
பணத்தைச் சேர்ப்பதிலும் துன்பம்; சேர்த்த பணத்தைக் காப்பதிலும் துன்பம்; அதை இழந்து விட்டாலும் துன்பம்; செலவிட்டு விட்டாலும் துன்பம். பணத்தால் எபோதும் துன்பமே உண்டாகிறது.

பழக்கிய யானைகளைக் கொண்டு காட்டு யானைகளைப் பிடிப்பதுபோல பணத்தைப் போட்டுத்தான் பணத்தை ஈட்ட வேண்டும்.

செல்வம் சேர்ந்தவனிடம் அகம்பாவம் சேரும். உணர்ச்சி வசப்படுபவன் ஆபத்தில் சிக்கிக் கொள்வான்.

தன்னிடம் குவிந்த செல்வத்தை, தானும் அனுபவிக்காமல், நற்காரியங்களுக்கும் செலவிடாமல் இருப்பவன் சுகம் பெற மாட்டான். அவன் பணம் படைத்த முட்டாள்.

சிங்கத்துக்கு அரசனாக முடிசூட்டு விழாவோ, சடங்குகளோ விலங்குகள் செய்து வைக்கவில்லை. தன்னுடைய பராக்கிரமத்தால் அல்லவோ சிங்கம் அரச பதவி வகிக்கிறது.

பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை; முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்று இல்லை; கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்று இல்லை; அன்போடு பேசுபவர்களுக்கு அன்னியன் என ஒருவரும் இல்லை.

சமய சந்தர்ப்பம் தெரியாமல் பிருகஸ்பதியே பேசினாலும் அவன் வெகுமதி பெறாமல் போவது மட்டும் அல்லாமல் வெறுப்பையும் தேடிக் கொள்கிறான்.

குதிரை, ஆயுதம், வீணை, சொல், புத்தகம், ஆண், பெண் இவை அனைத்தும் பயன்படுவதும், பயன்படாமல் போவதும் உபயோகிப்பவரின் திறனைப் பொறுத்து உள்ளது.

பிரம்மாவே பயமுறுத்தினாலும் தைரியசாலி தைரியத்தைக் கைவிடுவதில்லை. கோடை கால வெயில் குட்டையைத்தான் வற்றச் செய்யும். பெரும நதிகளோ, எப்போதும் பெருகி ஓடிக் கொண்டேயிருக்கும்.

நெருக்கடி இல்லாத சாதாரண காலத்தில் எல்லோரும் அறிவாளிகளாக இருக்க முடியும்.

அரசனின் அருகில் இருந்து ஊழியம் செய்பவன், நல்ல குடும்பத்தில் பிறக்காதவனாகவோ, மூடனாகவோ, கருணை இல்லாதவனாகவோ இருந்தாலும் அவனை எல்லோரும் மதிக்கிறார்கள்.