Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

புரட்சிச் சிந்தனையாளர் திருவள்ளுவர் ஒரு சமூகவியல் நோக்கு

வாசுகி நடேசன்
மேனாள் ஆசிரியர்,
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்.
(தற்போது வசிப்பு: இத்தாலி)


புரட்சி: சொல் விளக்கம்

புரட்சி என்ற சொல் புரட்டுதல் என்ற தொழிற் பெயரடியாகப் பிறந்ததாகும். புரட்டுதல் என்ற சொல்லுக்கு திருப்புதல் ,மாறுபாடு பண்ணுதல் என்ற பொருள்களைக் கழகத்தமிழகராதி தருகிறது. புரட்சி என்ற சொல்லுக்கு அதே அகராதி கீழ் மேலாய் வருதல், திரும்புதல் என்ற பொருள்களைத் தருகிறது. Revolutio என்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் மொழி மூலச் சொல்லில் இருந்து வந்ததாகும். இது திருப்பம் என்ற பொருளில் வழங்குகிறது. ஆக புரட்சிச் சிந்தனை என்னும் போது முன் இருந்த சிந்தனை மரபில் இருந்து மாறுபட்ட, திருப்பத்தினை ஏற்படுத்திய சிந்தனை வெளிப்பாடு எனலாம். எந்தச் சிந்தனையும் வெறுமையில் இருந்து உருவாவதில்லை. ஒரு சமூகத்தின் இயங்கு போக்கின் அடியாகவேப் பிறக்கிறது.

திருவள்ளுவரும் முன் உள்ள சிந்தனையில் இருந்து எவ்வாறு வேறுபட்டுச் சிந்திதார்? அவ்வாறு மாறுபட்ட சிந்தனை உருவாவதற்கான சமுக அரசியல் சமய சூழல் எது...?.அவருடைய அச்சிந்தனையின் தேவை இன்றுவரை நிலவுவதற்கு, அது எவ்வளவுக்கு தீர்க்கமாக இருந்தது என்பன பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பிறப்பு, குடும்பம், குடி, குலம்

திருக்குறள் கிறிஸ்துவுக்கு முதல் நூற்றாண்டு தோன்றியதாக் கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களான மேற்கணக்கு நூல்களின் தோற்றத்துக்குப் பிந்தியதாகவும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காவியங்களுக்கு முன்னதாகவும் தோன்றியதாக உறுதி கொள்ளலாம்.

இவ்வகையில் சங்ககாலச் சமூகமே திருவள்ளுவரின் குறள் தோன்றுவதற்கான முக்கியக் களமாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. சங்க காலம் நிலைமாறு காலம் எனக் கருதப்படுகிறது. இனக்குழுக்களாக இருந்த சமூகம் அந்தநிலையில் இருந்து விடுபட்டு சிற்றரசுகளாகவும் பேரரசுகளாகவும் மாறிய காலம் இது. தமிழ்நாட்டினை மலைப் பகுதிகளிலும் காடுகள் அடர்ந்த பகுதிகளிலும் பொதுவுடைமைக் கூறுகள் காணப்பட மருத நிலத்திலும் நெய்தல் நிலத்திலும் தனியுடைமை மேலோங்கிக் காணப்பட்டது.

பிறப்பு, குடுபம், குடி, குலம் என விரியும் சமூக அமைப்பில் குடும்பம் என்ற நிறுவனத்தைப் பேணுவதில் வள்ளுவர் முனைந்து செயற்பட்டதைக் காணலாம்.


அவ்வாறு குடும்ப அமைப்பைப் பேணுவதற்கான காரணங்கள் நோக்கத்தக்கது. "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்குத் தகுதி பெற்றுள்ளது.” (மனித உரிமைகள் பற்றிய உலக பிரகடனம், உறுப்புரை 16 (3))

இத்தகைய குடும்ப அமைப்பு மிக நாகரிக நிலையை எட்டிய சங்ககாலத்தில் ஏற்பட்டுவிட்டது. மருத நிலத்தைப் பொறுத்தவரை, குழந்தைகனளப் பெற்று வளர்ப்பதற்கான ஒரு ஏற்பாடாக மட்டும் அன்றி சொத்துக்கள் தன் இரத்தத்தில் உதித்த பிள்னளகளுக்குச் சேர வேண்டும் என்பதற்காகவும் இக்குடும்ப அமைப்பு பேணப்படலாயிற்று. மருத நிலத்தில் கிடைத்த உபரிவருவாய், ஓய்வு நேரம் என்பன பரத்தமை ஒழுக்கத்துக்கு வித்திட்டது. இங்கு சமூக முரண்பாடு மிகுதியாய் மேற்கிளம்புகிறது. செல்வம் நிலவுடமையாளரிடம் குவிகிறது. அவன் உற்பத்தியில் ஈடுபட்டது போக, அவனுக்காக உழவில் ஈடுபடும் ஒரு கூட்டம் உருவாகுகிறது. இதனால் மருத நிலத்தலைவனால், காலையில் தனது தேரை எடுத்துக் கொண்டு பரத்தையிடம் செல்ல முடிந்தது (குறுந்45). தலைவி கற்பைப் பேணுகிறாள். ஆனால் , தலைவனுக்கோ பரத்தமை ஒழுக்கமாகக் கருதப்பட்டு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த முரண் நிலை அதிகக் காலம் நீடிக்க முடியாது. சமூகத்தினால் (தலைவன் போன்றவர்களால்) பரத்தையராக ஆக்கப்பட்டவர்களுக்காக தலைவன் தனது செல்வத்தை அதிகம் செலவிட்டான். அல்லாமலும் பரத்தமை ஒழுக்கம் குடும்ப உறவிலும் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. குடும்பம் என்ற அமைப்பும் சொத்துடைமையும் பாதிப்புக்கு உள்ளாகிய போது சமூகம் தவிர்க்க முடியாதவாறு விழித்துக்கொள்கிறது. இந்தச் சமூகப் பிரச்சினையை வள்ளுவர் மிக நிதானமாக அணுகுகிறார்.

