சங்ககால இனக்குழுச் சமூக வாழ்க்கை முறை
க. கருப்பசாமி
முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21.
* * * * *
முனைவர் வை. இராமராஜபாண்டியன்
புலத்தலைவர் (பொ),
தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21.
முன்னுரை
ஆதி சமுதாய அமைப்பாக உலகமெங்கும் இனக்குழுக்கள் நிலவின. இனக்குழு மக்கள் அனைவரும் இணைந்து கூட்டு வாழ்க்கை நடத்தினர். இந்த இனக்குழுக்கள் பல்வேறு குடி, திணை அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டிருந்தது. வேட்டை வாழ்க்கை, புராதான விவசாயம் ஆகியப் பொருளாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கூட்டு வாழ்க்கை வாழ்ந்தனர். பண்டைய இலக்கியங்கள் இனக்குழுக்களின் பல்வேறு பண்புகளை மிக நுட்பமாகவும், உண்மைத் தன்மையோடும் வெளிப்படுப்படுத்துகின்றது. அத்தகைய இலக்கியங்களான புறநானூறு, பதிற்றுப்பத்தில் இனக்குழு வாழ்க்கை முறை அமைந்திருப்பதைக் காணலாம்.
இனக்குழு - விளக்கம்
நாட்டார் வழக்காறுகளை அவை வழங்கும் இயற்கைச் சூழலில் தொகுத்து, சமூகக்குழு அடிப்படையில் ஆராய்ந்து, அச்சமூகக்குழு பற்றிய முழுமையான அடிப்படைத் தன்மைகளை ஆய்வு செய்து வெளிப்படுத்துவது இனக்குழுவியல் அல்லது இனவரைவியல் ஆகும். “ஒரு தனித்த சமுதாயத்தின் பண்பாட்டைப் பற்றி மானிடவியலாளர்கள் அச்சமூகத்தோடு நீண்ட காலம் ஒன்றி வாழ்ந்து, ஆய்வு செய்து அதனை எழுத்தில் எழுதி அளிக்கும் தனி வரைவு நூலே இனவரைவியல் எனப்படும்” இத்தகு நீண்ட கால களப்பணியில் உற்றுநோக்கி விவரிக்கும் தனிவரைவுகளை எழுதும் மானிடவியலாளர்கள் இனவரைவியலாளர் எனப்படுவர் என்கிறார் பக்தவத்சலபாரதி.
சங்கஇலக்கியம் சுட்டும் இனக்குழுக்கள்
சங்க காலத்தில் கொல்லர், குயவர், தச்சர், துணி வெளுக்கும் புலைத்தி, பருத்திப் பெண்டிர், நெசவாளர், பரதவர், உமணர், குறவர், எயினர், ஆயர், உழவர், பாணர், பொருநர், கூத்தர், வேடர், இணவர், கோடியர், உயிரியர், துடியர், கானவர், கடம்பர், பறையர், வணிகர்கள், வேளாளர்கள், வடுகர், புலையர் முதலானோர் இனக்குழுக்களாக வாழ்ந்தனர்.
