விடுதலைப் போராட்ட வீரர்களைப் பாடு!!

பள்ளி செல்லும் பாப்பா உன்
தோழியரோடு செல்லடி பாப்பா! - நம்
பாரதச் சுதந்திரப் போரில் தமிழர்
செய்த பெரும் சாதனைகளையெல்லாம்
சந்தங்களோடு பாடிப்பாடி மகிழந்திடடி பாப்பா!
புலிவீரன் கொண்ட படையைப் பற்றியும்
ஆங்கிலேயத் துரைகளை எதிர்த்த கட்டபொம்மனின்
வீரதீர வரலாறுகளையும் பாடடி பாப்பா!
தென்னகப் புரட்சி வேலூர்க் கலகம்
கொடுத்த வீரத்தினைப் பாடடி பாப்பா!
ஒன்டிவீரன் செய்த புரட்சிகளையும்
தீரனசின்னமலை செய்த புரட்சிகளையும்
திகட்டாது பாடிப்பாடி செல்லடி பாப்பா!
வீரப்பெண்மணியாம் வேலுநாச்சியார்
வீரத்தினைப் பாடடிப் பாப்பா! - உன்
வீரத்தினை வளர்த்துக் கொள்ளடி பாப்பா!
இராணி மங்கங்மாளின் புரட்சிமிக்க ஆட்சித் திறனையும்
போர்த்திறனையும் நீயறிந்து வாழ்வில்
வீரப்பெண்மணியாய்த் திகழ வேண்டுமடிப் பாப்பா!
சத்திய சீலராம் சத்திய மூர்த்தியாரின்
சுதந்திரப் போராட்ட வரலாறுகளையும் அவரினச்
சீடராம் தென்னாட்டுக் காந்தி காமராஜரின்
வாழ்க்கை வரலாறுகளையும் பாடடி பாப்பா!
கொடியைக்காக்க தன்னுயிரைத் தந்த உத்தமர்
குமரனாரின் வாழ்வினைப் பாடடி பாப்பா!
பகுத்தறிவூட்டிய பெரியாரின் சுதந்திரப் போரினையும்
அவரின் பெண்மைச் சிந்தனையையும் அவர்
சாதியத்தை கவிழச் செய்த சாதனைகளையும் நீ
தோழியர்களோடு பாடிச் செல்லடி பாப்பா!
வ.வே.சுப்ரமண்யரின் தீவிரப் போராட்டங்களையும்
வாழ்வைப் பற்றியும் பாடடி பாப்பா!
அரசியல் நாகரீகராம் வரதராஜூலுவின்
அரியபெருந் தியாகங்களைப் பாடடி பாப்பா!
அரசியல் மேதை ராஜகோபாலரின் சுதந்திரப்
போராட்டங்களையும் பாடிச் செல்லடி பாப்பா!
இன்னும் பலபல தலைவர்கள் நம்நாட்டுச்
சுதந்திரத்திற்கு செய்த அருந்தொண்டுகளை எல்லாம்
சுதந்திரக் காற்றில் கலந்து இன்னிசையோடு
ஆடிப்பாடி அவர்களை நினைவில் கொண்டு
தினமும் தொழுது செல்லடி பாப்பா!
-இல. பிரகாசம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.