பிறப்பு மனிதனை உலகுக்குக்கொண்டுவருகிறது. பிறப்பு எல்லா மனிதருக்கும் ஒரே தன்மையதே (குறள்972), இது பற்றி பின்பு சற்று விரிவாக நோக்கப்படும்.

குடும்பம் என வள்ளுவர் குறிப்பது, தனிக் குடும்ப அமைப்பையே ஆகும். .குறிப்பாக, ஒரு துணைமணக் குடும்பம் (Monogamian Family) என்ற அமைப்பினையே விரும்புகிறார்.

கணவன், மனைவி பிள்னளகள் ஆகியோரை உள்ளடக்கியதே இல்லறம்ஆகும். அந்தத் தனி அலகோடு தந்தை, தாய் சிறிய தந்தை முதலான இரத்தத் தொடர்புடைய உறவினரை உள்ளடக்கிய குழுவைக் குடி என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வள்ளுவர். இரத்த உறவு அல்லாத உறவினர்களை உள்ளடக்கியது குலம் ஆகலாம்.

“குலம் என்பது உறவுமுறையாலும், வம்சாவழியாலும் இனணக்கபட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும். பொதுவாக, குலம் ஓரளவு பெரியது. குலமொன்றின் உறுப்பினர்கள், பல தலைமுறைகளுக்கு முற்பட்ட ஒரு பொது முன்னோனைக் கொண்டிருப்பார்கள் (உ.ம்: ஒரு பூட்டனையோ, கொள்ளுப்பூட்டனையோ அல்லது இன்னும் முற்பட்ட ஒரு முன்னோனையோ பொதுவாகக் கொண்டிருக்கலாம்). இன்றும் குல தெய்வம், குலமகள், குலக்கொழுந்து என்ற தொடர்கள் இக்கருத்திலேயே வழங்குகின்றன.


குடியும் உழைப்பும்

குடியை உயர்த்துவது ஒருவனது முக்கியக் கடமையாகும். குடியின் அக அலகாகக் குடும்பம் விளங்குகிறது. இதனை,

“இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு” (குறள்1029)

என்ற குறள் குடிசெயல் வகை என்ற அதிகாரத்தில் அமைவது கொண்டு உறுதி செய்யலாம்.

“ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி” (குறள்1022)

போர்க்களத்தில் அஞ்சாமை பொருந்திய வீரனிடம் போரைத் தாங்கும் பொறுப்பு செல்லுவது போல குடியிலும் அதனைத் தாங்குபவனது மேலேயே பொறுப்பு உள்ளது . (குறள் 1027)

“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்” (குறள் 1028)

மனிதர் யாவரும் தாம் பிறந்த குடும்பத்தின் அல்லது குடியின் உயர்வை நோக்குபவராயின் சோர்வு இருத்தல் கூடாது என்பது இக்குறளால் வலியுருத்தப்படுகிறது. எனவே, உயர்குடியில் பிறத்தல் என்பது வள்ளுவரைப் பொருத்தவரை நல்ல குடும்பத்தில் பிறத்தல் என்ற பொருளைத் தருகிறதேயன்றி (குடிபிறந்து (குறள் 502) சாதியால் உயர்ந்த குடியில் பிறத்தல் என்ற பொருளைத் தரவில்லை.)

குடியை உயர்த்துபவர் வாழ்வுக்கு அடிப்படையான பொருளைத் தேடுவது இன்றியமையாததாகும். அவ்வாறு அவர் முயற்சிக்காவிட்டால் வறுமை அவரையும் அவர் குடியையும் வாட்டும்.

உற்பத்தி குறிப்பாக வேளாண்மை உற்பத்தி சமூகத்துக்கு இன்றியமையாதது. உற்பத்தியில் ஈடுபடாத சமூகம் முடங்கிவிடும். பொருட்பாலில் குடியியலில் உழவின் இன்றியமையாமையை வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்” ( குறள்1033)

நிலவுடமையாளனே உழவில் ஈடுபட வேண்டும் என்பதைப் பின்வரும் குறள்கள் எடுத்துக்காட்டும்.

“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்” (குறள்1039)

“இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்” (குறள்1040)

உழவு மட்டுமன்றி ஏனைய தொழில்களாலும் பொருள் உற்பத்தி செய்வது இன்றியமையாததாகும்.

“அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்” (குறள்754)

இவ்வாறு பொருளைத் தேடி, குடியை உயர்த்துபவன் தன்னிடன் உள்ள பொருளைப் பகுகுத்துண்ணுதல் இன்றியமையாததாகும். இதனை இல்லறவியல் எடுத்துக்காட்டும். இல்வாழ்வான் என்பான் சமுகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ளவருக்கும் உதவுபவனாக இருத்தல் வேண்டும். அவ்வாறு உதவுவது அவன் கடமையுங்கூட. இல்வாழ்வான், கல்வியை கற்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இளையவர், உறவினரால் துறக்கப்பட்ட அனாதைகள், துறவிகள், ஏழைகள், உறவினர், விருந்தினர் முதலானவருக்கும் உதவி செய்ய வேண்டியவனாகிறான். (குறள் 41, 42, 43, 44)

உழைப்பே மனிதனுக்குச் சிறப்பானது. அவ்வாறு எந்தக் காரணத்தாலோ உழைக்க முடியாது போய் பிறரிடம் இரந்து வாழ்வதாகிய நிலை ஒரு மனிதனுக்கு வருதல் கூடாது.

