துஷ்டர்களை நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள். இந்த நான்கு வகையினருக்கும் மகாபாரதத்தில் உதாரணம் இருக்கிறது.
முதல் வகைக்கு உதாரணம் சகுனி.
இவன் மனதில் எப்போதும் தீய எண்ணங்களே நிறைந்திருக்கும். கனவில் கூட தீய ஆலோசனைகள். யாராவது ஒருவர் நல்லவிதமாக வாழ்ந்தால் அதை இவனால் சகித்துக் கொள்ள முடியாது. இப்படிப்பட்டவனுடைய நெருங்கிய தொடர்பு துரியோதனனுக்குக் கிடைத்தது. துரியோதனன் ஏற்கனவேத் தீய காரியங்கள் செய்வதற்குத் தயங்காதவன். அப்படிப்பட்டவனுக்கு மேலும் தீய போதனைகள் செய்து சகுனி உதவினான்.
இந்த இரண்டு பேருடன் தொடர்பு இன்னொருவனுக்குக் கிடைத்தது. அவன் துச்சாதனன். அவன் தீய நடத்தை உள்ளவன். இப்படிப்பட்ட மூன்று பேரும் ஒன்றாகச் சேர்ந்தால் என்ன ஆகும்? உலகமேக் கெட்டுப் போய்விடும். இந்த மூன்று துஷ்டர்களோடு நல்லவன் கர்ணன் வந்து சேர்ந்தான்.
கர்ணன் இயல்பாகவே உத்தமக் குணம் வாய்ந்தவன். அவன் நல்லவர்களுடன் சேராமல் இப்படிப்பட்ட தீயவர்களுடன் சேர்ந்து 'நட்பு' வைத்துக் கொண்டான். ஆதலால் அவனும் தீய செயல்களில் ஈடுபட வேண்டியதாயிற்று. "துரியோதனனுடைய நண்பனாக, அவனுடைய ஆதரவில் வளர்ந்ததால் நான் அவனுக்குத் துணையாக இருக்க வேண்டியிருக்கிறது'' என்றான்.
நட்புரிமை காரணமாக உதவி செய்ய வேண்டும் என்பது சரிதான். அதைத் தவறு என்றும் சொல்ல முடியாது. இருந்தாலும் தீய செயல்களுக்கு உதவி செய்வது சரியில்லை. புத்திபலம், புஜபலம், எல்லாம் இருந்தாலும் கூட தெய்வப் பலம் இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது என்பது பெரியோர்களின் கருத்து. கர்ணன் மகாவீரன். இருப்பினும் கடைசியில் அவன் கதி...?
ஏன் இப்படி ஆயிற்று? தீயவர்களின் சேர்க்கைதான் காரணம். தீயவர்களோடு சேர்ந்திருந்ததால் இவனையும் மக்கள் தீயவன் என்றே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். நான்கு வகை துஷ்டர்களில் இவனும் ஒரு வகை என்று கர்ணனை இப்போது சொல்கிறார்கள். அதாவது, தீய ஆலோசனைகளுக்கு சகுனி; தீய உணர்வுகளுக்கு துரியோதனன்; தீய செய்கைக்கு துச்சாதனன்; தீய நட்புக்கு கர்ணன் என்று இப்படி இவர்களோடு கர்ணனும் சேர்ந்து ஒரு தீய உதாரணமாக ஆகிவிட்டான்.
அதனால்தான், ''துஷ்டரைக் கண்டால் தூர விலகு!'' என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.