ஒரு மாந்தோப்பில் நுழைந்த கதிரேசன், காவலாளிக்குத் தெரியாமல் அங்கிருந்த மாம்பழங்களைப் பறித்து ஒரு பையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
அப்போது, அங்கு வந்த சுந்தரம், அதைப் பார்த்து, ‘மாம்பழங்களைத் திருடி வருகிறாயா? நான் காவலாளியிடம் சொல்லப் போகிறேன்’ என்றான்.
அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கதிரேசன், அவனிடம் பேசி தன்னிடமிருக்கும் மாம்பழங்களைச் சரியளவாகப் பகிர்ந்து அவனுக்குத் தருவதாகச் சொன்னான்.
சுந்தரம் அதற்கு ஒத்துக் கொண்டதால், கதிரேசன் கொண்டு வந்த மாம்பழங்களை இரண்டு பங்காக வைத்து, பாதியைச் சுந்தரத்திடம் கொடுத்து விட்டு, தனது பங்கு மாம்பழத்தில் ஒன்றை அங்கேயேத் தின்று விட்டுத் தொடர்ந்து நடந்தான்.
சிறிது தூரம் செல்வதற்குள் அங்கு வந்த அய்யப்பன், நீங்கள் மாந்தோப்பிற்குள் சென்றதை நான் பார்த்தேன். எனக்குத் தங்களிடமிருக்கும் மாம்பழங்களில் பாதியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், காவலாளியிடம் காட்டிக் கொடுத்து விடுவதாகச் சொன்னான்.
பந்து போன கதிரேசன், அவனுக்குத் தன்னிடமிருக்கும் மாம்பழங்களில் பாதியைக் கொடுத்தான். தனது பங்கு மாம்பழங்களில் ஒன்றை அங்கேயேத் தின்று விட்டுக் கிளம்பினான்.
அப்போது அங்கு வந்த பரமசிவன், மாந்தோப்பில் நீ திருடியதை நான் இங்கிருந்து பார்த்தேன் என்றான்.
உடனே கதிரேசன் அவனிடம் சமாதானம் பேசி, தன்னிடமிருந்த மாம்பழங்களில் பாதியைப் பரமசிவத்திடம் கொடுத்துவிட்டு, தனது பங்கு மாம்பழங்களில் ஒன்றை அங்கேயேத் தின்று விட்டுக் கிளம்பினான்.
கதிரேசன் நடக்கும் போது, பாண்டி வந்தான். அவனும் மாந்தோப்பில் நுழைந்து திருடியதைக் காவலாளியிடம் சொல்லாமலிருக்க, தனக்கும் பாதி மாம்பழங்கள் தர வேண்டும் என்றான்.
கதிரேசனும் வேறு வழியின்றி, அவனுக்கும் தன்னிடமிருந்த மாம்பழங்களைப் பாதியாகப் பகிர்ந்து கொடுத்தான். பின்னர் தன்னிடமிருந்த மாம்பழங்களில் ஒன்றை அங்கேயேத் தின்றான்.
கடைசியாக, வீட்டிற்குச் சென்ற அவன், மனைவியிடம் மீதமிருந்த ஒரு பழத்தைத் தந்தான்.
அப்படியானால், கதிரேசன் மாந்தோப்பில் திருடிய மாம்பழங்கள் எத்தனை? என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
என்னது ஒரேக் குழப்பமா இருக்குதா...? வாங்க, விடையைக் கண்டுபிடிக்கலாம்.
கதிரேசன் வழியில் தன்னிடமிருந்த பழங்களைப் பாதியளவு கொடுத்தது மற்றும் அவ்வப்போது ஒரு பழம் தின்றுவிட கடைசியாக மனைவியிடம் கொடுத்தது ஒன்று.
கதிரேசன் கடைசியாகத் தின்றது மற்றும் மனைவியிடம் கொடுத்தது சேர்ந்து இரண்டு. அப்படியானால், கதிரேசன் பாண்டிக்குக் கொடுத்தது இரண்டு. அதற்கு முன் கதிரேசனிடம் நான்கு பழங்கள் இருந்திருக்க வேண்டும்.
பரமசிவனுக்குக் கொடுப்பதற்கு முன்பாக கதிரேசன் தின்றது ஒன்று. அதைச் சேர்த்தால் ஐந்து. எனவே, பரமசிவனுக்குக் கொடுத்தது ஐந்து. அதற்கு முன்பாக, கதிரேசனிடன் பத்து மாம்பழங்கள் இருந்திருக்க வேண்டும்.
அய்யப்பனுக்குக் கொடுப்பதற்கு முன்பாக கதிரேசன் தின்றது ஒன்று. அதைச் சேர்த்தால் பதினொன்று. எனவே, அய்யப்பனுக்குக் கொடுத்தது பதினொன்று. அதற்கு முன்பாக, கதிரேசனிடன் இருபத்திரண்டு மாம்பழங்கள் இருந்திருக்க வேண்டும்.
சுந்தரத்துக்குக் கொடுப்பதற்கு முன்பாக கதிரேசன் தின்றது ஒன்று. அதைச் சேர்த்தால் இருபத்து மூன்று. எனவே, சுந்தரத்துக்குக் கொடுத்தது இருபத்து மூன்று. அதற்கு முன்பாக, கதிரேசனிடன் நாற்பத்து ஆறு மாம்பழங்கள் இருந்திருக்க வேண்டும்.
அட, இவ்வளவுதானா? இந்தக் கணக்கும் எளிமையாகத்தான் இருக்குது...!