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்” (குறள்1062)

இந்தக்குறளின் எதிரொலியாகவே, பாரதியின் தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த செகத்தினை அழித்திடுவோம்” என்ற குரல் அமைகிறது. எல்லாரும் எல்லாம் பெற வேண்டும் என் ற உயரிய எண்ணம் கொண்டவர் வள்ளுவர் என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.

ஆனால், அவர் ஆசைக்கு மாறானதாகவே எதார்த்தம் இருக்கிறது. வறுமை சமூகத்தில் இருந்து லொண்டே இருக்கிறது.

“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது” (குறள்1049)

அத்தகைய வறுமையை நீக்குவது, பொருள் தேடி வாழும் இல்லறத்தானின் கனடமையாகும்.

”வறியார்க்கு ஒன்று ஈவதேஈகை மற்றுஎல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்த” (குறள் 221)

ஒருவனது பசியைத் தீர்ப்பதே பொருள் சேமித்து வைக்கும் கருவூலமாகும்.

“அற்றார்அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி” (குறள்226)

“தான்ஆற்றித்தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
தாளாண்மை செய்தற் பொருட்டு”

ஆக, முக்கோணவடிவில் வள்ளுவரின் பொருளியல் பற்றிய சிந்தனை அமைந்திருக்கக் காணலாம் .

1. உழைப்பால் குடியை உயர்த்தி இல்லறத்தில் ஈடுபடவேண்டும்.

2. சமூகத்தில் எவருக்கும் பிறரிடம் இரந்து வாழும் நிலை ஒருபோதும் வருதல் கூடாது.

3. வறுமையல்லாத வாழ்வு இலட்சியமாகவே இருந்து வருகிறது. வறுமையை பகுத்து வழங்குவதன் மூலம்(ஈதல்) நீக்கி சமநிலையினை ஏற்படுத்த வேண்டியது சமூகத்தின் கடமையாகும். உழைப்பே விலங்கிலிருந்து மனிதனைப் பிரிக்கிறது என்பர் கால் மார்க்ஸ். வள்ளுவரும் உழைப்பின் அவசியம் பற்றி நன்கு வற்புறுத்திக் கூறியதைக் கண்டோம்.

4. கற்பு பற்றிய கருத்தியல்.


குடும்ப உறவில் பெண்ணுக்குக் கற்பு மிகுதியும் வற்புறுத்தப்பட்டு, அவள் அதில் செரிதும் வழுவாது வாழ்வது சமூகத்தில் இயல்பானதாகவே மாறியிருந்தது. வள்ளுவரும்;

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்” (குறள் 54)

என்று பெண்களின் கற்ப்பினை வற்புறுத்துகிறார். அதே சமயம் ஆணுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்.

ஒழுக்கம் என்ற நடத்தை ஆண்-பெண் உறவு சார்ந்ததாகவே பெரிதும் பேசப்படுவது வழக்கம். இதனைப் பின்வரும் பரிமேலழகர் கூற்றாலும் அறியலாம்.

அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுனடய இல்லாளை விரும்பாமை. இஃது ஒழுக்கம் உடையார்மாட்டு நிகழ்வதாகலின் ஒழுக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது”

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்” (குறள்131)

எனவே உயிரினும் மேலான ஒழுக்கத்தினைப் பேணுபவன் தன் மனைவி தவிர்ந்த வேறு பெண்களுடன் உறவு கொள்ள மாட்டான் என்பது உறுதி. இனிப் பிறருடைய மனைவியை விரும்புதல் ஆணுக்கு எவ்வகையிலும் பொருந்தாது என்பதை பிறன் இல் வினழயாமை என் ற அதிகாரத்தில் விரிவாக எடுத்துரைக்கிறார்.

“பகை பாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல் இறபான் கண்” (குறள் 146)

பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு தீமைகளும் பிறன் மனைவியை விரும்புபவனிடமிருந்து என்றும் நீங்கா எனக் கூறிய வள்ளுவர்; “பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோருக்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு” (குறள்148)

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ஆன்றோருக்கு அது பெரிய ஆண்மை மட்டுமன்றி சிறந்த ஒழுக்கமுமாகும் எனக்குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது. பிறன் மனைவியை மட்டுமன்றி வரைவில் மகளிரான பரத்தையரையும் ஒழுக்கமுடையார் சேரார்.

“ நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணபவர் தோள்” ( குறள் 917)

நெஞ்சில் பிற பொருள்களைப் பேணிப் புணருகின்ற பொதுமகளிரின் தோளை, நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதவர் பொருந்துவர். இக்குறளில் நிறை என்ற பண்பை ஆணுக்குரியதாக வள்ளுவர் எடுத்துரைத்து நோக்கத்தக்கது.

“சிறை காக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை” (குறள்57)

என்ற குறளில் நிறை என்ற சொல்லுக்கு பரிமேலழகர்” ஞ்சைக்கற்பு நெறியில் நிறுவுதல்” எனக் குறிப்பிடுகிறார். இதனால், வள்ளுவர் ஆண்களுக்கும் கற்பை வலியுருத்தியமை தெளிவாகிறது.

“கற்பு நிலையென்று சொல்ல வந்தார்இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” (பெண்கள் விடுதலைக்கும்மி)

என்ற பாரதி கூற்றும் வள்ளுவரின் சிந்தனையை ஒட்டியே பிறந்தது ஆகும்.


இல்லறம்

ஒருத்தனுக்கு ஒருத்தி என இல்லற நெறியை ஒழுங்குபடுத்தும் வள்ளுவர், இல்லற நெறியையேச் சிறந்தது எனவும் எடுத்துரைக்க காரணம் எது? என்பதும் இவ்விடத்தில் சிந்திக்கத்தக்கது.

