புதுக்கவிதைகளில் அறிவியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகள்
முனைவர் மா. சியாமளாதேசி
முன்னுரை
அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானத்தைப் பற்றி மட்டும் குறிப்பதன்று. அது வாழ்க்கையை வளப்படுத்த, மனிதன் மேற்கொள்ளும் முற்போக்குச் செயல்பாடுகளின் முன்னேற்றத்தையும் குறிப்பிடுகின்றது. சமுதாயம் என்பது மனித உறவுகளின் சிக்கலான அமைப்பாகும். தனி மனிதனையும் சமுதாயத்தையும் பற்றிப் படைக்கப்பட்ட சமூக நோக்குடைய படைப்புகளே காலத்தை வென்று நிலைத்து நிற்கும் ஆற்றல் உடையன. தற்கால இலக்கியங்களுள் புதுக்கவிதைகள் அறிவியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகளை எடுத்துரைப்பதில் சிறப்பிடம் பெறுகின்றன. அவற்றைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறிவியல் சிந்தனைகள்
“அறிவற்று வாழ்ந்த காலம்
அநாகரிக காலம்
இது இறந்த காலம்
அறிவோடு வாழும் காலம்
அரை நாகரிக காலம்
அது நிகழ்காலம்
இனி நிகழ் காலம் என்பது
அறிவியல் வழிவாழும் காலம்
அதுவே எதிர்காலம்”
என்ற கவிதை, அறிவியல் காலமே முழு நாகரிக காலம் என்று உணர்த்துகிறது.
‘விஞ்ஞானி’ எனும் கவிதையில் கடவுளின் படைப்பின் பழமையைக் கண்டு சலித்துப் பேசும் ஒரு விஞ்ஞானியைப் படைத்துள்ளார். ந.பிச்சமூர்த்தி, கடவுளின் படைப்பில் விளைந்த குறைபாடுகள் பலவும் விஞ்ஞானியாகிய தன்னால்தான் நீக்கப்பட்டன என்ற பெருமிதப் பேச்சைக் கவிதை புலப்படுத்துகின்றது.
“புல்லைச் செய்வார்
மேயவென்று மாட்டைச் செய்வார்
பொங்கும் நுரைப்
பாலைச் செய்வார்
ஊட்ட வென்று
கன்றைச் செய்வார்”
இவ்வாறு படைத்தவற்றையே மீண்டும், மீண்டும் படைக்கின்ற புளித்துப் போன படைப்புத்தான் கடவுளின் படைப்புக்கள் ஆனால் விஞ்ஞானிகளோ ஒன்றுக்குப் பதிலாக ஒன்றை, ஒன்றிலிருந்து ஒன்றை, கடவுளறியாத பல விந்தைப் பொருட்களை உருவாக்கும் திறமை பெற்றுள்ளனர்.
வாழும் உயிர்களோடு தண்ணீர்ருக்குள்ள தொடர்பைக் கூற வந்த கவிஞர் வைரமுத்து,
“வாழும் உயிர்களை வடிவமைத்தது 70 சதம் தண்ணீர் யானை 65 சதம் தண்ணீர் மனிதன்... உடம்பில் ஓடுவது 7.2 லிட்டர் உப்புத் தண்ணீர்” என்று தனது தண்ணீர் தேசம் நூலில் விஞ்ஞானத்தை கூறுகிறார்.
காலைப்பொழுதில் கதிரவனின் வருகையைச் ‘சூரிய விளக்கு’ எனும் தலைப்பில் கவிஞர் பொன்.செல்வகணபதி,
“ஒளிவலை பின்னும்
நெருப்புச் சிலந்தி
சுடர் விளைகின்ற
சூரிய நிலம்
சூடு ததும்பும்
சூரியப் பொய்கை
காலமுணர்த்தும்
கடிகாரப்பாட்டன்
பனித்துளி பருகும்
பகலவப் பறவை”
என்று எடுத்துரைக்கின்றார். ஒளியை வலையாகவும், சூரியனை நெருப்புச் சிலந்தியாகவும் உருவகித்துப் பல்வேறு விதமான சிந்தனைகளைத் தூண்டும் விதத்தில் கவிதை அமைந்துள்ளது.
அப்துல் ரகுமானின் புதுக்கவிதைத் தொகுதியான பால்வீதியில் மின்னல் என்ற இயற்கைக் காட்சிப் பொருள்,
“வான உற்சவத்தின்
வான வேடிக்கை
முகிற்புற்று கக்கும்
நெருப்புப் பாம்புகள்
கடுப்பு உதட்டின்
வெளிச்ச உளறல்
இடிச் சொற்பொழிவின்
சுருக்கெழுத்து”
என்று அடுக்கடுக்கான படிமங்களால் அமைந்துள்ளது.
