பெரிய தெய்வம் போற்றிடுவோம்!
அறிவைக் கற்றுத் தருகின்ற
ஆசான் நல்ல வழிகாட்டி
செறிவாய் இருளை யகற்றுகின்ற
சிறந்த மனதின் ஒளிகூட்டி
பரிவாய்ப் பாடஞ் சொல்கின்ற
பண்பில் என்றும் நலங்காட்டி
விரிவாய் வாழ்விற் சிறக்கவைக்கும்
விவேக மருளும் வளங்காட்டி.
எழுத்தை எழுதும் கரும்பலகை
இருட்டாய் இருக்கும்; சாக்கட்டி
அழுத்தி யெழுத வெள்ளையுறும்
அறிவும் அதுவே வெளிச்சமன்றோ!
பழுத்த பழமே இனிக்குமெனில்
பழுத்த அறிவும் இனிக்குமன்றோ
பொழுதை வீணே போக்காமல்
போற்றித் தொழுவோம் ஆசானை.
கற்றுத் தரும்நல் லாசிரியர்
காலம் முழுதும் அனுபவங்கள்
பெற்றுத் தரும்நற் குருவன்றோ
பேசுந் தெய்வம் அவரன்றோ!
உற்ற துணையாய்க் கல்வியினை
உளத்திற் புகுத்தும் சுடரன்றோ
பெற்றோர்க் கடுத்தே ஆசிரியர்
பெரிய தெய்வம் போற்றிடுவோம்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.