வெளிநாட்டு விடுகதைகள்
சித்ரகலா செந்தில்குமார்
கனடா
1. எனக்கு ஐந்து விரல்கள் உண்டு; ஆனால், இரத்தமும் சதையும் இம்மியும் இல்லை. நான் யார்?
அமெரிக்கா
2. விடிந்தவுடனே வேலை செய்வாள், வேலை இல்லையேல் மூலையில் போய்க் கிடப்பாள். அவள் யார்?
கியூபா
3. ஆட வேண்டுமெனில் சட்டை போடச் சொல்லுவார்; ஆடும் முன்பு அந்தச் சட்டையைக் கழற்றி விடுவார். அவர் யார்?
மேற்கு இந்தியா
4. கறுப்புக் கோட்டுப் போட்டிருப்பார்; கழற்றிக் கீழே வைக்கமாட்டார்; விருந்துச் சாப்பாடு என்றாலோ விழுந்தடித்து ஓடி வருவார். அவர் யார்?
அர்ஜெண்டைனா
5. என் பெயரைக் கேட்பவர் பலர். என்னைப் போட்டு மிதிப்பவரும் பலர். நான் யார் பெயரையும் கேட்பதுமில்லை; எவரையும் போட்டு மிதிப்பதும் இல்லை. நான் யார்?
இங்கிலாந்து
6. உள்ளே இருந்தால் ஓடித் திரிவான். வெளியே வந்தால் விரைவில் மடிவான். அவன் யார்?
போர்ச்சுக்கல்
7. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு; ஓட்டு வீட்டைப் பிரித்தால் வெள்ளை மாளிகை; வெள்ளே மாளிகை உள்ளே குளம். அது என்ன?
ஜெர்மனி
8. என்னைத் தரையில் புதைத்தார்கள், என்போல் பலபேர் கிடைத்தார்கள். நான் யார்?
டென்மார்க்
9. சாப்பாட்டுக்கு அவசியம்தான். ஆனால், தனியாய்த் தின்ன முடியாதது. அது என்ன?
பல்கேரியா
10. கஷ்டப்பட்டு நூல் நூற்பார்; கட்டிக் கொள்ளத் துணியில்லை. அது என்ன?
விடைகள்:
1. கையுறை
2. துடைப்பம்
3. பம்பரம்
4. காகம்
5. தெரு
6. மீன்
7. தேங்காய்
8. விதை
9. உப்பு
10. சிலந்தி
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.