பாட்டி சொன்ன பதில்!
ஒலிபெருக்கி கட்டிய ஓர் ஆட்டோ
கொசுவை ஒழிப்போம் நோய் தடுப்போமென
உரக்க ஒலித்தே சென்றது எங்கள் கிராமத்தில்
புரிந்து கொண்டேன் கொசுவின் பாதிப்பை.
வருத்தத்தோட நடந்து சென்றேன்
வாசலில் அமர்ந்திருந்த பாட்டியிடம்
கேட்டேன் எனது சந்தேகத்தை
கொசு இருந்ததா உங்கள் காலத்திலென...?
கொசு அன்றும் நிறையவே இருந்தது
ஆனாலும் இவ்வளவு நோயில்லை
நோயை உருவாக்கும் முன்னே அது
தானாகவே அழிந்து போகுமென்றார்.
எப்படியென்றே நானும் கேட்டேன்
நீரில் உருவாகும் லார்வாக்களை
மீனும் தின்றே விடுமென்றார்
தப்பிய லார்வா கொசுவாகுமே என்றேன்.
அதற்கும் பாட்டி விடை சொன்னார்
தப்பிப் பிழைத்த கொசுக்களையெல்லாம்
தவளையும் தட்டானும் தின்னுமென்றார்
இயற்கையை நினைத்தே மகிழ்ந்தேன் நான்.
ஆனாலும் எனக்கொரு சந்தேகம்
அந்த மீன் தவளை தட்டான் எல்லாம்
இப்போது எங்கே போனதென்றேன்?
பூச்சிக் கொல்லியால் அழிந்ததென்றார்.
இவைகளைச் சொன்ன பாட்டியும்
இறுதியாய் உறுதியாய் ஒன்று சொன்னார்
நாம் இயற்கை விவசாயம் செய்தாலே
எந்தக் கொசுவும் உருவாகாதென்றார்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.