நுரைக்குமிழ்
சின்னத் தம்பி கையிலொரு
சிரட்டை இருக்குது - சிறு
தென்னந் தும்பின் நூனியில் - போட்ட
துளையும் இருக்குது
சோப்பைக் கரைத்த நீரிலதை
தோய்த்து எடுத்து - வாயால்
பூப்பூ என்றே ஊதும் போது - நுரை
பலூனாய் பறந்தது.
சோப்பு நுரை பலூன் போலே
சுற்றிப் பறக்குது - பரந்து
தாப்புக் காட்டிக் காட்டி - எங்கும்
தத்திப் பறக்குது
வெள்ளிப் பந்து போலெழுந்து
வெளியில் துள்ளுது - அதை
அள்ளிப் பிடித்து அளையுமாசை - மனம்
ஆவல் கொள்ளுது.
வைரம் போலே ஜொலிஜொலித்து
வானம் அளக்குது - அந்த
நுரைக் குமிழில் உள்நிறைய - வளி
நுழைந்து பார்க்குது.
- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.