விடுகதைகள் - அது என்ன?
சித்ரகலா செந்தில்குமார்
1. அடிமேல் அடி வாங்கிக் கொண்டு, அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைக்கும். அது என்ன?
2. வாடையில் வாடாத நீர் ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?
3. தொட்டுவிட்டால் ஏதும் இல்லை, அரைத்து விட்டால் சிவந்திடும். அது என்ன?
4. அருமையான சக்கரம், அசைந்தாடும் சக்கரம், அணிந்தால் அழகாகும் பெண்ணின் கரம். அது என்ன?
5. நாம் சாப்பிடுவதற்கு வாங்கும் ஒரு பொருள். ஆனால், கடைசி வரை அதைச் சாப்பிட முடியாது. அது என்ன?
6. கை உண்டு, கழுத்து உண்டு, தலை உண்டு. ஆனால் உயிர் மட்டுமில்லை. அது என்ன?
7. மண்ணுக்குள்ளே மறைந்து கிடக்கும். வெளியில் வந்துவிட்டால், மங்களகரமாகிவிடும். அது என்ன?
8. யாரையோத் தேடி வருகிறது. கரையைக் கண்டதும் திரும்பிப் போய்விடுகிறது. அது என்ன?
9. அடித்து நொறுக்கி அனலில் போட்டால் ஆவியாக மாறி, அழகாய் மணக்கும். அது என்ன?
10. இரவும் பகலும் ஓய்வில்லை. இது படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. அது என்ன?
விடைகள்:
1. மிருதங்கம்
2. கண்ணீர்
3. மருதாணி
4. வளையல்
5. தட்டு
6. சட்டை
7. மஞ்சள்
8. கடல் அலை
9. சாம்பிராணி
10. இதயம்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.