உலகில் பயந்து வாழமுடியுமா...?
ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன. அவைகளுக்கு ஒவ்வொரு நாளும் தங்களை சிங்கம், புலி என்று ஏதாவது விலங்குகள் தங்களைத் தாக்கிக் கொன்று தின்று விடுமோ என்கிற அச்சமிருந்து வந்தது.
ஒரு நாள் அவை எல்லாம் ஒன்று சேர்ந்து, “நாம் கோழைகளாக ஒவ்வொரு நாளும் பயந்து சாவதை விட, ஒட்டு மொத்தமாகக் குளத்தில் விழுந்து சாகலாம்” என முடிவெடுத்தன.
அனைத்து முயல்களும் தங்களின் சாவிற்காக ஒரு குளத்தை நோக்கிச் சென்றன.
அந்த குளத்தில், பல தவளைகள் வாழ்ந்து கொண்டிருந்தன. குளத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டிருந்த தவளைகள், பல முயல்கள் தங்களை நோக்கி வருவதைப் பார்த்து, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்துக் குளத்தில் குதித்து மறைந்தன.
இதைப் பார்த்த முயல்களில் பெரிய முயல் ஒன்று, தன்னுடன் வந்த முயல்களைப்பர்த்து, “இந்தப் பூமியில் நாம்தான் கோழைகள் என்று நினைத்தோம். ஆனால், நம்மை விடக் கோழையானவர்களும் இந்த உலகில் பலர் இருக்கின்றனர். அவர்களே பயமில்லாமல் இந்த உலகில் வாழும் போது நாம் மட்டும் ஏன் பயந்து போய் சாகவேண்டும்” என்று கூறியது.
மற்ற முயல்களுக்கும் அந்தப் பெரிய முயல் சொன்னதில் உண்மை இருப்பதைப் போல் தோன்றியது.
நாம் பிறரைக் கண்டு அச்சப்படாமல் இருக்கவேண்டும். நம்மைக் கண்டு அச்சப்படுபவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை உணர வேண்டும். பயம்... மட்டும் மனிதனைச் சிறிது சிறிதாகக் கொன்றுவிடும். எனவே எதற்கும் எப்போதும் பயப்படக்கூடாது என்பதை நம் மனதில் கொள்ள வேண்டும்.
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.