ஆசிரியர் அன்பு தொடர்பான நன்னெறிக் கல்வி பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பிலிருந்த மாணவன் ஒருவன் அவரிடம், “ஐயா நம்மிடம் அதிகமான அன்பு கொண்டவரை எப்படி அடையாளம் காண்பது?” என்று கேட்டான்.
ஆசிரியர் அவனிடம், “உண்மையான அன்பை நீ அறிந்துக் கொள்வதற்கு முன்பாக, நான் சொல்வதைச் செய். பிறகு, அதன் பொருளை நீ அறிந்து கொள்வாய்” என்றார்.
அந்த மாணவனும், “சொல்லுங்கள் ஐயா, செய்கிறேன்” என்றான்.
உடனே அந்த ஆசிரியர், “நம் பள்ளியிலிருக்கும் தோட்டப்பகுதிக்குச் செல். அங்கிருக்கும் புற்களைக் கீழ் நோக்கிப் பார்த்தபடி நடந்து செல். உனக்கு அழகாகத் தோன்றும் ஒரு புல்லைத் தேர்வு செய்து என்னிடம் கொண்டு வா. ஆனால், ஒரு நிபந்தனை, நீ நடந்து சென்ற பாதையைத் திரும்பிப் பார்க்கக் கூடாது. உன் முன்னால் இருக்கும் புல்லை மட்டுமே தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும்” என்றார்.
தோட்டத்திற்குச் சென்று திரும்பிய அந்த மாணவனின் கையில் எந்த ஒரு புல்லும் இல்லை.
ஆசிரியர் அவனிடம், “நான் உன்னை ஒரு அழகான புல்லைக் கொண்டு வரச் சொன்னேன். ஆனால், நீ வெறுங்கையுடன் வந்திருக்கிறாயே...?” என்று கேட்டார்.
உடனே அந்தமாணவன், “ஐயா, நான் புற்களைப் பார்த்தவாறு நடந்து கொண்டிருந்தேன். எனக்குப் பல அழகான புற்கள் தெரிந்தன. நீங்கள் கேட்ட மிக அழகான புல்லைத் தேடி நானும் தொடர்ந்து நடந்தேன். நான் முன்னால் சென்ற பின்பு, முன்பு தெரிந்த புல்லே இந்தப் புல்லை விட அழகாக இருந்ததே... என்று நினைத்துத் திரும்ப நினைத்தேன். ஆனால், நீங்கள் சொன்ன நிபந்தனை என்னைத் திரும்ப விடாமல் செய்து விட்டது. நான் எந்தப் புல்லையும் தேர்வு செய்ய முடியாமல் போய்விட்டது.
அதைக் கேட்ட ஆசிரியர், “மாணவனே, நீ கேட்ட கேள்விக்கான பதில் அதுதான். நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நம்மருகில் இருக்கும் நேரத்தில் நாம் அவரை விடச் சிறந்த ஒருவரைத் தேடக் கூடாது. அவர்களின் அன்புக்கு மரியாதை செலுத்த வேண்டும். நம் வாழ்க்கையைப் பின் நோக்கிப் பார்த்துப் பாசத்தை எடை போடக் கூடாது. இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. நம்மோடு நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அதைச் சரி செய்து கொள்ள முடியும். அவர்களது பாசத்தை நிலைக்கச் செய்ய முடியும். நம் மீது அன்பு செலுத்தப் பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில் இருப்பவரே சிறந்தவர். நம் வாழ்க்கையின் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு நம் மீது அன்பு செலுத்துபவர்களிடம், நேர்மையாக நடந்து கொள்வதே சிறந்த குணமாகும்” என்றார்.