மலையின் உச்சியிலிருந்து பார்க்கையில் பூமியின் தாவரப் பகுதிகள் அனைத்தும் பசுமையாகத் தென்படும். அருகில் சென்றால் பலவிதமான மரங்களையும் செடிகளையும் கொடிகளையும் பயிர்களையும் காணலாம். அந்தத் தாவர உலகில் உள்ளவற்றை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.
1. உலகிலிருந்து பயனைக் குறைவாக எடுத்து அதிகமாக நன்மையை உலகிற்குக் கொடுப்பவை. உதாரணம்: ஆலமரம், அரசமரம், வாழை, தென்னை போன்றவை.
2. எடுக்கும் அளவுக்குக் கொடுப்பவை. உதாரணம்: நெல், கரும்பு போன்ற பயிர் வகைகள்.
3. நிறைய எடுப்பவை; ஆனால் குறைவாகக் கொடுப்பவை. உதாரணம்: அழகுத் தாவரங்கள். இவை அழகுக்காகவே அதிகச் செலவில் பராமரிக்கப்படும். வேறு பலன் இருக்காது.
4. நிறைய எடுத்தும் ஒன்றும் தராமல் தொந்தரவு அளிப்பவை. உதாரணம்: ஒட்டுண்ணிகள், களைகள் போன்றவை.
5. எடுக்கிறதோ இல்லையோ, ஆனால் கெடுதலை மட்டும் தருபவை. உதாரணம்: விசச்செடிகள், முள் மரங்கள்.
தாவரங்களில் உள்ளது போன்று மனிதர்களிடத்திலும் இது போன்ற ஐந்து வகைகளைக் காணலாம்.
முதல் வகை
மகான்கள். இத்தகையோர் இவ்வுலகில் எவ்விதப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மானிட சமுதாய உயர்வுக்காகத் தங்களையும், தங்களது சக்திகளையும் உலகிற்கு அர்ப்பணிப்பவர்கள். இவர்கள் தங்களுக்காக உலகிலிருந்து பெறுவது மிகக் குறைவு.
இரண்டாவது வகை
சமூக சேவகர்கள், தேசபக்தர்கள், கர்மவீரர்கள். இவர்கள் சமூகத்திலிருந்து பெறுகின்ற நன்கொடைகளிலிருந்தும் தமது சொத்துக்கள் போன்றவற்றிலிருந்தும், சமூக நலனுக்குச் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்தவர்கள்.
மூன்றாவது வகை
சுயநலவாதிகள். தங்களால் முடிந்த அளவிற்கு உலகத்திலிருந்து ஏராளமான பணத்தையும் சொத்துக்களையும் சேகரித்துக் குவிப்பதிலேயே கண்ணாக இருப்பார்கள். பெயரளவிற்கு அல்லது ஆதாயத்திற்குக் குறைந்த நன்மைகளைச் சமூகத்திற்குச் செய்வார்கள். இவர்கள் பெயர்கள் அச்சமுதாயத்தைச் சேர்ந்தோர் மத்தியில் பரவலாக இருக்கும்.
நான்காவது வகை
களைகள் போன்று பிறரை அண்டிப் பிழைப்பவர்கள். தீயவர்களிடம் அடியாட்களாக இருந்து, தான் வாழும் சமூகத்திற்குத் தொந்தரவு அளிப்பவர்கள்.
ஐந்தாவது வகை
தீவிரவாதிகள், சமூக விரோதிகள். இத்தகையோர் உலகிற்குத் தீங்கையும் கெடுதலையும் மட்டுமே விளைவிப்பார்கள்.