கிராமம் ஒன்றில் ஒரு சோம்பேறிப் பையன் இருந்தான்.
அவனைத் திருத்த வேண்டுமென்று நினைத்த அவனது தந்தை, அந்த ஊரில் இருந்த முனிவர் ஒருவரிடம், “சுவாமி, என் மகன் இவன், மிகவும் சோம்பேறியாக இருக்கிறான். அவனிடம் சோம்பேறித்தனமாக இருக்காதே என்று நான் பலமுறை சொல்லி விட்டேன். ஆனால், அவன் அதைக் கண்டு கொள்ளாமல் அப்படியே இருக்கிறான்” என்று சொன்னார்.
முனிவர் அவரிடம், அந்தச் சிறுவனை ஒருநாள் அழைத்து வரும்படி சொன்னார்.
அவரும் ஒருநாள் அந்தச் சிறுவனை முனிவரிடம் கொண்டு போய் விட்டார்.
முனிவர் அவனை ஒரு காட்டுக்குள் அழைத்துப் போனார்.
அவர் அந்தச் சிறுவனிடம், அங்கே இருந்த ஒரு சிறிய செடியைப் பிடுங்கும்படி சொன்னார்.
அந்தச் சிறுவனும் அதை மிகவும் எளிதாகப் பிடுங்கி எறிந்தான்.
அதன் பிறகு, அதை விடப் பெரிதாக இருந்த ஒரு செடியைப் பிடுங்கச் சொன்னார். அதையும் அவன் சிறிது கஷ்டப்பட்டு பிடுங்கி எறிந்தான்.
சிறிது தூரம் சென்றதும், அங்கிருந்த ஒரு மரத்தைப் பிடுங்கச் சொன்னார். அவன் அதை இலேசாகக் கூட அசைக்க முடியவில்லை. அவன் மிகவும் களைத்துப் போனான்.
அந்த முனிவர் அவனிடம், “தம்பி, இப்படித்தான் நீ சிறு பையனாக இருக்கும் போதே, உன்னிடம் இருக்கும் சோம்பலையும், கெட்ட பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வயதில் அது மிகச் சுலபமாகப் போய்விடும். ஆனால் நீ பெரியவனாகி விட்டால், இந்த மரத்தைப் போல் உன் சோம்பலும், கெட்ட பழக்க வழக்கங்களும் மிக அதிகமாகி விடும். அப்புறம், அதனிடமிருந்து உன்னைப் பிரிக்க முடியாமல் போய்விடும். உன் தந்தை சொல்லும் வேலைகளைச் செய்து நன்றாகப் படித்து முன்னேற்றம் அடையப் பார்” என்றார்.
அவனும் சரி என்று சொல்லி வீட்டுக்கு வந்தான். அதன் பிறகு அவன் தந்தை சொல்லும் எதையும் மறுக்காமல் செய்யத் தொடங்கினான். வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றான்.