ஒரு பழக்கடைக்காரர் மாம்பழங்களை விற்று வந்தார்.
அவர் சிறிது அசந்திருந்த நேரம், அங்கு வந்த சில சிறுவர்கள் அங்கிருந்த மாம்பழங்களில் சில மாம்பழங்களை அவருக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டனர்.
பழக்கடைக்காரர் அரசனிடம் சென்று முறையிட்டார்.
அரசன் உன்னிடம் எத்தனை பழங்கள் இருந்தன? என்று கேட்டார்.
அதற்குப் பழக்கடைக்காரர், “அரசே, எனக்குக் கணக்கு தெரியது. ஆனால் என்னிடம் இருந்த பழங்களை இரண்டு இரண்டாகப் பிரித்தால் ஒரு பழம் மிஞ்சும். மூன்று மூன்றாகப் பிரித்தால் இரண்டு பழம் மிஞ்சும். நான்கு நான்காகப் பிரித்தால் ஒரு பழம் மிஞ்சும். ஐந்து ஐந்தாகப் பிரித்தால் நான்கு பழம் மிஞ்சும். ஆறு ஆறாகப் பிரித்தால் ஐந்து பழம் மிஞ்சும். ஏழு ஏழாகப் பிரித்தால் ஒன்றும் மிஞ்சாது” என்றார்.
அரசனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.
அங்கிருந்த அமைச்சர் அரசனுக்குப் பழக்கடைக்காரரிடமிருந்த பழங்களின் எண்ணிக்கையை விளக்கிச் சொன்னார்.
அமைச்சர் சொன்ன பழங்களின் எண்ணிக்கை, உங்களுக்குத் தெரியுமா ?
தெரிந்தால் சொல்லுங்கள். தெரியா விட்டால், அமைச்சர் சொன்ன விடையைப் பார்க்கலாம்.
அமைச்சர் சொன்ன விடை இதுதான்:
7 - ன் மடங்குகள் 7,14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70, 77, 84, 91, 98,105,112,119,126 ... ... ...
2 ஆல் வகுத்தால் 1 மீதம் வருவது - 7, 21, 35, 49, 63, 77, 91, 105,119 ... ... ...
3 ஆல் வகுத்தால் 2 மீதம் வருவது - 35, 77,119 ... ... ...
4 ஆல் வகுத்தால் 3 மீதம் வருவது : 35,119 ... ... ...
5 ஆல் வகுத்தால் 4 மீதம் வருவது : 119 ... ... ...
6 ஆல் வகுத்தால் 5 மீதம் வருவது : 119 ... ... ...
7 ஆல் வகுத்தால் மீதம் வராது.
எனவே, பழக்கடைக்காரரிடமிருந்த மாம்பழங்களின் எண்ணிக்கை - 119 ஆகும்.