தாய்மொழி
பாலூட்டக் கைப்பிள்ளை வளரும்
பாசமதை பிள்ளை மனம் உணரும்
தாலாட்ட அன்னைமொழி தெரியும்
தமிழென்ற மொழி இனிமை புரியும்
தாய்நாட்டில் தமிழ்மொழிதான் வேண்டும்
தாய்பேசும் மொழியன்றோ வேதம்
தாய்மொழியில் கற்கின்ற போது
தானாகப் புரிந்து கொள்ளத் தோது!
மொழிபெயர்த்துச் சொல்லாமல் என்றும்
மொழியறிவைப் புகட்டுபவள் அன்னை!
அழிவறியா ஆற்றலினை ஊட்டும்
அன்னைமொழி ஆராரோ பாட்டு!
சுதந்திரத்தை நாம்பெற்ற போதும்
சுதந்தரமாய்த் தாய்மொழியில் ஓதும்
சுதந்திரத்தைக் கொண்டாட வில்லை
சுமையாகப் பிறமொழியைக் கற்போம்!
தாய்மொழியால் சத்தியமாய்த் தகுதி
தானாக உயர்ந்துவிடும் மிகுதி!
தாய்மொழியில் கல்வியினைக் கற்போம்
சாதனையால் தலைநிமிர்ந்து நிற்போம்!
- கவிஞர். செல்ல. கணபதி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.