இட்டலி பத்து
1. இட்லி முதலே பலகாரம் தேங்காயின்
சட்டினியே சட்டினி யாம்.
2. தட்டு நிறையப் பலகாரம் உண்டெனினும்
இட்டலிக் கில்லை இணை.
3. இட்டார் இடாதார் எனப்படுவர் இட்டலியைத்
தட்டிலே வைக்கா தவர்.
4. இட்டலி உண்பாரே உண்பவராம் மற்றெல்லாம்
தட்டுத் தடுமாறி கள்.
5. புட்டும் இடியாப்பம் பூரிவடை யெல்லாமே
இட்லிக் கிணையோ இயம்பு.
6. இட்லி சிரிக்கும் அழகுக் கிணையாமோ
மட்டுக் குழலார் சிரிப்பு.
7. எங்களின் இட்லிக் கெதிராக வந்ததனால்
திங்களே நீதேய்கின் றாய்.
8. நற்றமிழர் இட்டலியை நல்லமிழ்தம் என்றதனை
மற்றவர்கள் மாற்றினார் கள்.
9. ஆவியினைக் காக்கும் அருமை இட்டலியே
ஆவியிலே வேவதே னோ?
10. உப்பினாய் சட்டத்தால் ஒன்னார்கை சேராமல்
இப்படியே என்றும் இரு.
- முனைவர். தமிழப்பன்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.