இனக்குழு வாழ்வின் தோற்றம்
ஆதி மனிதன் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்க்கை நடத்தினான். தொல்சமூக நிலையில் விலங்குகளோடு போட்டிப் போட்டுக் கொண்டு வெற்றிப்பெறத் துடித்த தனிமனித வாழ்வு மிகப்பெரிய அளவில் இழப்புகளைச் சந்தித்தது. அந்த இழப்பை ஈடுசெய்ய விரும்பிய ஆதி மனிதன் தங்களை அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ளக் குழுவாகக் கூடி வாழத் தலைப்பட்டான். இக்கூட்டமைப்பு வாழ்க்கை முறையையே மானிடவியலாளர் இனக்குழு சமூக அமைப்பு என்கின்றனர். தான் சார்ந்த குழுவிற்குத் தீங்கு வராமலும், தன் சமூகத்தின் கட்டமைப்பு சீர்கெடாமலும் காப்பதே இனக்குழுத் தலைவனின் முதன்மையான பணியாக இருந்தது. இயற்கை நெறி காலத்தில் தோற்றம் பெற்ற இனக்குழு, சமூக அமைப்பு குறித்தும் அக்குழுவின் செயல்பாட்டிற்கு அடித்தளமாக இருக்கும் இனக்குழுத் தலைவனின் பணிகள் குறித்தும் புறநானூற்றுப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தனிமனித நிலையில் தன் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத மனிதஇனம் குழுவாகச் செயல்பட்டது. இக்குழுவில் அனைவரும் சமமாகவே கருதப்பட்டனர். அதனால் தங்களின் சமூகத் தளத்தில் வலிமை, அறிவு முதிர்ச்சி என்னும் வகைகளில் உயர் நிலையில் இருந்த ஒருவனையே இனக்குழுத் தலைவனாகக் கருதினர். இனக்குழுச் சமூக அமைப்பு தமிழ் இலக்கியத்தில் திணைகளை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்டது. ஆதி சமூகத்தினரின் வாழ்வு குறிஞ்சி நிலமாகிய மலைகளிலிருந்தே தோற்றம் பெற்றிருக்க வேண்டும். “ஆதி சமூக மக்களின் வரன்முறையற்ற பாலுணர்வை வெளிப்படையாகக் குறிக்காமல் தாய்வழித் தலைமை, புறமண உறவு, சுதந்திர மணம், உடன்போக்கு (பெற்றோர்களின் தலையீடு இல்லாமை) என்பதைப் பாடல்கள் பதிவு செய்திருப்பதாலும், புணர்ச்சி உரிப்பொருள் ஆதலாலும், குறிஞ்சித்திணை தமிழரின் ஆதி சமூக வாழ்வை பிரதிபலிக்கும் திணையாகும்” என சிலம்பு.நா.செல்வராசு குறிப்பிடுகின்றார்.
கலை வளர்ச்சியால் நாகரீக நிலை அடைந்த சமூக அமைப்பு மருதத் திணையில் நிலை பெற்றிருக்கலாம். ஆதி மனிதனைக் குழு அமைப்பு செயல்பாட்டிற்கு தூண்டியதற்கான காரணம் தனித்து நின்று வெற்றிபெற முடியாத நிலையே ஆகும். சங்ககாலச் சமூக அமைப்பில் தொல்குடி பழக்கவழக்கங்கள், இனக்குழு வாழ்வின் எச்சங்கள் காணப்படுவதை, “எறிபுனக் குறவன்”
(புறம்.231) என்ற அடியின் மூலம், குறவர்கள் குறிஞ்சி நில மக்களாக வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகின்றது. மலையும் மலை சார்ந்த இடமும் கூட குறிஞ்சி நிலத்தின் முதற்பொருளாகவேக் குறிக்கப்படுகின்றது. அருவி ஒலித்தல், குரங்குகள் தாவுதல், மயில்கள் விளையாடுதல் என்பன ஆதி சமூக அமைப்பு தோற்றம் பெற்ற நிலப்பகுதியையேக் குறிக்கின்றன.
இனக்குழு வாழ்க்கை முறை
தனிமனித நிலையில் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத மனிதஇனம் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டி மேற்கொண்ட கூட்டு வாழ்க்கையே இனக்குழு சமூக அமைப்பு ஆகும். ஆதி பொதுவுடைமை அமைப்பான இனக்குழு வாழ்க்கை முறையில் அனைவரும் சமமாகக் கருதப்பட்டனர். பாகுபாடின்றி பகுத்துண்டு வாழ்ந்தனர் என்பதை. “தந்துநிரை பாதீடு உண்டாட்டுக் கொடை”
(தொல்.நூற்.1004) என்னும் தொல்காப்பிய நூற்பாவில் உள்ள பாதீடு என்னும் சொல்லாட்சி இனக்குழுக்களைப் பொதுவுடைமைச் சமூகத்தின் எச்சமாக விளக்குகின்றது. இனக்குழு வாழ்க்கைக்கு இன்றியமையாத பாதீடு, பகிர்ந்துண்ணல் என்ற வழக்கம் இனக்குழு மக்களிடையேப் பொதுவுடைமையை ஏற்படுத்தியது. வேட்டையில் கிடைக்கக் கூடியப் பொருள்களை அனைவரும் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர். வேடர், குறவர், ஆயர், தலைவர்கள் போன்றோர் பொருள் உற்பத்தியில் மிகவும் பின்னடைந்து இருந்தாலும் தமக்குக் கிடைத்த உணவைப் பகிர்ந்து உண்டதை,
“புல்லென அடைமுதல் புறவுசேர்ந் திருந்த
புன்புலச் சீறூர் நெல்விளை யாதே
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன”
(புறம்.328.1-4)
என்ற பாடலடிகள் சீறூர் மன்னன், மென்புலத் தலைவன் என்ற இரு சமூக நிலைமைகளில் இருந்தவர்களிடையே, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் வெளிப்படையாக கூறப்பட்டிருப்பினும், வறுமையுற்ற போதும் தொன்மையான வாளினையும், யாழினையும் பிணையமாக வைத்துப் பொருள் பெற்று விருந்தினரைப் பேணினர் என்பதைச் சுட்டுகின்றன.
“நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன்: இன்றிஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம், இதுகொண்டு
ஈவதிலாளன் என்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்கிழை அணிய”
(புறம்.316.5-9)
என்ற பாடலடி வறுமையுற்ற நிலையிலும் விருந்தினரைப் பேணிப் பகிர்ந்துண்ணும் இனக்குழு மக்களின் பொதுமைத்தன்மைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பசித்த பாணர் மனம் மகிழ வரகுக்கடன் பெற்று அவர்களது பசியைப் போக்குதல் இனக்குழு மக்களின் பண்பாக இருந்துள்ளது என்பதை,
“பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்
ஓக்கல் ஒற்கம் சொலிய, தன்ஊர்ச்
சிறுபுல்லாளர் முகத்து அவை கூறி,
வரகுகடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லாளன்னே”
என்னும் இப்பாடல் சுட்டுகிறது. இங்கு இனக்குழுவின் சீறூர் தலைவன் தன்னை நாடி வந்தவர்கள் உண்ணாராயினும் உண்ணும் என்று இரக்கும் குலப்பண்பினனாகக் காணப்படுகின்றான்.
இனக்குழுவும் வேட்டைத் தொழிலும்
தொல்சமூக மக்கள் அனைவரும் வேட்டைத் தொழிலையே மேற்கொண்டனர். சிலர் வேட்டைத் தொழிலுடன் விவசாயத்தையோ, கால்நடை வளர்ப்பையோத் தொழிலாகக் கொண்டு தம் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர். வேட்டையின் போது வில், அம்பு முதலிய கருவிகளை பயன்படுத்தியதோடு கால வளர்ச்சியில் கண்டறியப்பட்ட உலோகங்களான வேல், வாள் முதலிய கருவிகளும் பயன்படுத்தப்பட்டதை, “பல்லர் தழீஇய் கல்லா வல்வில் உழைக்குரல் கூகை அழைப்ப ஆட்டி” (புறம்.261) என்ற புறநானூற்று அடி உணர்த்துகின்றது. பிறரால் நலிவுறுதல் இல்லாத கூற்றினை ஒத்த சேர மன்னனின் திருந்திய தொழிலை உடைய வீரர்கள் வெகுண்ட பொழுது அளித்த நாடுகள் என்பதை, “உரும்பில் கூற்ற தன்ன நின் திருந்து தொழில் வாயவ் சீறிய நாடே” (பதிற்று.26) என்ற பதிற்றுப்பத்து பாடல் அடிகள் உணர்த்துகின்றன.
வேடர்குடி
பழைய இனக்குழச் சமூகத்தின் வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வதற்காக, சில ஆதாரமான குழுக்களைத் தேடினால் வேடர்கள் குறித்த செய்தியைக் காணமுடியும். வேடர்குடியைத் தொன்மையான குடியாகக் கூறலாம். மலை விவசாயமும், வேட்டையும், தேன் கிழங்கு சேகரிப்பும் என புராதானப் பொருளாதாரச் செயல்பாடுகளைக் கொண்டிருந்தனர். மூல இனக்குழு நாகரீகத்திலிருந்த இவர்களை மூல திராவிட இனக்குழு என அழைக்கலாம். வேடன், வேட்டுவன் என்று சுட்டப்படுகின்ற ஆண்மகன், வில், அம்பு என்ற கருவிகளைக் கொண்டு யாருக்கும் உடைமையாகாத இயற்கையின் அம்சங்களில் ஒன்றான விலங்குகளை வேட்டை நாய்களின் துணையோடு சென்று வேட்டையாடி உணவாகக் கொண்டான். கள்ளுக்கு விலையாக அவ்வேட்டைப் பொருள்களைத் தந்தான். கோவலர்கள் வளர்த்த ஆநிரைகளை கவர்தலால், ஆநிரை வேட்டைக்குரிய பொருளாகவே கருதப்பட்டது.
