளும் பத்துத் திசைகளில் ஓடின.
அவன் அனைத்துக் கோழிகளையும் துரத்தித் துரத்திக் களைத்தான்.
இதைக் கண்ட குருநாதர் அவனிடம், “கழுத்தில் சிகப்பு நாடா கட்டப்பட்ட கோழியை மட்டும் பிடி” என்றார்.
சில நிமிடங்களில் அவன் அந்த சிகப்பு நாடா கட்டிய கோழியைப் பிடித்தான்.
குருநாதர் சொன்னார், “ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்றினால் எளிதில் அதைப் பிடித்து விடலாம். பலவற்றையும் பிடிக்க நினைத்தால் எல்லாவற்றையும் இழந்துதான் நிற்க வேண்டியிருக்கும்” என்றார்.
அந்தச் சீடனுக்கு தனது நினைப்பு தவறு என்பது புரிந்தது.
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.