“ஏய் அங்கப் பாருங்க, ‘ஓட்ட ஸ்பீக்கர்’ ஓவியா வந்துக்கிட்டுயிருக்கா” என்று மாணவர்கள் கேலி செய்தது மட்டுமின்றி கைக்கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
கேண்டீனுக்கு வந்த ஓவியாவிற்கு என்னவோ போலானது. இதுபோல் எத்தனை முறை கேலி செய்யப்பட்டாலும், அத்தனை முறையும் மனமொடுங்கி போவாள் ஓவியா. யாருக்கும் எந்த தீங்கும் செய்ய நினைக்காத உயர்ந்த குணம் படைத்தவள். அழகிலும் குறைவில்லை. ஆனால், அவள் குரல்தான் கேட்கச் சற்று தகாததாக இருக்கும்.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மீனா என்ற ஆசிரியை, கேலி செய்த கூட்டத்தை நெருங்கி, “ப்ளஸ் டூ படிக்கிற மாணவர்கள் மாதிரியா நடந்துக்குறீங்க? கொஞ்சமாவது இங்கிதம்னு ஒண்ணு வேணாம்? மத்தவங்க மனசு கஷ்டப்பட்ற மாதிரி பேசக்கூடாதுன்னு எத்தன தடவை சொல்றது?” என்று அதட்டிய பின்புதான் தங்கள் தவறை எண்ணி வருந்தினர்.
“சாரி மிஸ், சாரி ஓவியா. எங்கள மன்னிச்சிடு” என்று குற்ற உணர்வுடன் சொல்லிவிட்டுக் கேண்டீனைவிட்டு வெளியேறினர். மாணவர்களை நல்வழிப்படுத்திவிட்டோம் என்ற பெருமிதம் ஆசிரியை மீனாவுக்கு.
ஆனால் ஓவியாவோ தனக்குள், “அம்மா அப்பா சொன்ன மாதிரி சின்ன வயசில இருந்தே மெதுவா கம்மியான குரல்ல பேசியிருந்திருக்கலாம். அனாவசியாமா தொண்டக் கிழியக் கிழியக் கத்தி பேசுனதுனால எனக்கு இனிமையான குரலே இல்லாமப்போச்சு. அப்போ பெத்தவங்க பேச்ச கேக்காதனால இப்போ மத்தவங்க கேலி பேச்சயெல்லாம் கேட்க வேண்டியதாயிருக்கு” என்று நினைத்து வருந்தினாள்.