அவ்வேட்டைப் பொருள்கள் கிட்டாதபோது, வழியில் செல்லும் வழிப்போக்கர், வணிகர்கள், உடைமைப் பொருள்களை வழிப்பறி செய்தான். அதனால் அவன் கொள்ளையனாகவும், கள்வனவாகவும், பச்சை இறைச்சி உண்பனவாகவும், உண்டபின் வாய், கை, கழுவாதவனாகவும் பார்க்கப்பட்டான். இவ்வேடர்கள் சிற்றூர்களில் குடிசை இட்டு வாழ்ந்தனர். இவர்கள் வடுகர், வடுகவேந்தர், எயினர் என்ற சொற்களால் அழைக்கப்படுகின்றர். வேடர்கள் ஆநிரைக் கவர்தல், பசுக்கறி உண்ணுதல், கள் குடித்தல், குடிசையில் வாழ்ந்தனர் என்பதை, “வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட” (புறம்.202:1) என்றும், “வெள்ளை வாய் வேட்டுவ வீழ்துணை மகாஆர்” என்னும் பாடல்கள் சுட்டுகின்றன. காட்டுப் பூனையின் ஆண் இனத்தைப் போன்று அச்சுறுத்திப் பார்க்கும் மெல்லிய தலையையும் பறவைகளின் ஊனைத்தின்று புலால் நாற்றம் நாறுகின்ற மெல்லிய வாயினையும் உடையவர்கள் என்றும் பாடல்களில் பதிவுகள் காணக்கிடைக்கின்றன.
கானக்குறவர் குடி
மலை விவசாயத்தைக் கானக்குறவர்கள் தொழிலாகக் கொண்டனர். இவர்கள் வேடர்களிடமிருந்து வேளாண்மைக் காரணமாக வேறுபட்டவர்கள். இருகுழு மக்களிடமும் வேட்டையாடுதலுக்கான வில், அம்பு, வேட்டை நாய், கொம்பு, வளை, பொறி ஆகியன இருந்தன. வேடரையும் கானக் குறவரையும் ஒருவராகப் பார்த்த மரபும் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கானக்குறவரின் வேட்டைத் தொழில் அவர்கள் செய்த மலை விவசாயத்திற்கு அரணாக மாறியது. தினைப் புனத்தை மேய வந்த காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, யானை முதலிய விலங்குகளை அகற்றுவதற்கு வேட்டையாடுதல் பயன்பட்டது. வேடர் சமூகத்தைப் போலவே தமக்குக் கிடைத்த உணவை பாதீடு செய்து உண்ணும் முறை இருந்தது. தினை, ஐவன நெல் போன்றவை பயிரிடுதல், கிழங்கு, தேன் எடுத்தல், பலா மரங்களை வளர்த்தல் போன்றவை இவர்களின் தொழிலாக இருந்தன.
இவர்கள் போரில் ஈடுபடவில்லை. ஆநிரைகளைக் கவரவில்லை. மழைச்சாரலில் இடப்பெயர்ச்சி முறையை, எரித்து அழிக்கும் உத்தியை மேற்கொண்டனர். இவர்களின் குடியிருப்பு மலைச்சாரலில் சிறுகுடியாக இருந்தது.
