“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என ஆத்திச்சூடியில் ஔவையார் பாடியிருக்கிறார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்குச் சமமாகப் பார்க்கப்படுபவர். ஆசிரியர்கள், மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள். ஆசிரியர்கள், வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்பித்து மாணவர்களுக்கு ஓர் உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள். ஒரு மாணவனைத் தன்னம்பிக்கை மிகுந்த மனிதனாக ஆக்குவது ஆசிரியர்கள்தான். இப்படி, மாணவர்களின் வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிப்பதால்தான் ஆசிரியர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள்.
இருப்பினும், ஆசிரியர்களில் நல்லாசிரியர்கள் யார்? தகுதியில்லாத ஆசிரியர்கள் யார்? என்று பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் விளக்குகிறது.
நல்லாசிரியர் இயல்புகள்
நன்னூலில் இடம் பெற்றிருக்கும் 26 முதல் 30 வரையிலான பாடல்கள், கீழ்க்காணும் இயல்புகளை நல்லாசிரியர்களின் இயல்புகளாகப் பட்டியலிடுகின்றன.
* கொடைக்குணம் உடைய குலத்தில் பிறந்தவர்.
* இரக்கம் மற்றும் அன்பு காட்டும் அருள் உடையவர்.
* தெய்வத்தன்மை கொண்டவர்.
* கற்பிக்கும் கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர்.
* மக்களில் மேம்பட்டவர்.
* பெருமை, திண்மை, தாங்கும் தன்மை ஆகியன கொண்ட நிலம் போன்ற பண்புள்ளவராய் மாணவரின் முயற்சிக்கு ஏற்பப் பலன் தருபவராதல்.
* மலை போல் அளக்க முடியாத கல்வி வளம், அசையாத் தன்மை, (மாணவன்) வறண்ட காலத்திலும் வழங்கும் தன்மை கொண்டவராதல்.
* துலாக்கோல் போல எல்லா மாணாக்கரையும் சமமாக நோக்குதல்.
* மலர் போல் அனைவர்க்கும் மகிழ்வும் மணமும் தருதல்.
* உலகியல் அறிவு பெற்றிருத்தல்.
* உயர்குணம் உடைமை.
தகுதியில்லா ஆசிரியர்கள் இயல்புகள்
நன்னூலில் இடம் பெற்றிருக்கும் 31 முதல் 35 வரையிலான பாடல்கள், கீழ்க்காணும் இயல்புகளை நல்லாசிரியர்களின் இயல்புகளாகப் பட்டியலிடுகின்றன.
* கற்றுத்தரும் குணம் இல்லாமை, இழிந்த பண்புகள் உடைமை, அழுக்காறு, அவா, வஞ்சம், அச்சம், மடமை போன்ற குணமுள்ளவர்.
* இறங்கும் பதநீரைக் கள்ளாக்கும் கள்ளுக்குடம் போன்றவர்.
* தானே விழுந்தாலன்றி ஏறிப் பறிக்க முடியாத கருக்குப் பனைமரம் போன்றவர்.
* கொடுப்பதை வாங்கிக் கொண்டு உடைத்தால் மட்டுமே தரும் பருத்திக் குண்டிகை என்னும் உண்டியல் போன்றவர்.
* ஒருவர் வீட்டு நீரால் சாய்ந்து வளர்ந்து தேங்காயை அடுத்தவர் வீட்டில் விழச் செய்யும் முடத்தெங்கு போன்றவர்.
மேற்காணும் நல்லாசிரியர் இயல்புகளுடன் இருக்கும் ஆசிரியர்களை நாம் வாழ்த்தலாம். தகுதியில்லாத ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொண்டு, நல்லாசிரியர்களாகி வாழ்த்தைப் பெற முயற்சிக்கலாம்...!