முழு அரிச்சுவடி வாக்கியம் (Pangram) என்பது ஒரு மொழியின் அரிச்சுவடியிலுள்ள அனைத்து எழுத்துக்களாலும் அமைக்கப்பட்ட சொற்றொடரைக் குறிக்கும். இது அச்செழுத்தின் வடிவத்தை காட்ட, அச்செழுத்து கருவியைப் பரிசோதிக்க, கையெழுத்து, வனப்பெழுத்து மற்றும் தட்டச்சுத் திறனை வளர்க்க என்று பயன்படுத்தப்பட்டது.
தற்போது புதிய எழுத்துருக்களை உருவாக்கும் போது, அனைத்து எழுத்துகளின் தோற்றத்தையும் சரி பார்க்க உதவுகிறது. மொழி கற்றலில், அனைத்தும் ஒரே சொற்றொடரில் பயிற்சி செய்ய உதவுகிறது. கணினிப் பயன்பாட்டில் விசைப்பலகை வடிவமைப்புகள் மற்றும் எழுத்துணரி மென்பொருட்களைப் பரிசோதித்துப் பார்க்க உதவுகிறது.
ஆங்கிலத்தில் "The quick brown fox jumps over the lazy dog" எனும் முழு அரிச்சுவடி வாக்கியம் அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கிறது. இந்த முழு அரிச்சுவடி வாக்கியத்தில் 35 எழுத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியிலான 26 எழுத்துகளும் இடம் பெற்றிருக்கின்றன. இதில் O எனும எழுத்து 4 முறையும், E எனும் எழுத்து 3 முறையும் R எனும் எழுத்து 2 முறையும், T எனும் எழுத்து 2 முறையும் H எனும் எழுத்து 2 முறையும், U எனும் எழுத்து 2 முறையும் இடம் பெற்றிருக்கின்றன.
ஆங்கிலத்தில் "Blowzy night-frumps vex'd Jack Q." அல்லது "Mr. Jock, TV quiz PhD, bags few lynx" எனும் சொற்றொடர், ஆங்கில 26 எழுத்துகளையும் கொண்டு சரியாக அமைக்கப்பட்ட முழு அரிச்சுவடி வாக்கியம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இச்சொற்றொடர்களைப் புரிந்து கொள்வதில் சில சவால்களும் இருக்கின்றன. cwm எனும் சொல் வேல்ஸ் மொழியின் கடன் சொல். இச்சொல்லுக்கு ஆம்பிதியேட்டர் (Amphitheatre) போன்ற பனி படர்ந்த மனச்சோர்வு என்று பொருள்படும். vext என்பது வெக்ஸ்ட் என்று உச்சரிக்க ஒரு அசாதாரணமான வழியாகும், மேலும் வினாடி வினா என்பது ஒரு புதிரான அல்லது விசித்திரமான நபரைக் குறிக்க தொன்மையான பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்கிற குறைபாடுகளும் சொல்லப்படுகின்றன.
டச்சு மொழியில், "Lynx c.q. vos prikt bh: dag zwemjuf!", இடாய்ச்சு மொழியில், "Victor jagt zwölf Boxkämpfer quer über den großen Sylter Deich", பிரெஞ்சு மொழியில், "Portez ce vieux whisky au juge blond qui fume" எனும் சொற்றொடர்கள் முழு அரிச்சுவடி வாக்கியங்களாக இருக்கின்றன.
இதே போன்று, அஜர்பைஜனி, செக், டேனிஷ், எஸ்பெரண்டோ, எஸ்டோனியன், ஏவ், பின்னிஷ், பிரெஞ்ச், ஜெர்மன், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இந்தோனேசியா, ஐரிஷ், இத்தாலியன், குர்திஷ், மலாய், போலிஷ், போர்த்துக்கீசு, ரோமானியன், செர்பியன், ஸ்பானிஷ், சுலோவாக், துர்க்கிஷ், அரபி, ஆர்மேனியன், பெலாரஸ், பல்கேரியா, ஜியார்ஜியா, ஹூப்ரு, ரசியா மற்றும் தாய் மொழிகளிலும் முழு அரிச்சுவடி வாக்கியங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இத்தனை மொழிகளில் முழு அரிச்சுவடி வாக்கியங்கள் இருப்பது பற்றித் தெரிகிறது. தமிழ் மொழியில் முழு அரிச்சுவடி வாக்கியம் உருவாக்கப்பட்டிருக்கிறதா? என்றுதானேக் கேட்கிறீர்கள்…!
தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துகள் 18, உயிர்மெய்யெழுத்துகள் 216 மற்றும் ஆயுத எழுத்து 1 என்று எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை 247 ஆக இருப்பதால் இது மிகப்பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. மேலும், தமிழ் மொழியின் அமைப்பு, ஆங்கில மொழியிலிருந்து வேறுபட்டது. சில எழுத்துகளை ஒரே வாக்கியத்தில் இயல்பாகச் சேர்ப்பது கடினம். அனைத்து எழுத்துகளையும் சேர்த்து, பொருளுடனும் இலக்கணத்துடனும் சரியான சொற்றொடரை உருவாக்குவது மிகக் கடினமானதுதான்.
எழுத்தாளர்களும், மொழியியல் வல்லுநர்களும் தமிழில் முழு அரிச்சுவடி வாக்கியம் ஒன்றை உருவாக்க முயன்றிருக்கின்றனர். அவர்களது முயற்சியில், அதிகமான எழுத்துகளைக் கொண்ட வாக்கியம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்”
இது பல எழுத்துக்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால், அனைத்தையும் அல்ல.
“அஃகேனை மாஞாழை போர்வையிட்டு, கொஃகொன்னும் பூஞ்சோலையில் குயில் கூவும்”
இது மற்றொரு முயற்சி, ஆனால் இதிலும் பல எழுத்துகள் விடுபட்டுள்ளன.
தமிழில் முழு அரிச்சுவடி வாக்கியம் உருவாக்க, இன்றிலிருந்து நீங்களும் முயற்சிக்கலாம்…!