1. சூடுபட்டுச் சிவந்தவன், வீடுகட்ட உதவுவான்.
அவன் யார்?
2. கால் உண்டு; நடக்க மாட்டான். முதுகு உண்டு; வளைக்க மாட்டான். கை உண்டு; மடக்க மாட்டான்.
அவன் யார்?
3. உள்ளே இருந்தால் ஒடித்திரிவான்; வெளியில் வந்தால் விரைவில் மடிவான்.
அவன் யார்?
4. ஒற்றைக்காலில் சுற்றிடுவான்; ஓய்ந்து போனால் படுத்திடுவான்.
அவன் யார்?
5. சாண் உயரப் பையன், வைத்ததெல்லாம் சுமப்பான்.
அவன் யார்?
6. உயிரில்லை; ஊருக்குப் போவான். காலில்லை; வீட்டுக்கு வருவான்; வாயில்லை; வார்த்தைகள் சொல்வான்.
அவன் யார்?
7. ஆகாயத்திலிருக்கும் அற்புத மனிதன், ஆற்றிலும் விழுவான்; குளத்திலும் விழுவான்; ஆனாலும், நனையமாட்டான்.
அவன் யார்?
8. பாதாளத்தில் பிறந்தவன்; பம்பரத்தில் சுழன்றவன்; வெய்யிலில் காய்ந்தவன், எல்லோர் வீட்டிலும் இருப்பவன்.
அவன் யார்?
9. மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல. பட்டை அடித்திருப்பான்; சாமியாரல்ல.
அவன் யார்?
10. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஒடுவான்.
அவன் யார்?
விடைகள்:
1. செங்கல்
2. நாற்காலி
3. மீன்
4. பம்பரம்
5. அடுப்பு
6. கடிதம்
7. சூரியன்
8. பானை
9. அணில்
10. படகு
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.