ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு எடை இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையைச் சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனால், என்னோட கேள்வி அதுவல்ல”
ஆசிரியர் தொடர்ந்து, “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தால் என்ன ஆகும்?”
“ஒன்றும் ஆகாது” என்றனர் மாணவர்கள்.
”சரி. ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தால்...?”
“உங்க கைதான் வலிக்கும்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வைத்திருந்தால்...”
“உங்க கை அப்படியே மரத்துப் போயிடும்”
“ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கும் இந்த டம்ளரோட எடை கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“அது வந்து...” என்று மாணவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் இழுத்தனர்.
“எனக்கு கை வலிக்காமல், மரத்துடாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?”
“டம்ளரை கீழே வைக்க வேண்டியதுதான்”
”மிகச் சரியாகச் சொன்னீர்கள். இந்த டம்ளர்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்தால், அதை அப்படியே நமக்குள்ளே ஏற்றி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா நம்முடைய மூளை கூட அதையே நினைத்துக் கவலைப்படும். அதனால் நமக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதைத் தூக்கி ஒரு ஓரமா வைத்துவிடனும். அதுவே சரியாயிடும். சரிதானே?” என்றார் ஆசிரியர்.
ஆசிரியர் சொன்னது சரிதானே... நாம் எதற்குப் பிரச்சனைகளைத் தூக்கிச் சுமந்துக்கிட்டிருக்க வேண்டும்?