வள்ளுவர் காலத்தில் சமண பௌத்த மதங்கள் இயல்பான வாழ்க்கையைப் புறக்கணித்துத் துறவறத்தைப் பெரிதும் வற்புறுத்தின. இக்கொள்கையில் இருந்து வள்ளுவர் சிந்தனை மாறுபட்டதாகவே உள்ளது.

வாழ்க்கையை உந்தக்கூடிய சக்தி இயல்பான இல்வாழ்க்கையிலேயே உண்டு என்பது அவர் முடிவு. மேலும் இல்வாழ்க்கையில் இருப்பவனுக்கேச் சமூகக் கடமையும் அதிகமாக உள்ளது.

“இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்வான் என்பான்
முயல்வாரில் எல்லாம் தலை” (குறள்47)

இயல்பினால் என்பதற்கு இயற்கைவழி வாழ்பவன் எனக் கொள்ள இடமிருக்கிறது. மேலும் துறவு எல்லாருக்கும் கைகூடத்தக்க இயல்பு கொண்டதல்ல.

“இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்” (குறள்270)

தவத்தினர் சிலராயும் தவம் செய்யாதவர் பலராயும் விளங்கக் காரணம் தம்முடைய புலன்கனள அடக்கி ஆளும் ஆற்றல் சிலருக்கும் அவ்வாறில்லாமை பலருக்கும் இருக்கின்றமையே ஆகும். புலங்கலை அடக்கத் தேவையற்று அதன் இயல்புக்கே வாழும் வாழ்க்கை இல்லறத்திலேயேஸ் சாத்தியமாகும்,

“அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று” (குறள்49)

எனவே உண்மையான அறம் இல்லறமே. மனித இயல்பினின்றும் மாறுபடுவதால் துறவறத்தை மேற்கொள்ளுவது கடினமாகும். சரிவரத் துறவறத்தை மேற்கொள்ளாவிட்டால் பழிப்புக்கு உள்ளாக நேரிடும்.

“வையத்து வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள்50)

தெய்வநிலையை இல்லற வாழ்வில் இருந்துகொண்டே அனடயலாம்.

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடல் ” (குறள்280)

உலகம் பழித்த செயல்கனள நீக்கிவிட்டால் துறவறம் வேண்டாததாய் ஆகிவிடுகிறது. நீத்தார் பெருமையில் உண்மையில் துறவியானவர்களின் சிறப்பைக்கூறிய வள்ளுவர் துறவறத்தில் துறவுக்காக முயலுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறங்கள் பற்றியே குறிப்பிடுகிறார்.

சங்ககாலச் சமூகத்தில் சமூக ஏற்றத்தாழ்வுகள்

ஒரு சமூகம் இயங்க வேண்டுமாயின் அதில் பல்வேறு தொழில் முனைவோர் இருப்பர் என்பதில் ஐயமில்லை. சங்க நூல்களில் ஒன்றான புறநானூற்றில் வரும் தொழிற் பிரிவினரை இங்கு நோக்கலாம். “அந்தணர் ,அரசர், அளவர், இடையர், இயவர், உப்பு வாணிகர், உழவர், எயிற்றியர், கடம்பர், கடைசியர், கம்மியர், களமர், கிணையர், கிணைமகள், குயவர், குறத்தியர், குறவர், குறும்பர், கூத்தர்,கொல்லர், கோசர், தச்சர், தேர்ப்பாகர், சூடியர், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு,பொதுவிலை மகளிர், பொருநர், மடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யவனர், யாழ்ப்புலவர், யானைப்பாகர், யானைவேட்டுவர்,வடவடுகர், வண்ணாத்தி, வணிகர், வலைஞர், விலைப்பெண்டிர்,வேடர்” (ஊ வே .சா , “ஆய்வுரை” -புற நானூறு.பக் 73)

மேற்கூறியவர்களிடையே பொருளாதார வேறுபாடுகளால் வர்க்க முரண்பாடு இருந்ததன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனாலும், இந்த ஏற்றத்தாழ்வு பொதுவுடைமை வாழ்வியலில் தொடர்ந்திருந்த சமுகங்களில் ஆரம்பத்தில் மிகக் குறைவாகவே இருந்தது . இதனை பின்வரும் பாடலால் உணரலாம்.

“துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” ( புறம் 335)

நெல்பரவி வழிபடும் கடவுள் அல்லாத இறந்த வீரனைக் கல் வைத்து வழிபடும் பழங்குடியினரிடம் துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகியோர் மதிப்புக்குரிய குடிகளாக உள்ளனர். ஆனால், பிற்காலத்தில் துடியன் சமூக பொருளாதார வீழ்ச்சியால் புலையன் எனவும் இழிபிறப்பாளனாகவும் மாறிப்போகிறான்.

“இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப
வலிதுறந்து இலைக்கும் வன்கண் கடுந்துடி -( புறம் 170)

“துடி எறியும் புலைய
எறிகோள் கொள்ளும் இழிசின” (புறம் 287)

பிறருக்குக் குற்றேவல் செய்வதாகிய சலவைத் தொழிலில் ஈடுபட்டு சிறு வருவாயில் வாழும் நிலையினை அடைந்ததால் புலையனின் மனைவி புலத்தி என இழிக்கப்படுகிறாள்.

“வறன்இல் புலத்தி எல்லிற் றோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமோடு” (நற் 90 3-4)

குறிஞ்சி நிலத்தில் துடியன் வெறியாட்டின்போது உடுக்கை அடிப்பவன்.

“முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல” (புறம்259)

என்ற அடிகளால் துடியனின் மனைவி உருப்பெற்று ஆடுபவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். இவ்வாறு குறிஞ்சி நில வழிபாட்டில் பங்கு பெற்ற இவர்கள் ஏன் பொருளாதாரர நிலையில் தாழ்ந்து இழிசினராய் ஆகினர் என்பது சரியாகப் புலப்படவில்லை.

மேலும், சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்ற பாடல்களில் பெரும்பாலானவை தொகுத்தவர்களின் நோக்கத்தால், சமுகத்தில் ஏதோ ஒருவகையில் தலைமைப் பாடுடையவர்களை பாடு பொருளாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன . திணைதுறை வகுக்கும் போது தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்ககளைப் பயன்படுத்தியமையும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

“அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இல புறத்து என்மனார் புலவர்” (தொல் பொருள் அகத்திணை 25)

இதற்கு இளம்பூரணர் கூறும் விளக்கம் இலக்கண நூல்கள் எவ்வளவு தூரம் வர்க்க முரண்பாடுகளைப் போற்றின என்பதனைக் காட்டும்.

'புணர்தல் முதலான பொருள்' என்பது அதிகாரத்தான் வந்தது.'வினை செய்வார்' என்பதனால் அடியரல்லாதார் என்பது கொள்க .இவர் அகத்திணைக்கு உரியரல்லரோ வெனின், அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடையராகலானும். குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவராகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார் எனபதனானும், இவர் புறப்பொருட்குரியராயினர் என்க.

பிறருக்கு குற்றேவல் செய்கின்ற அடியவர்களும் பிறர் ஏவத் தொழில் செய்பவருக்கும் கைக்கிளை, பெருந்திணை என்னும் அன்பினைந்திணைக்குப் புறமான சமூகம் அங்கீகரிக்காத இழிந்த ஒழுக்கங்களின் தலைவர்களாக வரவே இடம் அளிக்கப்பட்டது.


பிராமணரின் கொள்கையும் அவர்கள் தமிழ் சமூகத்தில் உயர்ந்த இடத்தை பெறுவதற்கு எடுத்த முயற்சியும் இணைந்து தமிழ் சமூகத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தின. தொல்காப்பிய இலக்கண நூலில் மரபியலிலும் பார்ப்பனர் எல்லோரிலும் உயர்ந்தவராய்க் காட்டப்படுகின்றனர்.

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்
கீழோர்க் காகிய காலமும் உண்டே” (தொல் பொருள் கற்பியல் 142)

இதற்கு இளம்பூரணர் தரும் பொருள் வருமாறு;
“மேற் குலத்தாராகிய அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூன்று வருணத்தார்க்கும் புணர்த்த கரணம் கீழோராகிய வேளாண் மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு என்றவாறு”.பிராமணர் வருணப்பாகுபாட்டால் நிலஉடைமையாளரான வேளான் மாந்தர்கூட கீழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

“ஓதலும் தூதுமுயர்ந்தோர் மேன” (தொல் .பொருள்.மரபு- சூத் 26 )

“நூலே கரகம் முக்கோன் மணையே
ஆயுங்காலை அந்தணர்க் குரிய” ( தொல் பொருள் மரபு 615)

”அந்த ணர்க் குரியவு மரசர்க்
கொன்றிய வரு உம் பொருளுமா ருளவே” (தொல் பொருள் மரபு 617)

“வேளாண் மாந்தர்க்கு உழுதூ ணல்ல
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” (தொல் பொருள் மரபு 625)

“அன்னர் ஆயினும், இழிந்தோர்க்கு இல்லை” (தொல் பொருள் மரபு 629)

மேற்காட்டிய கட்டளைகள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்த எடுத்த முயற்சியே ஆகும்.

ஒரு சமூகத்தின் கல்வியறிவை முடக்கினால், அந்தச் சமூகத்தினைத் தமது போக்குக்கிணங்கக் கட்டமைத்துக் கோள்ளலாம் என்ற நோக்கும் இதனுள் ஒளிந்திருக்கக் காணலாம்.

இத்தகைய ஒரு சூழலிலேயேத் திருவள்ளுவரின்; “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யால்” ( குறள் 972)

என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

எல்லா மக்களும் பிறப்பால் ஒரேதன்மையினரே, அவர் செய்யும் தொழில்களுக்கு ஏற்ப வெவ்வேறு சிறப்புக்களைக் கொண்டு விளங்குகின்றனர்.

கல்வி அறியாமையைப் போக்கி உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவது. அது சமுகத்தின் ஒரு தொகுதியினருக்கு மட்டும் உரியதல்ல என்பதில் வள்ளுவர் மிக உறுதியாக உள்ளார்.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்னென்ப வாழும் உயிர்க்கு” (குறள்392)

என்றும்

“கண்ணுடையார் என்பார் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லாதவர்” (குறள்393)

“கற்றாரோடு ஏனை யவர்” ( குறள்410 எவ்வாறு உழைப்பு மனிதனை விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டியதோ அவ்வாறே கல்வியும் மனிதனை விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்” (குறள் 410 )

கார்ல் மார்க்ஸ் கல்வி பற்றி நேரடியாக கூறவில்லை. ஆனால், ஏங்கல்ஸ் 'The condition of the working class in England' என்ற நூலில் இங்கிலாந்தின் தொழில் வர்க்கத்தின் கல்வி நிலை பற்றிக் கருத்தில் கொள்கிறார். அதில் தொழிலாளர்களின் பிள்னளகளுக்குக் கற்பதற்கான சூழல் கொண்டமையவில்லை என்பதையும் முதலாளி வர்க்கம் படித்த தொழிலாளரை வேண்டவும் இல்லை என்பதனையும் எடுத்துக்காட்டுகிறார்.

