உயர்வது தவறாது!
ஆம்பிக் கிடக்கும் ரொட்டித் துண்டுகள்
சாப்பிட உதவாது
சோம்பிக் கிடந்தால் வாழ்வில் யார்க்கும்
காரியம் நடக்காது
போர்த்திக் கொண்டு தூங்குவதாலே
கடுங்குளிர் விலகாது
வேர்க்க நடந்தால் மார்கழி மாதக்
குளிரும் தெரியாது
கண்ணிருந்தாலும் மூடிக் கிடந்தால்
காட்சிகள் தெரியாது
எண்ணம் இருந்தும் செயல் செய்யாவிடில்
ஏற்றம் கிடைக்காது
அயர்ந்து படுத்தால் சோறிருந்தாலும்
சாப்பிட முடியாது
முயற்சி தொடர்ந்தால் முடியாதென்பது
உலகில் கிடையாது
படுத்துக் கிடக்கும் மாடுகள் ஊரின்
பாதை அறியாது
பந்தயக் குதிரையை வண்டியில் பூட்ட
தூரம் தெரியாது
பிறக்கும் பிள்ளையில் பெரியவன் சிறியவன்
பேதம் கிடையாது
உறக்கம் குறைந்தவன் உழைப்பில் மிகுந்தவன்
உயர்வது தவறாது
- கவிஞர். செல்ல. கணபதி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.