மொழிகள்…. பிள்ளை
(நிலைமண்டில ஆசிரியப் பா)
மொழி வாழ்த்து
எங்கும் புகுந்தே ஏற்றம் பெற்ற
தங்கு தடையிலா தமிழமு தூற்றே
எந்தன் நாவில் எழிலுடன் மழலை
பந்தமு துமொழிகள் பாடிட வருகவே!
சபை வாழ்த்து
உலகில் வழங்கும் உயரிய மொழிகள்
பலவற் றிலுயர் பண்புள வொன்றை
உரைத்திட அரங்கம் உருவாக் கியச்சபை
வரையறைக் குட்படும் வாசகத் தெரிவு
மனையின் நடுவர் மாண்புவா சகரென
அனைவருக் குமிங்கே அமைத்தேன் வணக்கமே!
பொருளுரை
மொழிகள்... பிள்ளைமொழி
பிஞ்சு விரல்கள் பிதற்றும் மொழிதான்
மஞ்சு பொழிந்திடும் மழையின் நர்த்தனம்
நாட்டிய விழியுடன் நடக்கும் மழலை
ஆட்டிடும் விரல்களில் ஆனந்தம் பிறக்கும்.
பிறவிப் பெரும்பயன் பிள்ளையின் வாயொலி
உறவினில் ஆழ்ந்திடும் உலகெலாம் வரமென
வரமாய் பெருகிட வாய்த்த மழலை
உரத்தால் பலமென உறவும் பொலிவுறும்
பொழியும் மேகமும் போற்றியே பாடிடும்
மொழியெழில் மழலை மொட்டின் பிதற்றலே!
பிதற்றும் மனதும் பித்தம் தெளிந்து
இதமும் பெறவே இசையெனப் பிள்ளை
நவிலும் அமுதவாய் நர்த்தன மொழிதான்
கவிதா லயயெழில் கருவெனும் மழலை
குடிபுகும் இல்லம் குணமுறு வாசம்
வடிவுறக் குழந்தை வரமொரு சுவாசம்
சுகந்தரும் நிம்மதி சுடர்விடும் கவலை
அகன்றிட வழியென அமையும் பிள்ளை
மொழியும் மழலை மொழிமுன் அனைத்து
வழிகளில் மலரும் வசந்தமும் வணங்குமே!
நிறைவுரை
கற்ற மொழியினும் கண்முன் உலவும்
உற்ற மழலை உதிர்க்கும் மொழிதான்
இன்பந் தரும்நல் இசைய முதென
நன்றியால் மன்றிலில் நவின்றேன் நன்றே!