ஆங்கில வருடங்களில் எந்த வருடமானாலும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதிக்குக் கிழமை கண்டுபிடிக்க ஒரு எளிய வழிமுறை இருக்கிறது . அதைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க...
1 வருடத்திற்கு 365 நாட்கள்
1லீப் வருடத்திற்கு 366 நாட்கள்
1 வாரத்திற்கு 7 நாட்கள்
கிழமைகள் 7 நாட்களுக்கு ஒரு முறை திரும்பத் திரும்பச் சுழற்சியாக வரும். ஆகவே ஒரு வருடத்தின் மொத்த நாட்களான 365 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும்.
365/7 = ஈவு 52 மீதி 1
இங்கு ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
(1)ஒரு வருடத்திற்கு மீதம் -1 நாள்
(2)100 வருடத்திற்கு மீதம் – 100 நாள்
(100*1=100)
(3) 100 வருடங்களில் 24 லீப் வருடங்கள் வரும். லீப் வருடங்களில் வரும் அதிக நாட்கள் -24 நாட்கள்
(2)+(3) = 100+24= 124 நாட்கள்
இந்த 124ஐ திரும்பவும் 7 ஆல் வகுக்க வேண்டும்.
124/7= ஈவு 17 மீதி 5
ஈவைத் தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
எனவே
(அ) 100 வருடங்களுக்கு மீதம் – 5 நாட்கள்
(ஆ) 400 வருடங்களுக்கு மீதம் (4*5=20) – 20 நாட்கள்
(இ) 400 வது வருடம் லீப் வருடமாகும் ஆகவே அதிக நாட்கள் – 1 நாள்
(100 வது, 200வது, 300வது வருடங்கள் லீப் வருடங்கள் இல்லை)
(ஆ)+(இ) = 20+1=21 நாட்கள்
இந்த 21 ஐ திரும்பவும் 7 ஆல் வகுக்க வேண்டும்.
21/7= ஈவு 3 மீதம் 0
இங்கே நினைவில் வைக்க வேண்டியது:
100 வருடங்களுக்கு மீதம்- 5 நாட்கள்
400 வருடங்களுக்கு மீதம்- 0 நாட்கள்
எந்த வருடத்தில் எந்தத் தேதிக்கு, என்ன கிழமை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமோ, அந்த வருடத்திற்கு முந்தைய வருடதிற்கான மீத நாட்களைக் கணக்கிட்டுக் கொண்டால் தேவையான ஆண்டில் வரும் தேதிக்கு கிழமையைக் கண்டு பிடிக்கலாம்.
உதாரணமாக;
21-03-1999 அன்று என்ன கிழமை என்று பார்ப்போம்.
முதலில் 1999 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டான 1998 க்கு மீத நாட்கள் எத்தனை என்று பார்ப்போம்.
1998 ஐக் கீழ் கண்டவாறு பிரித்து எழுதிக்கொள்ள வேண்டும்.
(i) 4x400 = 1600 வருடங்களுக்கு மீதம் - 4x0 = 0 நாட்கள்
(ii) 3x100 = 300 வருடங்களுக்கு மீதம் - 3x5 = 15 நாட்கள்
(iii) மீதமுள்ள 98 வருடங்களுக்கு மீதம் - 98 நாட்கள்
(iv) 1900 முதல் 1998 வரை லீப் வருடங்கள் (98/4= 24 வருடங்கள்), 24 வருடங்களுக்கு அதிக நாட்கள் = 24 நாட்கள்
(i) + (ii) + (iii) + (iv) = 0+15+98+24 = 137 நாட்கள்
இதனை 7 ஆல் வகுக்க வேண்டும்
137/7 = ஈவு 19, மீதி 4 நாட்கள்
இங்கு மீதத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
தற்போது, 21-03-1999 ஆம் நாளுக்கு என்ன கிழமை என்று பார்க்கலாம்.
1998 ஆம் ஆண்டின் மீதம் - 4 நாட்கள்
1999 ஆம் ஆண்டு ஜனவரி - 31 நாட்கள்
1999 ஆம் ஆண்டு பிப்ரவரி - 28 நாட்கள்
1999 ஆம் ஆண்டு மார்ச் 21 வரை - 21 நாட்கள்
இந்த நாட்களைக் கூட்டினால் = 4+31+28+21= 84 நாட்கள்
இதனை 7 ஆல் வகுக்க (84/7) = ஈவு 12, மீதம் 0 நாட்கள்
ஈவை தள்ளிவிட்டு மீதத்தை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
மீதி 0 வந்தால் ஞாயிற்றுக்கிழமை
மீதி 1 வந்தால் திங்கள் கிழமை
மீதி 2 வந்தால் செவ்வாய்க்கிழமை
மீதி 3 வந்தால் புதன் கிழமை
மீதி 4 வந்தால் வியாழக்கிழமை
மீதி 5 வந்தால் வெள்ளிக்கிழமை
மீதி 6 வந்தால் சனிக்கிழமை
நாம் உதாரணமாக எடுத்துக்கொண்ட 21-03-1999 அன்று மீதி 0 வருவதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாகும்.
இவ்வாறு எந்த வருடத்தில் உள்ள தேதியானாலும் கிழமை கண்டு பிடித்துக்கொள்ளலாம்.