இவ்வுலகில் 63 விலங்கு வகுப்புகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளன. இவற்றில் 51 வகுப்புகள் கடலில் வாழ்கின்றன. இவை 1,50,000 வகைகள் அடங்கிய கடல் விலங்குகளாகும். இந்த வகைகளில் 60,000 வகைகள் என்று நத்தை இனம் முதலிடத்தில் இருக்கிறது. இதனையடுத்து இருப்பது, 20,000 வகை நண்டினங்கள் ஆகும். அடுத்து மீன்களில் 16,000 வகைகள் இருக்கின்றன. ஏனைய வகைகள் மீதி கடல் உயிர்களாகும். மேலும், உலகக் கடல்களில் 300 ஆயிரம் வேறுபட்ட உயிர்கள் வாழ்கின்றன. கடல் ஆராய்ச்சியின் விளைவாக 100 புதிய கடல் உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
மேலும் கடல் குறித்து சில வியப்புச் செய்திகள்:
* உலகின் 7 இல் 5 பங்கு கடலாலானது.
* உலக எண்ணெய் உற்பத்தியில் 6 இல் ஒரு பங்கு கடல் படுகையிலிருந்து கிடைக்கிறது.
* உலகக் கடல் நீரின் அளவு 329 மில்லியன் கன அலகுகள். கடலில் உணவு உண்டாக்கும் தாவரங்களில் பாதி டையாட்டம்கள், கடலில் காணப்படும் பிளாங்டான் முதல் நிலை உணவு உற்பத்தியாளர்கள். இவை மீன், திமிங்கிலம் முதலிய கடல் உயிர்களுக்கு உணவாகும்.
* கடல் விலங்குகளும் தாவரங்களும் சிறந்த மருந்துகளையும் தருகின்றன. எடுத்துக்காட்டுகளாக;
* பட்டர் மீனிலிருந்து கிடைக்கும் நஞ்சு மிக்க கடுமையானது. ஆனால், அது மருந்தாகப் பயன்படும்பொழுது நன்மை விளைவிக்கிறது. இந்நஞ்சிலிருந்து தயாரிக்கப்படும் எட்ரோடோசின் ஆற்றல் வாய்ந்த வலி நீக்கி. இது ஜப்பானில் அதிக அளவுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
* கடல் பூண்டுகள் கடலில் அதிகம் உள்ளன. இவற்றிலிருந்து கிடைக்கும் காரம் ஆல்ஜின். இது பல வகைப் பொருள்கள் செய்வதில் பயன்படுகிறது. அவை:
1. பொருள்களைச் சுற்றும் தீப்பற்றாத தாள் செய்யப் பயன்படுகிறது.
2. உணவுப் பொருள், மருந்துகள், வண்ணங்கள், வாசனைப் பொருள்கள் ஆகியவற்றில் பயன்படுகிறது.
3. அறுவையின் போது இரத்தக் கசிவை நிறுத்தப் பயன்படுகிறது.