கணக்கில் நூற்றுக்கு தொண்ணூற்றி ஏழு மதிப்பெண்கள் வாங்கிய கண்ணன் விடைத்தாளை மகிழ்ச்சியோடு அப்பாவிடம் காண்பித்தான்.
அவனின் மகிழ்ச்சியில் தானும் கலந்து கொண்டு தன் மகனைப் பாராட்டாமல்... நீ வாங்க முடியாத அந்த மூன்று மதிப்பெண்கள் என்ன கணக்கு? அதைச் சரியாகப் படிக்கவில்லையா என்று சற்று கோபத்துடன் கேட்டார் கண்ணனின் தந்தை சரவணன்.
மகிழ்ச்சியோடு வந்த கண்ணன் முகம் வாடிப்போய் விட்டது.
கண்ணனின் தந்தைக்குக் கணக்கு ஆசிரியராய் இருந்தவ மதிவாணனே தன் மகனுக்கும் ஆசிரியராக இருந்ததால்... அடுத்த நாள் பள்ளியில் அவரைச் சந்தித்தார் கண்ணனின் தந்தை.
ஆசிரியர், “சரவணா உன் மகன் மிகவும் புத்திசாலி... 97 மதிப்பெண்கள் பெற்ற அவனைப் பாராட்டாமல் மூன்று மதிப்பெண்கள் எங்கே போயிற்று என்று கேட்கிறாயே... ஆனால், நீ படிக்கும் போது எழுபது மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியதில்லை... உன் தந்தை வந்து... நீ வாங்காமல் விட்ட அந்த முப்பது மதிப்பெண்கள் பெரிது என நினைக்காமல் உன்னைப் பாராட்டினார்... அந்தப் புத்தி உனக்கு இல்லாமல் போய்விட்டதே... நீ மட்டுமல்ல... உன்னைப் போல அனைத்துப் பெற்றோரும், தங்கள் குழந்தைகள் படிப்பதைக் கண்டு பெருமைப்படுங்கள். குழந்தைகளுக்கு இன்றைய வயதில் உள்ள புத்திசாலித்தனம்... அந்த வயதில் உங்களுக்கு இருந்ததா என்று கொஞ்சமாவது சிந்தியுங்கள்...” என்றார்.
ஆசிரியர் சொன்னதிலிருந்த உண்மை சரவணனின் மனத்தை என்னவோ செய்ய... சரிங்க சார் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்..