கிறிஸ்துமஸ் என்றவுடன் அனைவருடைய நினைவுக்கும் வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ்தான். குழந்தைகளுக்குக் குதூகுலம் தருபவர் இந்த கிறித்துமஸ் தாத்தா. இனிப்புகளைக் குழந்தைகளுக்கு அள்ளி தந்து அவர்களை உற்சாகப்படுத்துவார். எந்தக் குழந்தையும் அவரிடம் ஏமாந்ததில்லை. இந்தத் தாத்தா எப்படி உருவானார் என்பது உங்களுக்கு தெரியுமா?
முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்ட செயிண்ட் நிக்கோலஸ் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில். நான்காம் நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் பிஷப் பதவியில் இருந்தவர். குழந்தைகளிடம் அதிக விருப்பம் கொண்டவர். இப்போது வருவது போல் கிறிஸ்துமஸ்க்கு முதல் நாளன்று பின்னிரவில் கிறிஸ்துமஸ் தாத்தா வருவதில்லை. டிசம்பர் 6ம் தேதி இரவே வந்து பழங்கள் சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுப்பார்.
16ம் நூற்றாண்டில் சிலுவைப் போர் நடந்த போது, செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயிண்ட் நிக்கோலஸ் பழக்கங்களைப் பின்பற்றினர். அமெரிக்காதான் சாண்டா கிளாஸை பிரபலப்படுத்தியது. சாண்டா கிளாஸ் குண்டானவராக, வெள்ளைத் தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராகச் சித்தரிக்கப்பட்டார். உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிறிஸ்துமஸ் தாத்தா தோற்றம் பெற்றார்.
கடும் குளிர் நிறைந்த துருவப் பிரதேசங்களில் பறப்பது போன்று வேகமாகப் பாய்ந்தோடும் ஒரு வகை மான் இருக்கிறது. அந்தப் பறக்கும் மானைக் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாகக் கருதி வழிபடுகின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாகப் பல கதைகள் இருக்கின்றன.