இந்தியாவின் நாணயம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயை வெளியிடுகிறது. INR என்பது இந்திய ரூபாயின் ஐஎஸ்ஓ 4217 குறியீடாக இருக்கிறது.
பாணினி (கிமு 6 முதல் 4 ஆம் நூற்றாண்டு) ரூப்யா என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறார். முதல் மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 340 - 290) காலத்தில் சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம் வெள்ளி நாணயங்களை, ரூப்யா எனக் குறிப்பிடுகிறது. ரூபாய் என்கிற பதம் சமஸ்கிருத வார்த்தையான "ரூப்யா" என்கிற வார்த்தையிலிருந்து வந்தது. ரூபாயின் உடனடி முன்னோடியான ரூபியா 178 தானியங்கள் எடையுள்ள வெள்ளி நாணயங்களாக, வட இந்தியாவில் ஷேர் ஷா சூரியால் 1540 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. இது பின்னர் முகலாயப் பேரரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தற்போது ரிசர்வ் வங்கியால் 5, 10, 20, 50, 100, 500 வரையிலான ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள்கள் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலான நாணயங்களை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு. 1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் மதிப்புகளில் உலோக நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. ரூபாய் 20-க்கு அதிகமான மதிப்புடைய நாணயங்கள் புகழ் வாய்ந்த நபர்களையோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்வையோக் குறிப்பிடும் வகையில் நினைவு நாணயங்களாக வெளியிடப்படுகின்றன. 50 பைசாவுக்குக் குறைவான பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை.
நாணயங்களையும், ஒரு ரூபாய் நோட்டையும் அச்சடிக்க இந்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது. நாணயங்கள் அச்சடிக்கும் உரிமை 1906 ஆம் ஆண்டு நாணயச் சட்டத்தின்படி இந்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மதிப்புகளில் நாணயங்களை வடிவமைத்து அச்சிடுவதும் இந்திய அரசின் பொறுப்பாகும். மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டா ஆகிய நான்கு இடங்களில் நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 அடிப்படையில் ரிசர்வ் வங்கி மூலம் மட்டுமே நாணயங்கள் புழக்கத்திற்கு வெளியிடப்படுகின்றன. இந்தியப் பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் நான்கு அச்சகங்களை கொண்டுள்ளது.
பணத்தாள் அச்சிடும் அச்சக ஆலை, 1928 ஆம் ஆண்டில் நாசிக்கில் நிறுவப்பட்டது. முதல் பணத்தாள் அச்சிடும் அச்சகம் நாசிக்கில் நிறுவப்பட்டது. தேவாஸ், மைசூர் மற்றும் சல்போனியிலும் காகிதப் பணத்தை அச்சிடும் அச்சகங்கள் உள்ளன.
அசோக ஸ்தூபி வரிசை
1950 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ரூபாய் தாள்கள் ஆங்கிலேயே ரூபாயின் அம்சங்களுடன், ஜார்ஜ் IV படத்திற்குப் பதிலாக ‘அசோக ஸ்தூபி’ சின்னத்தை நீர்க்குறியாக கொண்டிருந்தன. சுதந்திர இந்திய அரசாங்கம் தன்னுடைய இலட்சனையாக நான்கு சிங்கங்கள் உள்ள அசோகரின் தூணை ஏற்றுக் கொண்டது. அந்த தூணில் நான்கு சிங்கங்கள் நான்கு திசையை நோக்கியவாறு அமைந்திருக்கும். சின்னத்தில் நடுநிலையாக ஒரு சிங்கம் நேராக பார்க்கும்படியும், மற்ற இரு சிங்கங்கள் அதன் இரு புறமும் வேறு திசையை நோக்கியவாறும் அமைந்திருக்கும். நான்காவது சிங்கம் பின்புறமாக இருப்பதால் இலட்சனையில் அச்சிங்கம் தெரியாது. இந்தச் சிங்க அமைப்பின் கீழே அசோக சக்கரமும், சக்கரத்தின் வலது புறம் ஓடும் குதிரையும், இடதுபுறம் ஓடும் காளையும் அமைந்திருக்கும்.
