தவளையண்ணா...! தவளையண்ணா...!!
தவளையண்ணா தவளையண்ணா
எங்க இருக்கீங்க...?
உங்க சத்தம் கேட்டு
ரொம்ப நாளாச்சே...!
எங்க இருந்தாலும்
இங்க ஓடி வாங்க...
*****
குட்டிப் பாப்பா சுட்டித் தம்பி
இதோ வந்தேனே
நான் வசிக்க வசதியிங்கு
ஏதுமில்லையே...
ஆறு குளம் ஏரியில
தண்ணீர் இல்லையே...!
*****
இயற்கை செய்த சதியது
நாங்க என்ன செய்ய...?
எங்க வீட்டுக் கிணற்றுக்கு
நீங்க வாங்களேன்...
நிறைய தண்ணீர் அங்க இருக்கு
நீந்தி மகிழுங்க...
*****
கிணற்றிலே தங்கி வாழ
நான் கிணற்றுத் தவளையல்ல...
நீண்ட தூரம் நீந்தி மகிழ்ந்த
ஏரித் தவளை நான்...
மரத்தை நட்டு மழை நீரைச் சேமித்தா
ஏரி நிறையுமே...?
*****
மழை பெய்ய நாங்க வழி
நிச்சயம் செய்வோமே...
தண்ணீர் வந்ததும் நீங்க வாங்க...
கொசுவையெல்லாம் பிடித்து தின்று
எங்களைக் காப்பாற்ற...
நீங்க நிச்சயம் வாங்க..!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.