மூட ஆமை (கதைப் பாடல்)

அடர்ந்த காட்டு வளம்
அதன் நடுவே குளம்
அதில் மீனும் நண்டும் இருந்தது
அங்கே கம்பா ஆமை வசித்தது
அன்பாய்ப் பழகும் கம்பா
கோபம் நிற்கும் அதன் வம்பா
சங்கடன், விகடன் கொக்குகள்
ஆனார் அதன் நண்பர்கள்
கோடை காலம் வந்தது
வெயில் கடுமை கொண்டது
குளமும் வறண்டு நின்றது
மீனும் நண்டும் இறந்தது
கொக்கு பறக்கும்
ஆமை நீந்தும்
எப்படி உதவ முடியும்
உறுதி ஆமை மடியும்
கொக்குகள் கவலைப் பட்டது
நிலமை கண்டு துடித்தது
உதவ முடிவு செய்தது
திட்டம் ஒன்றை வகுத்தது
நண்பா நீயும் பாவம்
ஒன்றாய் நாமும் போவோம்
கூடித் திட்டம் வகுப்போம்
வேறு குளமே பார்ப்போம்.
தூரத்தில் குளமும் உண்டு
ரசித்தோம் அதனைக் கண்டு
மீன்களை நாமும் உண்டு
வாழ்வோம் மகிழ்ச்சி கொண்டு
கொக்கு யோசனை சொன்னது
தடியை வாயில் பிடித்து
செல்வோம் நங்கள் பறந்து
வருவாய் வாய்மூடி இருந்து
மீண்டும் எச்சரிக்கை செய்தது
ஆமை ஒத்துக் கொண்டது
நடுவில் கவ்விப் பிடித்து
ஆமை வானில் பறந்தது
மூன்றும் பறந்து சென்றன
மலைகள் கிராமம் கடந்தன
நகரம் வந்து சேர்ந்தன
மெல்ல அவைகள் சோர்ந்தன
நகர மக்கள் பார்த்தார்கள்
கை தட்டி ரசித்தார்கள்
கேலி பேசி சிரித்தார்கள்
பறக்கும் ஆமை என்றார்கள்
அதற்குக் கோபம் வந்தது
திட்ட வாயை திறந்தது
வேகமாக வீழ்ந்தது
பரிதாபமாக இறந்தது
ஆமை கொண்டது கோபம்
செத்து மடிந்தது பாவம்
வேண்டாம் எவர்க்கும் வேகம்
வேண்டும் நமக்கு விவேகம்.
- சி. அருள் ஜோசப் ராஜ், கடலூர்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.