மார்க்ஸ் காட்டும் வர்க்க சமூகத்திலும் பார்க்கப் பிறப்பாலும் தொழிலாலும் ஏற்றத்தாழ்வை விதிக்கும் இந்திய சமூகம் சற்றுவேறுபட்டது. ஒரு சமூகம் வினைத்திறன் காரணமாகவும், சுற்றுச்சூழல் அமைவு காரணமாகவும் ஒரு தொழிலை தொடர்ந்து செய்வது உலகச் சமூகங்களில் இயல்பாகவுள்ளது. அவ்வாறான சமூகங்கள் தமது தொழிலை விட்டு வேறுதொழிலுக்கு மாறுவதற்குத் தடையில்லை. ஆனால், தீண்டாமை என்ற கொடுமையை உள்ளடக்கிய இந்திய சாதிய சமூகங்களில் இது பெருபாலும் சாத்தியமில்லாமலே போன நூற்றாண்டு வரை இருந்து வந்தது. இந்தக் கட்டிறுக்கத்தைத் தொடர்ந்து பேணுவதற்கு சாதியமைப்பில் கீழ்மட்டத்தில் இருந்தவருக்குக் கல்வி வழங்காமை பெரிதும் உதவி வந்திருக்கிறது. இந்த அவலத்தைத் தீர்க்கமாக முன்பே அறிந்தமையாலேயே வள்ளுவர் எல்லாருக்கும் கல்வி என்பதனை அவ்வளவு தூரம் வற்புறுத்தினார் எனலாம்.


அரசியலும் பொருளியலும்

அரசு என்பது அரசு, குடிகள், நாடு என்ற முக்கோண வடிவில் இயங்குகிறது. நாடும் அதில் வாழும் குடிகளும் இன்றி அரசு என்ற அமைப்பு இருக்க முடியாது. அதேசமயம் சிறு குழுக்கள் என்ற நிலையில் இருந்து விலகி மக்கள் தொகையில் பெருகிய போது, மக்கள் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ள ஓர் நிர்வாக அமைப்பினை நாட வேண்டியிருந்தது. அந்த அமைப்பே அரசு. அந்த அரசின் ஒரு வடிவமே முடியரசாகும். அதில், அதியுயர் அதிகாரம் ஓரளவு முழுமையாகத் தனிப்பட்டவரான அரசரிடம் இருக்கும் ஒரு நிலையே தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தது.

“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகு” (புறம் 186)

என்ற பாடல் இதனை வெளிப்படுத்தும்.

பேறாறு பெருக்கெடுத்துப் பாயும் போது, தன் பாதையில் குறுக்கிட்ட அனைத்தையும் வேறுபாடு எதுவுமின்றி அடித்துச் செல்வது போல மூவேந்தர் உருவாகிய போது முன்பு உயர்வாகக் கருதிய அறங்கள் பலவும் அடித்துச் செல்லப்பட்டன. புது விழுமியங்கள் புதுவரவாய் மேலேக் கிளம்பின. அந்த அறங்கள் சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தினரை அடியொற்றியனவாகப் பெரும்பாலும் அமைந்தன. அதிகாரமும், பொருளும் மன்னர், வணிகர், நிலவுடைமையாளர் என சிலரிடம் குவிந்த நிலையில் அவர்கள் இட்டதேச் சட்டமானதில் வியப்பில்லை.

“சங்க இலக்கியத்தைக் கூர்ந்து நோக்கினால் அரசன் - அரசு, வணிகர் - வணிகம் ஆகிய மிகப்பெரிய ஆள்வினைகளைச் சுற்றியே பெரும்பாலான அறங்கள் சொல்லப்படுவதைக் காணலாம். வேட்டை, கைவினைத்தொழில்கள், விவசாயம், உடல் உழைப்பு, குற்றேவல் செயல்களைப் பற்றி உயர் அறங்கள் ஏதும் சொல்லப்படாததோடு, இவற்றோடு எதிர்மறையான அறங்கள் சார்த்தவும் பட்டன” (கே .பாலசுந்தரம், “ சங்க இலக்கியத்தில் அறங்கள்” பக்270) என்ற கூற்றும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருந்தும். மூவேந்தர்கள் தம்மைச் சமூகத்தில் உயர்நிலையில் நிறுவிக்கொள்ள வீரம், ஈகை, நீதி என உயர் பண்புகளைப் போற்றினர் என்பதும் புலவரால் பாடப்படுவதைப் பெருமையாகக் கருதினர் என்பதும் உண்மையே. அனைத்து மன்னர்களும் அனைத்து நிலைகளிலும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பதே எதார்த்தமாகவிருந்தது. சில அரசர்கள், குற்றத்துக்குத் தண்டனை வழங்குவதில் கூட சமநிலையைப் பேணவில்லை.

ஆற்றங்கரையில் இருந்த நன்னன் என்ற சிற்றரசன் தோட்டத்தில் அரிதில் வளர்த்த மா மரத்தின் காயொன்று அவ்வாற்றிலே வீழ்ந்து மிதந்து வர, அதனை ஆற்றிற்கு நீராடச் சென்ற பெண் ஒருத்தி எடுத்துத் சென்றாள். அது கண்ட காவலர் அவளை நன்னன் முன் கொண்டு நிறுத்த, அவன் அவளுக்குக் கொலைத்தண்டம் விதித்தான்;( குறுந் 292) அன்னியென்பவனின் பசு கோசரின் புன் செய் வயலில் புகுந்து, அங்கு பயிராயிருந்த பயிற்றினை உண்டு அழித்ததால் கோசர்அன்னியின் கண்களை இரக்கமின்றிப் பறித்தனர் (அகம்262)

மேற்கூறிய சம்பவங்கள் அரசரின் கொடுங்கோன்மையைக் காட்டுகின்றன. மேலும், அரசர் வரி விதித்து மக்களைக் கொடுமைப்படுத்தியமையைப் புறம் 184 ஆம் பாடலால் அறியலாம்.

