கோழியாய் வாழ்வோம்..!
கொத்தித் திரியும் அந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா - இது
பாட்டுப் பாட்டன் பாரதி பாடிய வரி
எத்தனையோ பறவையிருக்கக் கோழியைக்
கூட்டி விளையாட ஏன் சொன்னான் பாரதி
கூர்ந்து கவனித்தால் உண்மை புரியும்.
நாட்கள் பல நகராமல் அமர்ந்து
அடைகாத்துப் பொறித்தக் குஞ்சை
எதிரி எவர் வரினும் எதிர்த்துப் போராடி
காத்து நின்று மனிதர்க்குச் சொல்லும்
குழந்தையைப் பாதுகாப்பதன் அவசியத்தை,
கோழியின் போர்க்குணம் நமக்கும் வேண்டும்.
குஞ்சுகளை அழைத்துச் சென்று
இரை தேடும் குப்பை மேட்டில்
நல்ல இரை கிடைக்கும் வரை
விடாது தோண்டி குஞ்சுகளின் பசி போக்கும்
தேவை நிறைவேறும் வரை
விடாது நாம் முயல வேண்டும்.
இரை கிடைத்தால் ஓர் ஒலி
எதிரி வந்தால் ஓர் ஒலி
பல ஒலி எழுப்பிக் காக்கும்
பக்குவமாய் தன் குஞ்சு வளரும் வரை
வாலிபம் வரும்வரை நம் குழந்தையை
பாசம் காட்டி வளர்க்கச் சொல்லும் கோழி!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.