ஒரு குருகுலத்தில் குருவாயிருந்தவரிடம் சீடன் ஒருவன், “கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை?” என்று கேட்டான்.
குரு அதற்கு ஒரு கதையைச் சொன்னார்:
“கடவுள் இருக்கிறார் என்று நம்பிய ஒரு மனிதன் மெல்ல சொன்னான், “கடவுளே! என்னோடு பேசுங்களேன்!”
அப்போது குயில் ஒன்று பாடியது.
அதைக் காதில் வாங்காத அவன், உரத்த குரலில் கத்தினான், “கடவுளே, என்னோடு பேசுங்களேன்!”
உடனே சப்தமான இடியோசை எழுந்தது.
அதையும் பொருட்படுத்தாத அவன், “கடவுளே நீ பேசாவிட்டாலும், உன் தரிசனமாவது எனக்குத் தரக்கூடாதா?” என்று இறைவனிடம் கேட்டான்.
அப்போது சுடர்விட்டுப் பிரகாசித்தபடி, வானில் ஒரு நட்சத்திரம் தோன்றியது.
அவன் அதையும் கவனிக்காமல் இருந்தான்.
“கடவுளே, எனக்காக ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்த்த மாட்டாயா?” என்றான் அவன்.
கடவுள் மெல்லக் கீழே இறங்கி வந்து, பட்டாம் பூச்சியாக மாறி அவனைத் தொட்டார்.
அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டபடி சொன்னான்.
“கடவுள் இல்லை... இருந்திருந்தால் என்னோடு பேசி இருப்பார், பார்க்க முடிந்திருக்கும். அற்புதமாவது நிகழ்ந்திருக்கும் எதுவுமே நடக்கவில்லையே...” என்று சொன்னான் அவன்.
கதையைக் கேட்ட சீடன் சொன்னான்;
“புரிந்தது குருவே! கடவுள், தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். நாம் தான் அதைப் புரிந்து கொள்வதில்லை...”