“கலை உணக்கிழிந்த முழவுமருள் பெரும்பழ
சிலைக்கெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்
மலைகெழு நாடா... ... ... ... ...” (புறம். 236: 1-3)
என்னும் பாடலில் குரங்கு பலாவினை கிழித்து உண்டதால் பிளவுபட்ட முழவு போன்ற பெரிய பலாப்பழம் குறவர்க்கு சில நாட்களுக்கு வைத்திருந்து உண்ணும் உணவாக பயன்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவலர் - ஆயர்
நிலம் சார்ந்த இனக்குழு வாழ்க்கையின் மற்றொரு வளர்ச்சி நிலையின் எச்சமான முல்லைத்திணை, புறவு, வன்புலம், முல்லைநிலம் என்ற சொற்களால் குறிக்கப்பட்டது. வானம் பார்த்த பூமியாக இருந்த முல்லை நிலத்தில் கால்நடைகளை வளர்த்து அவற்றிலிருந்து பெற்ற பால் பொருள்களை உண்டும், பண்டமாற்றம் செய்தும் வாழ்ந்த குடியினரைக் கோவலர், ஆயர், அண்டர், இடையர் என்ற சொற்களால் அழைக்கப்படுகின்றனர். சமவெளி காடுகளும், மேய்ச்சல் நிலங்களும், ஆநிரைகளும், ஆடுகளும், எருதுகளும் அவர்களுடைய உடைமைகளாகக் கருதப்பட்டன. உணவு உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை முல்லை நில இனக்குழுக்கள் எட்டியிருந்தன. ஆநிரைகளை வேடர்கள் கொள்ளையடித்ததற்காகப் போர் நிகழ்வுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. கால்நடையும் அதன் பால் உற்பத்தியும் அதிலிருந்து உற்பத்தி செய்யக் கூடிய பொருள்களும் முல்லைநில இனக்குழுக்களுக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவி செய்தன. கால்நடை சார்ந்த வாழ்க்கை ஒருபுறம் இருக்க வன்புலங்களில், செம்மண் நிலங்களில், மழையை நம்பி வரகு, அவரை, எள், கொள், பயிறு விவசாயத்தை மேற்கொண்டனர். இதனை,
“கவைக்கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல்
தாதுஎரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அரைக் கொய்யுநர் ஆர மாந்தும்” (புறம். 215:1-5)
என்னும் பாடல் சுட்டுகிறது. அதாவது கவையாகப் பிளந்த கதிரினைக் கொண்ட வரகினைக் குற்றி எடுத்து வடிக்கப்பட்ட சோற்றினையும், எருவை உடைய தெருவில் தானாக உதிர்ந்து, தலைத்த வேளச்செடியின் வெள்ளிய பூவினைத் தயிரில் இட்டு இடைமகள் சமைத்த புளித்த கூழையும், அவரைக் காய்களையும் சமைத்து உண்பார்கள். மேலும் கோவலர்களின் குடிசை, முற்றம், பந்தர் கருவிகள் வைக்கும் இடம், ஆநிரைகளைப் பாதுகாப்பதற்கான கொட்டில் போன்றவை கோவலர்களின் இருப்பிட அமைப்பாகும். குடிசைக்கு வாசலும் கதவும் இருந்தன. குடிசைக்குள் வரகுக் கற்றை வேய்ந்த படுக்கையும், அதன் மேல் கிடாயின் தோளும் விரிக்கப்பட்டிருந்தன. உருளை, சிறுவண்டி உருளை, கலப்பை, கோடாரி போன்ற கருவிகளைப் பயன்படுத்தினர்.
பரதவர்
நுளையர், வலையர் என்ற சொற்களால் அழைக்கப்பட்ட பரதவர் கடற்கரைப் பகுதியில் தொழிற்புரிந்து வாழ்ந்தனர். திமில் என்று அழைக்கப்பட்ட படகுகளில் இரவில் மீன் பிடித்து விடியலில் கரை சேர்வர். பிடித்த மீன்களைக் கூறுகட்டி விற்றனர். பரதவப் பெண்கள் கூடைகளில் மீன்களைச் சுமந்து சென்று தெருக்களில் விற்றனர். பரதவர் மீன் வேட்டையைத் தொழிலாகக் கொண்டனர். முத்துக் குளித்தல், கிழிஞ்சல்கள் எடுத்தல், சிப்பிகள் எடுத்தல். கழிகளில் பாத்திகட்டி உப்பு விளைவித்தல் போன்ற தொழில்கள் ஆகியன இவர்களின் தொழில்களாகும்.
