சுத்தம் பேணுவோம் !
சுத்தம் பேணனும் சுத்தம் பேணனும் கண்ணம்மா
அதை நித்தம் நாமும் செய்ய வேணும் கண்ணையா
அசுத்தம் சேர்ந்தா நோய் வருமே கண்ணம்மா
அத மாற்ற வேண்டும் நம் செயலால் கண்ணையா.
அசுத்த நீரால் நோய் வருமே கண்ணம்மா
அதை மேலாண்மை செய்ய வேணும் கண்ணையா
கழிவு நீரைச் சுத்தம் செய்து நாம் விட வேணும்
அதை மறுசுழற்சி செய்து நாம பயன்படுத்தனும்.
ஆறு கடல் ஏரியெல்லாம் காத்திட வேணும்
அதில் கழிவுநீர் கலக்காமல் தடுத்திட வேணும்
மழைநீர் தான் உயிர்நீரு மறக்கக் கூடாது
அதை மண்ணுக்குள்ள போக வழி செய்திட வேணும்.
வீணாகும் திடப்பொருளை குவிக்கக் கூடாது
நோய் தரும் திடக்கழிவை அழித்திட வேணும்
திடக்கழிவால் நீரும் நிலமும் கெட்டுப் போகுமே
அதை விட்டு வச்சா நோய் நொடிகள் வந்து சேருமே.
நெகிழிப் பையைக் கிட்ட நெருங்க விடவே கூடாது
மனிதன் மலம் திறந்த வெளியில் கழிக்கக் கூடாது
அழுகும் பொருளை திறந்த வெளியில் வீசக்கூடாது
அதை மண்ணில் புதைச்சு உரமாக மாற்றிட வேணும்.
சுத்தம் பேணனும் சுத்தம் பேணனும் கண்ணம்மா
அதை நித்தம் நாமும் செய்ய வேணும் கண்ணையா
அசுத்தம் சேர்ந்தா நோய் வருமே கண்ணம்மா
அதை மாற்ற வேண்டும் நம் செயலால் கண்ணையா !
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.