சமுதாயச் சிந்தனைகள்
இருபதாம் நூற்றாண்டில் பலவிதமான மாற்றங்கள் சமுதாயத்தில் ஏற்பட்டாலும் சாதி என்ற உணர்வு மக்களிடையே ஆழமாக வேரூன்றிவிட்ட ஒன்று. அது மனிதனைக் கத்தரிக்கோலாகப் பிரிக்கின்றது.
இன்று வறுமையை விட சாதிக்கொடுமை பெரும் போராட்டங்களை விளைவிக்கின்றது. இதனைக் கவிஞர் மு.மேத்தா,
“சாதி என்பது
மெலிந்து காட்சி தரும்
ஊசியல்ல
தலையெல்லாம்
கனத்துக் கொழுத்த
கத்தரிக்கோல்”
என எடுத்துரைக்கின்றார்.
இன்றைய திருமணத்தின் மொத்த உருவமாக விளங்குவது வரதட்சணை. அதற்குக் காரணம் இன்றைய சமுதாயத்தில் மேலோங்கி விளங்குவது பணமும் போலி அந்தஸ்துமே. இதில் பலியாவது வறுமை நிலையிலிருக்கும் பெண்களே. வயதாகியும் திருமணமாகாது இருக்கும் பெண்களே முதிர் கண்ணிகள் என்கின்றனர். இச்சொல்லைப்
பெண்ணியவாதிகள் எதிர்க்கின்றனர். இவர்களின் நிலையை;
“கனல் பூக்கள் கண்ணீர்ப் புயல்கள்
கல்யாணச் சந்தையிலே
விலைபோகா வேதனைகள்
விதி வசத்தால் வீணைகளும்
விறகாகும் வேதனைகள்”
என்று வரதட்சணையால் திருமணமாகாது நிற்கும் பெண்களின் பிரச்சனைகளை தனது கவிதைகளில் எடுத்துரைக்கின்றான் கவிஞர் பாரதி கண்ணம்மா. ஏழை மக்கள் செய்கின்ற தொழிலோடு அவர்களின் மன வேதனையும் சேர்த்துத் தன் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் யுகபாரதி. பலூன் வியாபாரி என்கிற கவிதையில் இடைவிடாமல் இவன் ஊதி எடுத்து வரும் ரூபாயில்தான் பட்டினியாய்க் கிடக்கும் குடும்பம் அடுப்பூதத் தொடங்கும் என தன் மனவேதனையை,
“மாதக் கடைசியில்லை
மாதமெல்லாம் கடைசி என்று
ஊதிப் பெருக்குகிறான்
உள்ளிருக்கும் வேதனையை”
என்ற வரிகளில் எடுத்துரைக்கின்றார்.
சமுதாயத்தோடு நெருங்கிய உறவுடையது அரசியல். சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தோல்விக்கும் தலையாய காரணமாகிறது. அரசியல் வாதிகள் சுயநலமும் வஞ்சகமும் ஏமாற்று வித்தையும் நிறைந்தவர்கள். வாக்களிக்கும் வாக்காளர்களை அரசியல்வாதிகள் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதை,
“மலர்கள் கசங்கி
உதிர்ந்த பின்னர்
நார் மட்டும்
அடுத்த மாலை கட்ட
மீண்டும் தேவைப்பட்டது”
என்று வாக்காளர்களின் வாக்குகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை மீண்டும் மாலை கட்டும் நார்களாகவே பயன்படுத்துகின்றனர் என்று தன் கவிதை வரிகள் மூலம் சமுதாயச் சிந்தனையை வெளிப்படுத்துகின்றார் கவிஞர் இறையன்பு.
முடிவுரை
இலக்கியம் வாழ்வின் ஆக்கத்தை மட்டுமே செய்ய முடியும். ஆனால், அறிவியலுக்கு ஆக்கவும் தெரியும்; அழிக்கவும் தெரியும்; இன்றைய மனித வாழ்வுக்கு இலக்கியமும் அறிவியலும் தேவைப்படுகின்றன. புதுக்கவிதைகள் அழகுணர்ச்சியை மட்டும் எடுத்து வைக்காது. இன்றைய சமுதாயக் கட்டமைப்பை வெறிப்படுத்துவதோடு தனி மனித உணர்வுகளையும் செயல்பாடுகளையும் அவற்றின் நிறைகுறைகளையும் சுட்டிக் காட்டுகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.