சமூகச்சமநிலை இல்லாதிருந்தமை (குற்றேவல் செய்யும் மக்கள்) முன்னும் எடுத்துக்காட்டப்பட்டது. போரின் போது பகைவரின் நாட்டை தீக்கிரையாக்குவதும், பெண்களை அடிமையாக்குவதும் எனப் பல்வேறு கொடுமைகளை அரசர்கள் செய்தமையைச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். இவ்வாறான ஒரு சூழலில் முடியரசு என்ற நிர்வாக அமைப்பு, எவ்வாறு அமைய வேண்டுமென மிகத்தெளிவாக முன் வைக்கிறார் வள்ளுவர். சிறந்த சட்ட வல்லுநரதும் அரசியல்சாசன அமைப்பாளரதும் ஆளுமையை இவரது விபரிப்பில் நாம் காணலாம்.

மேற்காட்டிய படம் திருவள்ளுவர் கூறும் அரசியலின் அடிப்படையை எடுத்துக் காட்டுகிறது.

அரசியலமைப்பில் மன்னனின்றி மக்களே முதன்மையானவர்கள் என உணர்த்தி அரச நிர்வாக அமைப்பினை அற நிலைப்பட்டதாக ஆக்கும் முயற்சியாகவே வள்ளுவரின் பொருளியல் அமைகிறது.

இக்கட்டுரை வள்ளுவர் விளக்கும் அரசியலை முழுமையாக நோக்காது, அவர் குறிப்பிடும் சில சிறப்பு அம்சங்களை மட்டுமேச் சுட்டுகிறது. பொதுவாக, இனக்குழு நிலையில் இருந்து தலைமைத்துவம் பெற்று வளர்ந்தவனாகவே சங்ககால அரசன் விளங்குகின்றான். அரசுரிமை மரவுவழி மூத்தமகனுக்கேப் பெரும்பாலும் வழங்கி வந்தமையைச் சங்க இலக்கியங்கள் வாயிகலாக அறியமுடிகிறது. தொல்காப்பியம் அரசர் உயர்குடியில் இருந்து வரவேண்டும் என வற்புறுத்துகிறது. (தொல் மரபு(616, 617,618 ) வள்ளுவர் அரசன் இந்தச் சமூகத்தில் இருந்துதான் வர வேண்டும் என்று எந்த வரையறையையும் முன்வைக்கவில்லை. மரபு வழிபட்டு தொல்காப்பியம் அரசனின் புறத்தோற்றப்பாடுகளை விபரிக்கையில் (தொல் மரபு 616) அரசர்க்கு இருக்க வேண்டிய சிறப்பான பண்புகளையே வள்ளுவர் எடுத்துரைப்பர்.

அஞ்சாமை, அறிவு, ஈகை, ஊக்கம், சோர்வடையாமை, கல்வி, துணிவு, தருமத்திலிருந்து வழுவாமை, அதர்மத்தை நீக்குதல், வீரத்தில் குறைவுபடாத மானம் முதலிய பண்புகள் அரசருக்கு வேண்டுவனவாக விபரிக்கப்ப்படுகின்றன. அரசன் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டும்.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு” (குறள் 385)

வருவாயினை மென்மேலும் வளர்த்தலுக்கான செயல்களும் அச்செயல்களால் வந்தவற்றைச் சேர்த்தலும் பேணிக்காத்தலும் காத்தவற்றை வகைசெய்து செலவிடுவதும் உடையவனே அரசனாவான்.

“உறுசொருளும் உல்கு பொருளும் ஒன்னார்த்
தெறு பொருளும் வேந்தன் பொருள்” (குறள் 756)

உடையவர் இல்லாமையால் தானே வந்த பொருளும், சுங்கமாக வந்த பொருளும், பகைவரை வென்று அவரிடம் திறையாகப் பெறும் பொருளும் அரசனுக்குரிய பொருளாகும்.

“வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு” (குறள் 552)

என்ற குறளில் வரி என்ற பெயரில் அரசு மக்களை வருத்தக்கூடாது என்பது வலியுறுத்தப்படுகிறது.

“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலா
செல்வமும் சேர்வது நாடு” (குறள் 731)

“பெரும் பொருளால் பெட்டகத்தாகி அருங்கேட்டால்
ஆற்ற வினளவது நாடு” (குறள் 732)

“நாடுஎன்பது நாடா வளத்தது நாடுஅல்ல
நாட வளந்தரும் நாடு” (குறள்739)

மேற்கூறிய குறள்கள் ஒரு நாடு பொருளாதாரத்தால் சிறந்து விளங்க வேண்டும் என்பதை விரித்துரைக்கிறது.

அரசன் தனது மக்கள் யாவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும், எல்லாருக்கும் கல்வி வழங்குவதில் ஈடுபாடுடையவனாக இருக்க வேண்டும் என்றும், அவனது சட்டமும் நீதியும் எவருக்கும் சார்வாய் அமையாது நடுவு நிலையில் அமைய வேண்டும் என்றும் எல்லோரும் உரிமை பெற்று, பசி பிணியற்று பதுகாப்புடன் வாழ அரசன் வழி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துவதே அவரது பொருளியலின் சாரமாக அமைகிறது.


