ஓடி வருவேன்...!
ஒடி வருவேன் நானும் ஓடி வருவேன்
விடுமுறை விட்டதும் ஓடி வருவேன்
அண்ணன் தம்பியோட ஓடி வருவேன்
தாத்தா பாட்டி வீட்டுக்கு ஓடி வருவேன்.
காலை எழுந்தவுடன் கருப்பட்டிக் காப்பி
கம்மாயில குளிச்சி வந்தா கம்மங்கூழு
கூழுக்குத் தொட்டுக்கத் தான் சுட்ட கருவாடு
இதற்கு இணையேது நீயே சொல்லு
வெயிலு ஏறுனா தர்ப்பூசணி
வயிறு நிறையத் தான் சீனிக்கிழங்கு
காடு மேடு சுத்தி நாங்க எடுத்து
சேர்ந்து சுவைப்போமே சுத்தத் தேனை.
மதியம் வந்தாக்க மண்பானைச் சோறு
ஊரே மணமணக்கும் அயிர மீன் குழம்பு
பிசைஞ்சி சாப்பிட்டா தேவாமிர்தம்
இதற்கு காரணம் பாட்டி கைப் பக்குவம்.
மாலை வந்தாலே மண்ணில் அமர்ந்து
கதைகள் கேட்டோமே பாட்டி சொல்ல
கற்பனை இல்லாத சொந்தக் கதை தான்
தெரிஞ்சுக்க வேண்டிய முன்னோர் கதை தான்.
இரவில் சாப்பிட்டோம் நிலாச் சோறு
சொந்த பந்தம் எல்லோரும் சுத்தி இருந்து
கயித்து கட்டிலுல நாங்க படுத்து
நிலாவைப் பார்த்தபடி தூங்கிப் போனோம்.
ஒடி வருவேன் நானும் ஓடி வருவேன்
விடுமுறை விட்டதும் ஓடி வருவேன்
கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்க
தாத்தா பாட்டி வீட்டுக்கு ஓடி வருவேன்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.