எங்க ஊரு கண்மாய்...!
ஊருக்கு மேற்கால ஒரு கண்மாய்
தண்ணீரு நெறஞ்சிருக்கும் எங்க கண்மாய்
முட்டளவு தண்ணியில மூழ்கி நாங்க
கழுத்தளவு தண்ணியில எழுந்திருப்போம்.
கண்மாய் கரையோர ஆலமரம்
விழுதெல்லாம் தண்ணீர் வரை நீண்டிருக்கும்
விழுது தான் எங்களுக்கு ஊஞ்சல் கயிறு
அதில் ஆடி விழுவோமே ஆழத்துல.
கரையோர மரமெல்லாம் பறவைக் கூட்டம்
அது எழுப்பும் குரல்தானே கச்சேரியாட்டம்
கரையில காத்திருக்கு மீனுக்குக் கொக்கு
கரையோர மரத்துல தான் மீன்கொத்தி.
தண்ணீர் குறைஞ்சாத் தான் பிடிப்போமே மீனு
சேறா இருந்தாலும் குளிப்போமே அதுல
சுத்தமாக் காய்ந்தாலும் நீர் தருமே
கண்மாய்க்குள்ள உள்ள ஆழ்கிணறு.
எப்படி இருந்த கண்மாய் இப்படியாச்சு
நீர் வர மழை பெய்யவுமில்லை
தண்ணீர் வர இங்கு வழியுமில்லை
ஊராரே இதைக் கொஞ்சம் கவனியுங்க.
ஊரெங்கும் மரம் நடுவோம் நாங்க
அதனால மழை தருமே வானம்
தண்ணீர் வர நீங்க வழி அமைச்சா
தண்ணீரால் நிறையுமே எங்க கண்மாய்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.