ஒரு காட்டில் நிறைய பறவைகளும், விலங்குகளும் வசித்து வந்தன. அவை அனைத்தும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தன.
அந்த கூட்டத்தோடு சேர்ந்து வசித்த ஒரு மயில் மட்டும், எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளைப் பார்த்து பொறாமைப்பட்டுக் கொண்டே இருந்தது.
யானையைப் பார்த்து, “நீ எவ்வளவு பெரியதாய் இருக்கிறாய்?” என்றும், மானைப் பார்த்து, “உன்னால் மட்டும் எப்படி இவ்வளவு வேகமாக ஓட முடிகிறது?” என்றும் பொறாமைப்படும்.
மழைக்காலம் வந்தது. மேகம் கருத்து மழை வரும் அறிகுறி தென்பட்டது. உடனே அந்த மயில் தன் தோகையை விரித்து அழகாக ஆடத் தொடங்கியது.
எல்லா விலங்குகளும், பறவைகளும் மயிலின் ஆட்டத்தைப் பார்த்து ரசித்தன. மயிலுக்குப் பெருமை கொள்ளவில்லை. உடனே அது பாட ஆரம்பித்தது. அதுவரை அதன் ஆட்டத்தைக் கண்டு ரசித்த மற்ற விலங்குகளும், பறவைகளும் மயிலின் மோசமானக் குரலைக் கேட்டு ஏளனமாக சிரித்தன.
அவமானப்பட்ட மயில் தன் மோசமானக் குரலை எண்ணி அழத் தொடங்கியது.
அப்போது அங்கு வந்த குயில் மயிலைச் சமாதானப்படுத்தியது.
“உனக்கென்ன? உன் குரல் எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா? என்னோட குரலைக் கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர்” என்று மயில் தனது வருத்தத்தைக் குயிலிடம் கூற, குயில் மயிலிடம், “மயிலே! நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா? அதை நினைத்து, எப்போதாவது நீ மகிழ்ச்சியடைந்திருக்கிறாயா?” என்று கேட்டது.
சிறிது நேரம் மௌனமாய் இருந்த மயில், “இல்லை” என்று பதில் சொன்னது.
அதைக் கேட்டு சிரித்த குயில், “உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சிறப்பும், தனித்தன்மையும் நிச்சயம் இருக்கும். அதை உணர்ந்து அதனை மேம்படுத்த முயல வேண்டுமே தவிர, நம்மிடம் இல்லாததை நினைத்து வருத்தப்படவோ அல்லது அவர்களைப் பார்த்துப் பொறாமைப்படவோ கூடாது” என அறிவுரை வழங்கியது.
தன் தவறை உணர்ந்த மயில் குயிலுக்கு நன்றி கூறியது.