இருளர்களின் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள்
சு. சத்யா
முன்னுரை
உலகில் மனித இனம் தோன்றிய தொடக்க காலத்தில் வாழ்ந்தவர்களைத் தொல்குடிகள் என்றும், பழங்குடிகள் என்றும் சமூக வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மிக அவசியமாகும். ஒரு தனிமனிதனின் இந்த அடிப்படைத் தேவைகள் அவனுடைய வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்கின்றன. மனிதச் சமூகத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இச்சமூகப் பிரிவில் ஒன்றான இருளர் இனம் காட்டும் பண்பாடு, பழக்க வழக்கம், உணவு, உடை, இருப்பிடம், தொழில், பொருளீட்டுதல் போன்ற நிலைகள் சற்று வளர்ச்சியடைந்துள்ளன. மேலும் இருளர்களின் நம்பிக்கைகளையும், சடங்கு முறைகளைப் பற்றியும் இக்கட்டுரையின் வழி பின்வருமாறு விளக்கப்படுகிறது.
இருளர் பெயர்க்காரணம்
மக்கள் வாழும் பொதுப்பகுதிகளில் வாழாமல் இருண்ட, அடர்ந்த காட்டுக்குள் சென்று வாழ முற்பட்ட மக்கள் ‘இருளர்கள்’ என்றழைக்கபட்டனர். இருளர் மக்களுக்குத் தமிழ் நிலம் வழங்கிய பெயர் ‘வேடர்’ என்பதாகும்.
இருளர் வாழும் பகுதிகள்
தமிழ்நாட்டில் வாழும் மிகத்தொன்மையான பழங்குடிகளுள் ‘இருளர்’ என்ற இனக்குழு மக்களும் அடங்குவர். இம்மக்கள் நீலகிரி, கோவை, திருச்சி, சேலம், போன்ற மாவட்டங்களில் மிகுந்த எண்ணிக்கையிலும், செங்கற்பட்டு, கருநாடக மாநிலங்களிலும், கேரளாவில் பாலக்காடு பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றனர். இருளர்களை ‘அரைநாடோடிகள்’ என்று கூறலாம். இவர்கள் தங்கள் குடியிருப்புகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். காரணம் உணவு சரிவரக் கிடைக்காத நிலையில் இருப்பிடத்தை மாற்றுவார்கள். மேலும் மூலிகை கிடைக்காவிட்டாலும் இடப்பெயர்ச்சி செய்வார்கள்.
நம்பிக்கைகள், சடங்குகள் - ஓர் விளக்கம்
நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு அம்மக்கள் சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. மனிதன் தன் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளுக்கு காரண காரியத்தின் மூலம் விளக்கிப் பொருள் கூற, முடியுமாயின் அதை நம்பிக்கை என்றும், கற்பிக்க இயலாத நிகழ்வுகளை மூட நம்பிக்கை என்றும் கூறலாம். இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என முன்னோர்கள் கூறியதை அப்படியே தலைமுறை தலைமுறையாகக் கடைபிடிப்பதுதான் ‘சடங்குகள்’ ஆகும். புனிதப் பொருட்களின் முன்னால் மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறும் ஒழுக்க விதிகளே சடங்குகள் என்கிறார் “அறிஞர் டூர் கைம்”.
இருளர்கள் - இயற்கை மீது கொண்ட நம்பிக்கைகள்
இருளர்கள் காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்து வந்த காரணத்தால் மூலிகைச் செடிகள், விலங்குகள் மீது நம்பிக்கை வைத்து வழிபட ஆரம்பித்தனர். இவர்கள் ‘அவுரி’எனும் இலையைப் பறித்து நல்லபாம்புக் கடிக்கு மருந்தாய்ப் பயன்படுத்தினர். ‘பெரிய நங்கை’ என்ற மூலிகையைப் பாம்பின் விசம் முறிக்கும் தன்மையுடையது என நம்பிப் பயன்படுத்தினர்.
இருளர்களின் தெய்வ வழிபாடு
இருளர்கள் கன்னி தெய்வத்தை வழிபடுகின்றனர். இத்தெய்வத்தை வழிபட்டால் தனக்கு நேரிடும் துன்பங்கள் அனைத்தும் போகும் என்பது இக்குழு மக்களிடம் உள்ள பொதுவான நம்பிக்கை ஆகும்;. “கன்னி தெய்வத்தை வழிபட்டால் விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு, தேவைப்படும் உணவுப் பொருட்கள், உடல் ஆரோக்கியம், நல்ல மழை, நல்ல விளைச்சல் போன்ற அனைத்துக் காரியங்களும் நிறைவேறி விடும் என நம்புகின்றனர்.
