சொல்லி முடியுமோ உன் பெருமை!
நிலவு வருது நிலவு வருது
நீல வானில் மிதந்து வருது
உலவும் அதன் முகத்திலே
கலையாய் இருக்கு ஒரு மச்சம்
பார்ப்போர் கண்கள் பரவசத்தில்
பரவும் சோதி முகத்தினிலே
தன்னிகரில்லா தண்ணிலவு
தன்னலமில்லா தகையழகு
ஊருக்கெல்லம் ஒளி கொடுக்கும்
உயர்ந்த திருவுளம் கொண்டதது
அம்புலி நீயோ இருக்குமிடம்
அறியோம் எங்கும் சுற்றிடுவாய்
குடிசைக்கிடையே பாய்ந்தொளியை
கூட்டி ஏழையை மகிழ்த்திடுவாய்
அம்மா நாடுவாள் உன் தயவை
அழும் குழந்தைக்கு சோறூட்ட
கவிஞர் ரசிப்பார் உன்னழகை
கருத்துடன் கவிதை தேரோட்ட
அல்லியும் மலர்ந்திடும் உனைக்கண்டு
சொல்லி முடியுமோ உன் பெருமை
- சரஸ்வதிராசேந்திரன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.