வயது முதிர்ந்து விட்ட அந்தத் துறவி ஒரு நாள் தனது சீடர்கள் அனைவரையும் அழைத்தார்.
அவர் தனது சீடர்களிடம், “சீடர்களே... என் வாழ்வு இன்னும் சில நாட்களில் முடிந்து விடும். நான் உங்களுக்கு வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்ல விரும்புகிறேன்...” என்றார்.
சீடர்கள் அனைவரும் அவர் என்ன சொல்லப் போகிறார்? என்பதைக் கேட்க ஆர்வமாக இருந்தனர்.
அவர் பல் எதுவுமில்லாத தனது பொக்கை வாயைத் திறந்து காண்பித்து, “இதுதான் வாழ்க்கைத் தத்துவம்” என்று சொல்லிவிட்டு அனைவரையும் அங்கிருந்து போகச் சொல்லி விட்டார்.
சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒரே ஒரு சீடனுக்கு மட்டும் தனது குரு பொக்கை வாயைத் திறந்து காண்பித்து, இதுதான் வாழ்க்கைத் தத்துவம் என்று சொன்னது சிறிதும் விளங்கவில்லை... பொக்கை வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்து விடப் போகிறது என்று அவன் மிகவும் குழம்பிப் போனான். நாளை குருவிடமே இதைப் பற்றிக் கேட்டு விட வேண்டும் என்று அவன் முடிவு செய்து கொண்டான்.
மறுநாள் அவன் குருவைச் சந்தித்து தனது சந்தேகத்தைக் கேட்டான்.
குரு மீண்டும் அவரது பொக்கை வாயைத் திறந்து காண்பித்தார்.
பின்னர் அந்தச் சீடனிடம், “என் வாய்குள் என்ன இருந்தது...?” என்று கேட்டார்.
“சுவாமி, தங்கள் வாய்க்குள் நாக்கும் உள்நாக்கும் இருந்தன” என்றான் அவன்.
“பல் இருந்ததா?”
“இல்லை...”
“அதுதான் வாழ்க்கை... வன்மையானது அழியும்... மென்மையானது வாழும்... இதுதான் நம் வாழ்க்கை...!”