நீல நிலவு என்றால் ‘நீல நிறத்தில் தெரியும் நிலவு’ என்று தங்கள் கற்பனையை விரிவாக்கம் செய்ய வேண்டாம். வாங்க, நீல நிலவு எனும் முழு நிலவைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
சந்திரன் சுழற்சியானது தோராயமாக ஒரு மாதம் (30 நாட்கள்) எனும் அளவில் கணக்கிடப்பட்டு, மாதத்திற்கு ஒரு முழு நிலவு என ஆண்டுக்கு பன்னிரண்டு முழு நிலவு தோன்றும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் சந்திரன் சுழற்சிக்கு 29.5 நாட்கள் ஆகிறது. ஒரு ஆண்டுக்கு சந்திரனின் 12 சுழற்சிகளுக்கு 12 x 29.5 = 354 நாட்களாகின்றன. ஒவ்வொரு ஆண்டிலும் 11 நாட்கள் (நெட்டாண்டு எனில் 12 நாட்கள்) மீதமிருக்கின்றன. இந்தக் கணக்கின்படி, ஒவ்வொரு 2.5 ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ஆண்டுக்கு 13 முழு நிலவுகள் தோன்றுகின்றன. பதின்மூன்றாவதாகத் தோன்றும் முழு நிலவை நீல நிலவு (Blue Moon) என்று சொல்கின்றனர்.
இதனைச் சுருக்கமாகச் சொன்னால், கிரிகோரியன் நாட்காட்டியிலுள்ள ஒரு மாதத்தில், இரண்டு நாட்களில் முழு நிலவுகள் தோன்றும். அம்மாதத்தில் இரண்டாவதாகத் தோன்றும் முழு நிலவை நீல நிலவு என்கின்றனர். பொதுவான ஆண்டில் பிப்ரவரி மாதம் 28 நாட்களையும், நெட்டாண்டில் 29 நாட்களையும் மட்டுமேக் கொண்டிருக்கிறது. முழு நிலவுகளுக்கிடையே தோராயமாக 29.5 நாட்கள் என்று இருப்பதால், பிப்ரவரி மாதத்தில் நீல நிலவு தோன்றுவதற்கான வாய்ப்பே இல்லை. சில நேரங்களில் பிப்ரவரியில் முழு நிலவு இருக்காது. அந்த நேரம் மற்றும் தேதியின் படி, அம்மாத நிலவு கருப்பு நிலவு (Black Moon) என்று அழைக்கப்படுகிறது.
ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் என்ற விதியின்படி, கணக்கிட்டால் கடந்த ஆகஸ்ட் 30, 2023 அன்று நீல நிலவு தோன்றியது. அடுத்த நீல நிலவு மே 30, 2026 அன்று தோன்றும்.
நீல நிலவை மேற்காணும் முறையைத் தவிர்த்து, பருவக் காலங்களின் அடிப்படையிலும் கணிக்கின்றனர். 1932 முதல் 1957 வரையிலான காலக்கட்டத்தில் பயன்பாட்டிலிருந்து, தற்போது பயனற்றுப் போய்விட்ட ‘மைனே விவசாயிகளின் பஞ்சாங்கம்’ (Maine Farmers’ Almanac) நான்கு பருவங்களில் ஒன்றில் வழக்கமான மூன்றிற்குப் பதிலாக நான்கு முழு நிலவுகள் இருந்தால், அந்த நான்கில் மூன்றாவதாக இருக்கும் முழு நிலவு "நீல நிலவு" என்று அழைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
அந்த விதியின்படி சென்றால், அடுத்த நீல நிலவு வருகிற ஆகஸ்ட் 19, 2024 அன்று தோன்றும். அதாவது 2024 ஆம் ஆண்டு, கோடைக்காலத்தில் ஜூன் 21, ஜூலை 21, ஆகஸ்ட் 19 மற்றும் செப்டம்பர் 18 எனும் நான்கு நாட்களில் முழு நிலவுகள் தோன்றும். இங்கு மூன்றாவது முழு நிலவாகத் தோன்றும், ஆகஸ்ட் 19 ஆம் நாள் தோன்றும் மூன்றாவது முழு நிலவை, நீல நிலவு என்று இங்கு எடுத்துக் கொள்ளலாம்.
நீல நிலவுக் கணிப்பில் இரண்டு முறைகளுமே வழக்கத்தில் இருக்கின்றன. இருப்பினும், ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் என்ற கணக்கீடு எளிமையாக இருப்பதால், அம்முறையே அதிகமான பயன்பாட்டிலிருக்கிறது.
அப்படியென்றால், சந்திரன், சூரியன் எப்போதும் நீல நிறத்தில் தோன்றாதா? என்கிற தங்களின் கேள்விக்கும் விடை இருக்கிறது.
1884 ஆம் ஆண்டில் கிரகடோவாவின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பின் விளைவாக, சாம்பல் மற்றும் தூசியின் மிகப்பெரிய மேகம், பூமியின் மேற்பரப்பில் இருந்து 5 முதல் 30 மைல்கள் வரை அடுக்கு மண்டலத்தை ஆக்கிரமித்தது. அந்த மேகம், பல மாதங்களுக்கு வடக்கு அரைக்கோளத்தில் பல இடங்களில் இருந்து சந்திரன் மற்றும் சூரியன் இரண்டையும் நீல நிறத்தில் தோன்றச் செய்தது.
இதே போன்று, செப்டம்பர் 24, 1950 அன்று, கனடாவின் வடக்கு ஆல்பர்ட்டாவின் காடுகளில் தோன்றிய நெருப்பிலிருந்து 200 மைல் அளவில் புகை மூட்டமானது. நியூயார்க் மாநிலத்தின் சில பகுதிகள் மற்றும் தெற்கு நியூ இங்கிலாந்தின் பெரிய ஏரிகள் மீது ஒரு பயங்கரமான வீழ்ச்சியை இப்புகை மண்டலம் ஏற்படுத்தியது. இந்தப் புகை மண்டலம் மதிய வேளையில் இருளை உருவாக்கியதுடன், சூரியனை வட்டு இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் ஊதா நிறங்களில் ஒளிரச் செய்தது.