உழவன் ஒருவனிடம் இரண்டு கழுதைகள் இருந்தன.
அவன் " எந்தக் கழுதை மிகவும் வலிமையானது, விட்டுக் கொடுக்காத தன்மை உடையது" என்பதை அறிய விரும்பினான்.
பத்தடி நீளமுள்ள கயிற்றால் இரண்டு கழுதைகளையும் கட்டினான். அவற்றிற்கு இருபதடி இடைவெளியில் வைக்கோல் போர்களை வைத்தான்.
கழுதைகளை விரட்டினான். இரண்டு கழுதைகளுக்கும் எதிரே இருந்த வைக்கோல் போர்கள்தான் தெரிந்தன.
வைக்கோலை உண்பதற்காக இந்தக் கழுதை அதை இழுத்தது. அந்தக் கழுதை இதை இழுத்தது.
ஒன்றுக்கொன்று விட்டுத் தர இரண்டும் தயாராக இல்லை. முரட்டுத்தனமாக இழுத்தபடியே இருந்தன.
இரண்டும் வாயில் நுரை தள்ளியபடியே இறந்து விழுந்தன.
அந்தக் கழுதைகளுக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை இருந்திருந்தால் இரண்டும் ஒரே திசையில் சென்று முதல் வைக்கோல் போரை உண்டிருக்கலாம். அடுத்து இரண்டும் ஒன்றாக வந்து இன்னொரு வைக்கோல் போரை உண்டிருக்கலாம். மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்.
நாம் இருக்கும் சூழ்நிலைக்குத் தகுந்தபடி விட்டுக் கொடுக்கும் மனமிருந்தால் நமக்கு கவலை வராமல் தடுக்கலாம்.