அவன் யார்? - விடுகதைகள்
சித்ரகலா செந்தில்குமார்
1. கேடயமுள்ள வீரன் இவன். ஆனால் அவனிடம் வாள் இல்லை. அவன் யார்?
2. தான் கழற்றிய சட்டையை மறுபடியும் போட மாட்டான். அவன் யார்?
3. இவனுக்கு உணவளித்தால் ஊரையேக் கூட்டி வந்துவிடுவான். அவன் யார்?
4. ஓடியாடி வேலை செய்து, சுத்தமாக வேலையைச் செய்வான். வேலை முடிந்த பின்பு மூலையில் ஒதுங்கி கிடப்பான். அவன் யார்?
5. சந்தைக்குப் போன முக்கண்ணன். கடைசியில் சட்னியாகிப் போனான். அவன் யார்?
6. பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், அவன் மருந்துமாவான். அவன் யார்?
7. அதட்டுவான், அலறுவான். ஆனால் கோட்டையை விட்டு வர மாட்டான். அவன் யார்?
8. உயிரில்லாதவன்தான். ஆனாலும், அவனுக்கு உடலெல்லாம் நரம்புகள்தான். அவன் யார்?
9. காற்றைக் குடித்து, காற்றிலேப் பறப்பான். அவன் யார்?
10. நிறைய பற்கள் இருந்தாலும், கடித்துத் துன்புறுத்த மாட்டான். அவன் யார்?
விடைகள்:
1. ஆமை
2. பாம்பு
3. காகம்
4. துடைப்பம்
5. தேங்காய்
6. தேன்
7. நாக்கு
8. பாய்
9. பலூன்
10. சீப்பு
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.