ஆசிய ஜோதி நேருஜி
ஆசிய ஜோதி என்றேதான்
அனைவரும் போற்ற வாழ்ந்தவராம்
தேசப்பற்று மிகுந்தவராம்
எங்கள் அருமை நேருஜியாம்
செல்வச் செழிப்பில் வளர்ந்தாலும்
சிறிதும் கர்வம் இல்லாமல்
செம்மையாய் வாழ்ந்த உத்தமராம்
எங்கள் அருமை நேருஜியாம்
அண்ணல் காந்தி வழிதனிலே
அருமை நேரு வாழ்ந்தாராம்
தன்னலம் இன்றி உழைத்தாராம்
எங்கள் அருமை நேருஜியாம்
பஞ்சசீலக் கொள்கையினை
பாங்காய்த் தந்து உயர்ந்தவராம்
பஞ்சம் போக்க வந்தவராம்
எங்கள் அருமை நேருஜியாம்
சிறிய ரோஜா மலரென்றால்
சிந்தை மகிழ்ந்தே அணிவாராம்
சிறுவர் கண்டால் மகிழ்வாராம்
எங்கள் அருமை நேருஜியாம்
- கவிஞர் இரேவதி கிருஷ்ணமூர்த்தி, அசோக்நகர், சென்னை. .
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.