மேற்கூறிய இலட்சியத்தை அடையும் வகையில் அரசு நிர்வாகத்தைக் கட்டமைப்பதற்கான வழி வகைகளைத் திருக்குறள் மிகச்சிறப்பாக விபரிக்கிறது. அந்த நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர், தூதுவர், பெரியோர் ஒற்றர் படைக்காவலர் முதலியோருக்கான கடமைகள், சிறப்புக்கள் என்பன கூறப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தும் சட்டம், நீதி முறைகளால் அகச் சமூக ஒழுங்கை நிர்வகிக்கும் அதே வேளை பகை அரசர்களால் தம் குடிகள் பாதிப்புக்குள்ளாகாது காத்தலும் அரச கடமையாக வற்புறுத்தப்படுகிறது. அரசர் அறவழியில் நடக்காத பகை அரசர் மீதே போர் தொடுக்க வேண்டும் எனப் பகை மாட்சி என்ற அதிகாரத்தில் வலியுறுத்துவதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருந்தும்.

அரசனுக்குரிய கடமைகள் போல், குடிகளும் தமது குடியை உயர்த்த சோர்வின்றி முயற்சி செய்து, அவர்கள் தமது பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றும், அப்பொருள் நேர்வழியில் பெறப்படவேண்டும் என்றும் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

“அறம் ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்” (குறள் 754)

அவ்வாறு ஈட்டிய பொருளில் ஒரு தொகுதியைப் பல்வேறு காரணங்களால் வறுமை அடைந்தவர்களுக்கு உதவி அவர்களையும் கைதூக்கிவிட வேண்டும்.

பொருள் ஈட்டுவதில் வணிகருக்குப் பெரும் பங்கு உண்டு.

“வாணிகம் செய்வாருக்கு வாணிகம் பேணி
பிறவும் தமபோல் செயின்” (குறள் 120)

“பிறவும் தம்போல் செய்தலாவது கொள்வதுவும் மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல்” எனப் பரிமேலழகர் பொருள் உரைப்பர். நடுவுநிலையில் இக்குறள் அமைவதால் இக்கருத்து பொருந்துவதாகவே உள்ளது. உபரி உற்பத்தியைப் பரிவர்த்தனை செய்யும் வணிகர் கூட அறத்தின் பாற்பட்டே வணிகம் செய்ய வேண்டும் என வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

மேலும் கள் உண்ணுவதலாலும் வரைவில் மகளிர் வயிற் சேராமலும் சூதில் ஈடுபடாமலும் தமது தவறான உணவுப் பழக்கம் முதலியவற்றால் நோய்வாய்ப் படாமலும் தம்மையும் தம்குடியையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

கார்ல் மார்க்ஸ், வர்க்க பேதம் பொருளாதர ஏற்றத் தாழ்வினாலேயே ஏற்படுகிறது. பொருளாதாரச் சமத்துவம் ஏற்படுமானால் சமூக சமத்துவம் ஏற்படும் எனக் கருதினார்.

அனைத்தும் மக்களின் உடமையானதும் பொதுவுடமைச் சமூகம், "ஒவ்வொருவரின் திறனுக்கேற்ற வகையில் உழைப்பு பெறப்பட்டு ஒவ்வொருவருக்கும் அவரவர் தகைமைக்கு ஏற்ப பொதுச்சட்டம் பகிர்ந்து வழங்கப்படும்" என்ற கொள்கைப்படி செயல்படும். இது வருக்கங்களற்ற, தனினாட்டுப் பாங்கற்ற, ஒப்புயர்விலாத உலக மாந்தரின் சமூகமாக முன்னேறும் என மார்க்சு மொழிந்தார்.

வள்ளுவர் பொருளாதாரச் சமத்துவத்தை வெளிப்படையாகக் கூறவில்லை .

ஆனால், பொருளாதாரம் பற்றி அழுத்தமாகக் கூறியதுடன் சமூகத்தில் பொருளாதாரச் சமத்துவம் நிலவ வேண்டும் என்பதையும் உணர்ந்திருந்தார். அவர் வாழ்ந்த சூழலிற்கேற்ப, ஈகை மூலமாவது அச்சமநிலையை அடைய வேண்டும் எனக் கருதினார். அன்றியும் சாதி, சமய, மொழி வேறுபாடுகனளக் கடந்த உன்னதச் சமுதாயத்தைக் கனவு கண்டார். இதனால்தான் அவர் தம்மை எந்த சமயத்தவராகவும் அடையாளம் காட்டவில்லை. தமிழ் என்ற சொல்லைக் கூட எவ்விடத்திலும் பயன்படுத்தவில்லை.

1330 குறட்பாக்களுக்குள் எத்தனையோ சிந்தனைகனள உள்ளடக்கியது மட்டுமன்றி, அச்சிந்தனைகளைக் காலம் வென்று வாழவும் வைத்த வள்ளுவரின் அசுரச் சாதனையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

துணைநூல்கள்

1. கழகத்தமிழ் அகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1985

2. புற நாநூறு, சாமிநாதையர் உ.வே பதிப்பித்தது

3. பாரதியார் கவிதைகள், சுப்பிரமணிய பாரதி

4. திருக்குறள் பரிமேலழகர் உரை, பூம்புகார் பிரசுரம் சென்னை 1983

5. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணம்

6. “ சங்க இலக்கியத்தில் அறங்கள்” ஆய்வேடு கே பாலசுந்தரம்,

7. மருதத்திணை, வாசுகி. சொக்கலிங்கம், ஸ்ரீசுப்பிரமணியம் புத்தகசாலை, 2003

8. கலைஞானம், வாசுகி .சொக்கலிங்கம், கல்விக் கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் 1999 / 2000

9. The Constitutional Monarchy Association in the U.K "முடியாட்சி". பிரித்தானியக் கலைக்களஞ்சியம் (11th). (1911).

10. Family, Karalmarx - Wikipedia (English) Pages.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/community/p24.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License