லூயி பாஸ்டருக்கு உதவியாளராக இருந்தவர் பிரெஞ்சு விஞ்ஞானி ஹிலேர் டிசார்டோனெட். அவர் ஒரு கண்ணாடிக் குடுவையிலிருந்த கொல்லேடியான் என்ற திரவத்தைத் தவறிக் கீழே கொட்டிய போது அதிலிருந்து நூல் போன்ற இழைகளை இழுக்க முடிந்தது. ரேயான் என்ற மிக மிருதுவான நூல் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்.
இவ்வாறு ஏதோ ஒன்றைச் செய்ய முயலும்போது தவறுதலாகவோ, எதிர்பாராமலோ வேறு ஒன்றைக் கண்டுபிடித்தால் அதனை ஆங்கிலத்தில் Serentipity என்பார்கள்.
இப்படிப்பட்ட ஒரு வழக்கு சமஸ்கிருத மொழியிலும் உள்ளது. அது குணாக்ஷர நியாய: என்பதாகும்.
உதாரணமாக செல்லுப்பூச்சி, மரத்தைத் துளைக்கும் போது அது துளைக்கும் இடங்கள் ஓர் உருவத்தைப் போலவோ, எழுத்துக்களைப் போலவோ வடிவம் பெறுவதுண்டு. இவ்வாறு ஏதேனும் ஒரு வேலையைச் செய்யும் போது கருதப்படாத வேறொன்று தோன்றினால் அதை குணாக்ஷர நியாய: என்பார்கள்.
இந்த வகையில் எத்தனையோ விஞ்ஞானப் புதுமைகள் தோன்றியிருக்கின்றன.
அறுகோண வடிவில் சில செப்புக் குழாய்களைச் சேர்க்கும்போது, காரில் உபயோகமாகும் ரேடியேட்டர் என்ற சாதனம் பிறந்தது. பிளாஸ்டிக்கும் இப்படித் தற்செயலாகக் கண்டு பிடிக்கப்பட்டதுதான். ஏன் சாக்லேட், சிப்ஸ், குக்கீஸ் என்னும் பிஸ்கெட் வகைகளும் இவ்வகையில் கண்டுபிடிக்கப்பட்டவைதான்.
இந்த வார்த்தையை இத்தாலி, ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் முறையே செரண்டிபிடிடா, செரன்டிபிடேட், செரண்டிபியா என்று கூறுகிறார்கள். தமிழில் இதனை எதிர்பாராப் புத்தாக்கம் என்கின்றனர்.