இருளர்களின் வழிபாட்டு முறைகள்
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் இருளர்கள் மாசி மகத்திற்கு முன் மூன்று நாட்கள் மாமல்லபுரக் கடற்கரையில் கூடித் தங்கள் குல தெய்வமான கன்னியம்மாவிற்குப் பூஜை செய்து வழிபடுகின்றனர். கன்னியம்மாவை ‘ஆயம்மா’ என்றும், சிலர் குறிப்பிடுகின்றனர். கன்னியம்மாவின் தங்கைகளான மாரி, செல்லி, நீலி போன்ற தெய்வங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் வழிபடுகின்றனர். எனவே இருளர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது. கிராமச்சிறு தெய்வங்கள் மனிதர்களுடன் மனிதராய் வாழ்ந்து அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்காகப் போராடி உயிர் நீத்தது போல, இருளர்களின் தெய்வமான கன்னியம்மாவும் இருளர் இனப் பெண்ணாக இருந்து, இவர்களுக்காகப் போராடி இறந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இருளர்களின் மாரியம்மன் கோவில்
‘முட்டத்து வயல்’ என்ற கிராமத்தில் இருளர்கள் வழிபடும் பெண் தெய்வங்களுள் மாரியம்மனும் ஒரு தெய்வம் ஆகும். யாருக்குப் பேய் பிடித்திருந்தாலும் செவ்வாய்க்கிழமை அன்று அதை ஓட்டி விடும் வழக்கத்தை இங்கு கடைப்பிடிக்கின்றனர். இந்தப் பேய் ஓட்டுவதற்கு ‘பறைக்குளித்தல்’ என்று பெயர். பறைக்குளிக்க வரும்போது கடலை, பொறி, வெற்றிலை, பாக்கு, வெல்லம், தேங்காய், பழம் மற்றும் ஒன்றேகால் ரூபாய் காணிக்கையாய்ப் படைக்க வேண்டும் என்கிற நடைமுறையும் இருக்கிறது.
இருளர்களின் கோயில் அமைப்பு
இருளர்கள் தங்களுக்கெனத் தனித்த கோயில்களைக் கட்டி வழிபட்டனர். பிற கோயில்களுக்குச் சென்றால் தீட்டு என்ற காரணத்தினால் இவர்கள் தனியாகக் கோயில் அமைப்புகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டது போல இல்லாமல் செங்கல், மரம், கருங்கற்களைக் கொண்டு எளிய முறையில் அமைத்திருக்கின்றனர். மருதமலையில் உள்ள வனத்திற்குள் ஓர் அழகிய தியானலிங்கம் வைத்து இருளர்கள் வணங்கி வருகின்றனர். இவர்கள் பிறரால் தீண்டாமை, தீட்டு போன்ற காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் வழிபடும் கோயிலுக்குப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
சடங்குகள்
மனித சமூகத்தில் முன்னோர்கள் தம் வாழ்வியல் அனுபவங்களின் வாயிலாகக் கண்ட முடிவுகளை, இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கூறிய முறைப்படி அப்படியே தொன்று தொட்டு செய்துவருவது தான் சடங்குகள் எனப்படுகின்றன. மேலும் சடங்குகள் மனிதர்களுக்கிடையிலான சமூக உறவுகளை ஆழப்படுத்துவனவாகவும் அமைகின்றன.
குழந்தைப் பிறப்பு குறித்த சடங்குகள்
மனித வாழ்வு பிறப்பிலிருந்து தொடங்குகின்றது எனலாம். குழந்தை பிறப்பு, பிறந்த குழந்தையைப் பேணுதல், குழந்தைக்கு பெயர் வைத்தல், காது குத்தல் முதலிய பல சடங்குகளைச் செய்கின்றனர். குழந்கைகளுக்காகச் சடங்குகளை ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு விதமாகச் செய்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் இருளர்கள் தனிமையான குடில் ஒன்றை ஏற்பாடு செய்து தாயையும், சேயையும் உள்ளே வைத்துப் பாதுகாப்பார்கள். குழந்தை பிறந்த ஏழாம் நாள் அத்தை வந்து நீர் தெளித்து தாயையும், சேயையும் வீட்டுக்குள் அழைத்துக் கொள்வார். குழந்தைக்கு அத்தைதான் பெயர் சூட்டுகிறாள்.
பூப்படைதல் - சடங்கு முறை
பெண்கள் பூப்படைந்தவுடன் தாய்மாமன் சீர் செய்யும் முறை என்பது பொதுவானது. இருளர்கள் சமூகம் இதற்கு விதிவிலக்கல்ல. இருளப்பெண் பூப்பெய்திய ஏழாம் நாள் விழா கொண்டாடுவர். அந்த விழாவை இருளர் தாய்மொழியில் ‘நேரே அப்ப’ என அழைக்கின்றனர். தாய்மாமன் அல்லது தமக்கையின் கணவர்தான் குடிசைக் கட்டுவர். ஏழாம் நாள் இந்தக் குடிசை எரிக்கப்படுகிறது. குடிசையில் வேப்பிலை அல்லது வேறு இலைகளைச் சொருகி வைப்பது வழக்கமாக உள்ளது. பின்பு ஏழு நாள் சென்றவுடன் ஆற்றில் சென்று நீராடிவிட்டு தாய்மாமன் எடுத்து வந்த புதுத்துணியை உடுத்தச் சொல்வார்கள். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் பெண்கள் தாவணி, சேலை போன்ற உடைகளையே உடுத்தினர் என்ற செய்தியின் மூலம் இருளர்களின் உடைப்பண்பாட்டினை அறிய முடிகிறது.