அதன் பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியால், இந்தியக் கலை வடிவங்களைக் கொண்ட படங்கள் ரூபாய் தாள்களில் இடம் பெற்றன. 1980 ஆம் ஆண்டில் “வாய்மையே வெல்லும்” என்று தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டது. இந்த ரூபாய் தாள்கள் யாவும் ‘அசோக ஸ்தூபி’ வரிசை எனப்பட்டன. இவ்வரிசை சிங்க வரிசை (Lion Capital Series) என்ற பெயரிலும் அழைக்கப்பட்டன.
மகாத்மா காந்தி வரிசை
மகாத்மா காந்தி வரிசை (Gandhi Series) என்பது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்திய ரூபாய் பணத்தாள்கள் ஆகும். இந்தப் பணத் தாள்களில் முதன்மையாக மகாத்மா காந்தியின் உருவம் இடம் பெற்றதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த வரிசை, 1996 ஆம் ஆண்டுக்கு முன்பாக வழக்கிலிருந்த அனைத்துப் பணத்தாள்களின் வடிவத்தையும் மாற்றி இந்த வரிசை இடம் பிடித்தது. இந்திய ரிசர்வ் வங்கி 1996 ஆம் ஆண்டில் தொடங்கி 10 மற்றும் 500 ரூபாய் தாள்களை இந்த வரிசையில் அறிமுகப்படுத்தியது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாளன்று இந்த வரிசையில் உள்ள 500 மற்றும் 1000 பணத்தாள்களின் மதிப்பு நீக்கப்பட்டது.
மகாத்மா காந்தி புதிய வரிசை
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாளன்று புதியதாக 500 மற்றும் 2000 மதிப்பிலான மகாத்மா காந்தி புதிய வரிசைத் தாள்கள் வெளியிடப்பட்டன. 2016 ஆம் ஆண்டில் நவம்பர் 10 அன்று, இந்திய ரிசர்வ் வங்கியால் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்குப் புதிதாக வெளியிடப்பட்டது. இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம் பெற்றிருக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக, புதிய இந்திய ரூபாய் நோட்டுத் தொடரில் பல்வேறு இடங்களில் நுண் அச்சுக்கள் இடம் பெற்றுள்ளன.
* பத்து ரூபாய் தாளானது 123 x 63 மி.மீ எனும் அளவில் சாக்கலேட் பழுப்பு நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் கொனார்க் சூரியக் கோயில் படத்துடன் 2018 ஆம் ஆண்டு, ஜனவரி 5 அன்று வெளியிடப்பட்டது.
* இருபது ரூபாய் தாளானது 129 x 63 மி.மீ எனும் அளவில் பசும் மஞ்சள் நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் எல்லோராக் குகைகள் படத்துடன் 2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் 26 அன்று வெளியிடப்பட்டது.
* ஐம்பது ரூபாய் தாளானது 135 x 66 மி.மீ எனும் அளவில் உடனொளிர் நீல நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் ஹம்பியின் கல்ரதம் படத்துடன் 2017 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 18 அன்று வெளியிடப்பட்டது.
* நூறு ரூபாய் தாளானது 142 x 66 மி.மீ எனும் அளவில் லாவெண்டர் நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் குஜராத்திலுள்ள மகாராணியின் கிணறு படத்துடன் 2018 ஆம் ஆண்டு, ஜூலை 19 அன்று வெளியிடப்பட்டது.
* இருநூறு ரூபாய் தாளானது 146 x 66 மி.மீ எனும் அளவில் ஒளிர் மஞ்சள் நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் சாஞ்சி தூபி படத்துடன் 2017 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25 அன்று வெளியிடப்பட்டது.
* ஐநூறு ரூபாய் தாளானது 150 x 66 மி.மீ எனும் அளவில் கற்சாம்பல் நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் செங்கோட்டை படத்துடன் 2016 ஆம் ஆண்டு, நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்டது.
* இரண்டாயிரம் ரூபாய் தாளானது 166 x 66 மி.மீ எனும் அளவில் ஒண்சிவப்பு நிறத்தில் முன்பகுதியில் மகாத்மா காந்தி படமும், பின்பகுதியில் மங்கள்யாண் படத்துடன் 2016 ஆம் ஆண்டு, நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்டது.
தற்போது இரண்டாயிரம் ரூபாய் தாள் புழக்கத்தில் இல்லை.