ஒரு ஊரில் அதிபுத்திசாலி ஒருவன் இருந்தான். அவனை யாருமே ஏமாற்ற முடியாது. அவனுக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று இருந்தது. எதையுமே அவ்வளவு சீக்கிரத்தில மறக்க மாட்டான். அவனுக்கு அதிகமான நினைவாற்றல்.
ஒரு நாள் அவன் கடவுளிடம், “இறைவா, எனக்கு அதிகமான நினைவாற்றல் இருக்கிறது. யார் நல்லது செய்தாலும், எனக்கு மறக்க முடியவில்லை. அதே சமயத்தில் யார் தீயதைச் செய்தாலும் மறக்க முடியவில்லை. இதனால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருக்கிறது” என்று சொன்னான்.
அவனுடைய தொடர் வேண்டுதலைக் கேட்ட கடவுளும் ஒரு நாள் நேரில் வந்தார்.
அவர், “புத்திசாலியே உன்னுடைய பிரச்சனைதான் என்ன? எதுவாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு உண்டு” என்றார்.
இவனும் பிரச்சனையைச் சொன்னான்.
அதைக் கேட்ட அவர், “உன்னுடைய அதிக நினைவாற்றல் உனக்கு நல்லதுதானே... இதற்கு ஏன் வருத்தமடைகிறாய்?” என்று கேட்டார்.
அவன், “இறைவனே, இந்த நினைவாற்றலினால், எனக்குச் சரியாகத் தூங்க முடியவில்லை?” என்றான்.
அதற்குக் கடவுள், “நீ யாருக்கெல்லாம் நல்லது செய்கிறாயோ, அதை உடனடியாக மறந்துவிடு. அப்போதுதான் மேலும் நல்லது செய்யும் எண்ணம் வரும். உதாரணத்திற்கு நீ யாருக்காவது இரத்ததானம், படிப்பிற்கு உதவி, இல்லாதவர்களுக்கு உதவி என்று செய்தால் அதோடு நிறுத்திக் கொள்ளாதே, அவர்களுக்குச் செய்ததையே நினைக்காதே. நல்ல விஷயத்தை மறந்துவிடு. அப்போதுதான் மேலும் மேலும் உதவி செய்யமுடியும். அதே போல யாருக்காவது தீங்கு செய்தால் அதை மறக்காதே. அப்போதுதான் அந்தத் தவறை மீண்டும் செய்யமாட்டாய். மனதாலே நீ திருந்தி நல்ல செயலைச் செய்யமுடியும்” என்றார்.
இதைக் கேட்டதும் அவன், “இறைவனே, அப்படியானால், நானும் யாராவது எனக்கு நல்லது செய்தால் மறக்க வேண்டுமா? அதுபோல யாராவது எனக்கு தீயதைச் செய்தால் மறக்கக் கூடாதா?” என்றான்.
கடவுள், “உனக்கு நல்லது செய்தவர்களை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நீ நல்லது செய்யவேண்டும் என்கிற எண்ணம் வரும். பிறர் தீயது செய்தால் அதை அப்போதே மறந்து விட வேண்டும். அப்போதுதான் அவரை நீ மன்னிக்கின்ற குணம் வரும்” என்றார்.
உடனே கடவுளிடம் அந்தப் புத்திசாலி, “கடவுளே, இவ்வளவு சிறப்பாகப் பேசுகிறாயே, பேசாமல் உன் கடவுள் பதவியை எனக்குக் கொடுத்து விடேன்” என்று கேட்டான்.
அதற்கு கடவுள் சொன்னார்.
“உன் மனதில் கடந்து உள்ளே சென்று பார். கடந்து+உள் செல். அங்கே நீதான் கடவுள் என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.