திருமணச் சடங்குமுறை
திருமண நிகழ்வு என்பது ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் நடைபெறும் இன்றியமையாத ஒன்றாகும். திருமண நிகழ்வு நடந்த பின்பு தம்பதிகள் எந்தக் குறையும் இல்லாமல் எல்லா வளங்களும் பெற்று இனிமையாய் வாழ வேண்டும் எனப் பெரியோர்கள் பல சடங்கு முறைகளைச் செய்து திருமணத்தை நடத்திக் வைக்கின்றனர். இருளர்களின் திருமணத்தில் ஆண்கள் விருப்பத்தை விட, பெண்களின் விருப்பங்களும், உணர்வுகளும் உயர்வாய் மதிக்கப்படுகின்றது. மணமகன் வீட்டார், பெண் வீட்டிற்குத் திங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பெண் கேட்டுச் செல்வர். அவ்வாறு பெண் கேட்டுச் செல்லும்பொது, கையில் ஒரு இரும்புத்தடி அல்லது மரத்தடியைக் கொண்டு செல்ல வேண்டும். இருளர்களின் திருமணம் மிக எளிமையான நிகழ்ச்சியாகும். திருமணத்தில் செம்மறியாடு வெட்டி விருந்தளிப்பர். திருமணத்திற்கு வரும் உறவினர்கள் தங்களால் இயன்ற அளவு பரிசைக் கொடுத்துவிட்டுச் செல்வர்.
இருளர்களின் திருமண முறை
திருமணம் செய்யும் மணமகன், மணமகள் வீடுகள் ஒரு சிறிய குடில்போலத்தான் இருக்கும். எனவே திருமண விருந்து என்பது பொதுவாக மரத்தடியில்தான் நிகழ்கிறது. மூப்பன் தாலி எடுத்துத்தர, மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுகிறான். இந்த தாலி முறை தற்போது ஏற்பட்ட நவீன நாகரீகத்தின் அடையாளம் ஆகும். பண்டையக்கால இருளர்கள் கருப்புப் பாசிகளைத்தான் திருமணத்தின் போது பயன்படுத்தினர். திருமணம் நிச்சயமான பின் ஒரு வருடத்திற்கு மணமாகாமலே சேர்ந்து வாழ்கின்றனர். பின் அவர்களுக்குள் பிடிக்கவில்லை அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் வேறு நபரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது. விபச்சாரம் என்ற சொல் இருளர் மத்தியில் இல்லை. இருளர்கள் பெற்றோர் முன்னிலையிலும், உடன்போக்கின் மூலமும் திருமணம் செய்து கொள்கின்றனர். இருளர் சமூகத்தில் விதவைப்பெண்கள் இல்லை. விதவைப் பெண்கள் தாங்கள் விரும்பும் யாரை வேண்டுமானாலும் திருமணம் அல்லது மறுமணம் செய்து கொள்ளும் உரிமை அளிக்கப்படுகிறது.
இருளர்களின் இறப்புச் சடங்குகள்
இருளர்களின் இறப்புச் சடங்குகள் தனித்துவமானவை. இருளர் இனத்தின் உட்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியாகச் சமாதிகள் உள்ளன. சமாதி ‘கொப்பே’ என்று அழைக்கப்படுகிறது. இழவு வீட்டிற்கு வரும்போது கையில் குச்சியுடன் வருவது இருளர்களின் மரபாகும். வயதானவர் இறந்தால் காய்ந்த குச்சியும், இளவயதினர் இறந்தால் பச்சைக்குச்சியும் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் அது குற்றத்திற்கு நிகரானதாகக் கருதப்படுகிறது. இவர்கள் இறந்தவர்களை எரிக்கவோ, புதைக்கவோ செய்கிறார்கள். இறந்தவரைப் புதைத்தப்பின் இறந்தவரொன் மகன் தலைமுடி எடுக்கப்படுகிறது. தலைமுடி எடுத்தபிறகு அவனுடைய தலையில் புதுத்துணியால் முக்காடு போட்டு உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
முடிவுரை
இயற்கையைக் கண்டு அஞ்சி அதனால் இயற்கையை வணங்கிய மனிதன் தம் வாழ்வில் உயர்வும், தாழ்வும் இயற்கையாகவே நிகழ்கிறது என்று நம்பினான். காடுகளில் வாழ்ந்த காரணத்தால் மூலிகைச் செடிகள் மற்றும் விலங்குகள் மீது நம்பிக்கை வைத்து வழிபட்டான். இருளர்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவும், பிற சமூகத்தினரோடு இணைந்து பொதுவழிபாடு செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு இருளர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள சடங்கு முறைகளும், நம்பிக்கைகளும் தனித்துவமாக இருப்பதை இக்கட்டுரையின் வழி விளக்கப்பட்டுள்ளது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.