“தென் பரதவர் மிடல்சாய
வடவடகர் வால் ஓட்டிய” (புறம்.378)
என்ற பாடலடிகளின் மூலம் தென்நாட்டின்கண் வாழ்ந்த வலிமை வாய்ந்த பரதவர்களின் வீரம் வெளிப்படுகிறது. மேலும்,
“கதிர்மூக்கு ஆரல் கீழ்ச்சேற்று ஒளிப்பக்
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
எரிப்பூம் பழனம் நெரித்துடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிர” (புறம் 249:1-4)
எனும் பாடல் தீப்போல மலர்ந்த பூக்கள் நிறைந்த பொய்கையில் நெற்கதிரின் முனையைப்போன்று மூக்கினை உடைய மீன்கள் சேற்றின் கீழே சென்று ஒளிந்து கொள்ளும், பருத்த வாளை மீன்கள் நீரின் மேற்ப்பகுதியில் துள்ளும், மெல்ல ஒலிக்கும் ஓசையையுடைய கிணையின் முகம் போல விளங்கும் ஆமையானது துள்ளும், பனையின் குறுத்தைப் போல சினைமுற்றிய வரால் மீனும், கயல் மீன்களை சேகரிக்கக்கூடிய வலைஞர்களும் நிறைந்த நாடு என மீனின் வகைகளையும், நாட்டின் சிறப்பையும் சுட்டுகிறது. பரதவர்கள் சுறாமீன், கோட்டுமீன், இறா செம்மீன், அயிரை மற்றும் பல வகையான மீன்களை வேட்டையாடினர். இவர்களின் குடியிருப்புப் பகுதிகள் பாக்கம், சிறுகுடி என்று அழைக்கப்பட்டன. தாழை வேலியும் கழிசூழ் தோட்டமும், சருகுகளால் வேயப்பட்ட குடிசைகளைக் கொண்டது பாக்கம். பரதவர்களின் உழைப்பும், வாழ்க்கையும், கேளிக்கையும் பரதவர்களை ஒரு இனக்குழுவாக இயைந்து செயல்படத் தூண்டின. மீன் வேட்டையில் கிடைத்த உணவைப் பகிர்ந்து உண்பதும், இரவில் விளக்கொளியில் உறங்கியமையும் இவர்களை இனக்குழுப் பண்படையவர்களாக அடையாளப்படுத்துகின்றன. பரதவ மகளிர் உணவைக் காயவைத்தல், பாதுகாத்தல் போன்றத் தொழில்களில் ஈடுபட்டனர்.
உமணர்குடி
ஊர் ஊராகத் திரிந்து உப்பு வணிகம் செய்த ஒரே குடி உமணர்குடி. இக்குடியினரின் முழுநேரத்தொழில் உப்பு விற்றல், அதாவது உப்பளங்கழிகளில் பரதவர் உண்டாக்கிய உப்பை மொத்தமாக தங்கள் மாட்டு வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராக உப்புக்கு மாற்றாக நெல்லினைப் பெற்று வாழந்து வந்தனர். பரதவர்களிடம் உப்பு வாங்கிய உமணர்கள் அவ்வுப்பிற்குப் பதிலாக நெல்லினை அளந்து கொடுத்த பின்பே உப்பைப் பெற்று குழுவாகச் செயல்பட்டனர்.
“நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாருமில் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்ப” (புறம்.307:7-9)
எனும் பாடல் பருகுவதற்கு நீரும், உண்பதற்குப் புள்ளும் தராமல் இருந்த காரணத்தினால் உயிர் வாழாதக் காளைகள் உமணர்களின் பயணத்திற்குப் பயன்படாமல் இருந்ததைக் குறிக்கின்றது. காட்டுவழிகளில் கூட்டமாகச் சென்ற உமணர்கள், அங்கே புலி கொன்று தின்ற யானையின் இறைச்சியைச் சமைத்துண்டனர். சிறு கிணறு தோண்டி நீரினை எடுத்தது உண்டனர். சக்கரவண்டியினைக் கொண்டு தங்களது வியாபாரத்தை வளர்ச்சி பெறச்செய்தனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன.
“உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட
கழிமுரி குன்றத் தற்றே” (புறம்.313)
என்ற பாடலில் உப்பு வணிகர்கள் வண்டிகளில் உப்பை ஏற்றிக் கொண்டு செல்லும் காட்டுப் பகுதியானது, வளர்ந்துள்ள மூங்கில்கள் வேனில் வெம்மையால் முதிர்ந்து காணப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
மறுபங்கீடு செய்தல்
“ஆதிப்பொதுவுடைமை சமூகத்தில் இனக்குழுத் தலைவன் மறுபங்கீடு செய்யும் நிலையிலே விளங்கினான். மற்ற சமயங்களில் மக்களோடு மக்களாக வேட்டைக்குச் சென்று, உணவுப்பொருள் சேகரிப்பில் ஈடுபட்டான். இனக்குழுச் சமூகத்தை அடுத்த தரநிலை சமூக அமைப்பில்தான் மன்னனுக்கு சில தனித் தகுதிகளும், அடையாளங்களும் அளிக்கப்பட்டன. தொல்குடி மக்கள் காட்டுப் பகுதியில் கிடைக்கக்கூடிய பொருள்களையும், வேட்டையில் கிடைத்த விலங்குகளையும் தங்களுக்குச் சமமாகப் பங்கிட்டு வாழ்ந்து வந்தனர்” வீரநிலைக் காலங்களில் பங்கீடு செய்யக்கூடிய பொருள்கள் போரின் வழியே பெறப்பட்டது. பாணர், கூத்தர் முதலிய இரவலர்களுக்கு பரிசுப் பொருள்களை அளித்ததோடு மன்னர்கள் பாணர்களுக்கு ஊன்சோறும் மதுவையும் அளித்தனர் (புறம்.224) என்பதைப் புறப்பாடலடிகள் பறைசாற்றகின்றன.
முடிவுரை
தொல்சமூக இனக்குழுக்கள் வேட்டைத் தொழிலையே மேற்கொண்டனர். வேட்டையில் ஆநிரை கவர்தலில் கிடைத்த பொருளைப் பாதீடு செய்து கொண்டனர். குறிஞ்சி, பாலைநிலக் குடிகளை வேடர், எயினர் என அழைத்தனர். வேடர்கள் கள் குடித்தல், ஆநிரைக் கவர்தல், பசுக்கறி உண்ணுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். அவர்கள் குடிசையில் வாழ்ந்தனர். மலைநில விவசாயிகளை கானக்குறவர் குடி என அழைத்தனர். பயிரிடும் வழக்கம், கிழங்கு, தேன் எடுத்தல், பலா மரங்கள் வளர்த்தல் போன்றன இவர்கள் தொழிலாகும். சிறுகுடி இவர்களின் வாழிடமாகும். ஆடு, மாடுகள் வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களைத் தொழிலாகக் கொண்டவர்கள் கோவலர்கள். மீன்படி தொழிலை செய்யும். இனக்குழுவாக பரதவர் இனக்குழு இருந்தது. உப்பு விளைவிக்கக் கூடியவர் உமணர். மனித இனத்தின் பண்பாடு அதன் நடை, உடை, மொழி, கலைகள், குறிக்கோள், அரசியல் கொள்கை, சமயச் சிந்தனை, பெண்கள் நிலை, கல்வி அறிவியல் போன்றவற்றை இனக்குழு நிலையிலிருந்து இக்கட்டுரை விளக்குகின்றது.
பயன்பட்ட துணை நூல்கள்
1. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல்
2. சிலம்பு. நா. செல்வராசு, தொல்காப்பியர் கால மணமுறைகள்
3. ராஜ்கௌதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூகஉருவாக்கமும்
4. வெ.பெருமாள்சாமி, தமிழகத்தில் அரசுகளின் தோற்றம்
(குறிப்பு: துணை நூல் பட்டியலுக்கான நூல்களைப் பட்டியலிடும் போது நூலின் பெயர், நூலாசிரியர்(கள்), வெளியீட்டாளர் (பதிப்பகம், ஊர்), பதிப்பித்த ஆண்டு, பதிப்பு ஆகியவற்றை வரிசையாகக் குறிப்பிடுவது கட்டுரைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் - ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்)
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.